Monday, December 26, 2011

நாட்டைத் துண்டாடும் அரசியல்வாதிகள்...! மௌனமாய் உடைப்படும் ஒற்றுமை...


"ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' இது பழமொழி. "ஊரு ரெண்டு பட்டா, அரசியல்வாதிக்கு ஆதாயம்' இது புதுமொழி. தொல்லை தரும் முல்லைப் பெரியாறு பிரச்னை, அரசியல்வாதிகள் பலரது வெறும் வாய்க்கு கிடைத்த அவல். "சந்துலே சிந்து பாடற மாதிரி' திராவிடர் கழகத்தினர் கோவிலையும் சாடுவதற்கு ஒரு வாய்ப்பு. 

தேனியில், வைகோ கூட்டத்தில் பேசிய கோவை ராமகிருஷ்ணன், "கேரள கோவில்களுக்குச் செல்வதை தவிர்த்து, தமிழக கோவில்களுக்குச் செல்லுங்கள். அரிசியைக் கூட சுமந்து சென்று, ஏன் கேரளாவுக்கு காணிக்கையாக்குகிறீர்கள்?' என்று கூறுகிறார். வேறு சிலர், பழனி மற்றும் மதுரை கோவில்களுக்குச் செல்லும் படி ஆலோசனை கூறுகின்றனர். 

அய்யப்ப சாமிக்கு ஊரு தோறும், தமிழகத்திலேயே கோவில் கட்டி கும்பிடச் சொல்கிறார் விஜயகாந்த். இவர்கள் கூறுவது, பிரச்னைக்குத் தீர்வாகத் தெரியவில்லை. புது பிரச்னைகளுக்கு வித்திடுவதாகவே தெரிகிறது. இரண்டு பேர் சண்டையிடும் போது, அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க முயற்சிப்பதை விடுத்து, மேலும் பல ஆயுதங்கள் கொடுத்து, "இன்னும் நல்லா அடிச்சிக்கங்கடா' என சொல்வது போலுள்ளது, இந்த அரசியல்வாதிகள் செயல். 

தமிழகத்திலுள்ளவன் பழனி, மதுரை கோவில்களுக்கும், ஆந்திராவிலுள்ளவன் திருப்பதிக்கும், கேரள மக்கள் சபரிமலை மற்றும் குருவாயூர் கோவிலுக்கும், மகாராஷ்டிர மக்கள் மகாலெட்சுமி கோவிலுக்கும், கர்நாடக அன்பர்கள் கொல்லூர், உடுப்பி கோவில்களுக்கும் மட்டும் செல்ல முடியும் என்ற நிலைமை வந்தால், இந்திய ஒருமைப்பாடு என்பது வெறும் கேலிக்கூத்தாகும். 

புண்ணியத் தலமான காசி வட மாநிலத்திலும், மற்றொரு புண்ணியத் தலமாம் ராமேஸ்வரம் தமிழகத்திலும் உள்ளன. காசி தரிசனம் முடித்து, ராமேஸ்வரம் சென்று வந்தால் தான், புனிதச் சுற்றுலா முடிவடைந்ததாய் பொருள். அப்படியிருக்க, மாநிலங்களை தொகுதிப் பங்கீடு செய்து கொண்டால், ஆன்மிக அன்பர்களின் நிலை என்னவாகும்? 

காசிக்குப் போகக் கூட விசா, பாஸ்போர்ட் தேவைப்படும் படியல்லவோ நிலைமை மாறிவிடும். இது தேவையா? கோவில், சாமி, பக்தர்கள், புனிதப் பயணம், காணிக்கை, விரதம் ஆகியவற்றை, அரசியல்வாதிகள் பகடைக் காயாய் மாற்ற வேண்டாம்.

4 comments:

  1. இவர்கள் அரசியல் வியாதிகள்..

    ReplyDelete
  2. unga kavalai ungalukku .....avanga kavalai avungalukku............

    ReplyDelete
  3. இவங்கள்லாம் யோசிச்சு பேசினாலதான் நமக்கு பிரச்சனை இல்லாமல் போய்டுமே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...