Friday, January 11, 2019

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என்ற குழப்பம் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அதிகம் வரும். இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. 

தமிழ் சினிமா இயக்குனர்கள் மதுரையையும் விடமாட்டார்கள், மும்பையையும் விடமாட்டார்கள். இன்னும் எத்தனை படத்தில் தான் மும்பை பின்னணி கதையைப் பார்ப்பதோ தெரியவில்லை. இந்தப் படத்தின் முதல் பாதி தேனி மாவட்டப் பின்னணியிலும், இரண்டாம் பாதி மும்பை பின்னணியிலும் நகர்கிறது.

ஒரு அப்பா சென்டிமென்ட் கதைக்கு அழகாக ஆக்ஷன் முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த சென்டிமென்ட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது, ஆக்ஷனும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 


கதையை ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். மனைவியையும் மகளையும் பிரிந்த ஒருவர் மீண்டும் அவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை.

தூக்குதுரை (அஜித்) என்றாலே சுற்றியுள்ள 12 ஊர்களும் அதிரும். அப்படி, அடிதடி, பஞ்சாயத்து, சண்டை என ரத்த சொந்தங்களுடன் இருப்பவர் தூக்குதுரை. அவரின் ஊரான கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ முகாம் அமைத்து உதவி செய்ய மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). வந்த இடத்தில் தூக்குதுரைக்கும், அவருக்கும் காதல் மலர்கிறது. அது திருமணத்தில் முடிந்து, குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் தூக்குதுரை கத்தியைத் தூக்குவது நிரஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கோபத்துடன் தூக்குதுரையை விட்டுப் பிரிந்து மகளுடன் மும்பை செல்கிறார். 

ஊர் திருவிழாவுக்காக பெரியவர்கள் வற்புறுத்தலால் தூக்குதுரை மனைவியை அழைக்க மும்பை செல்கிறார். அங்கு அவருடைய மகளை யாரோ கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, மனைவியுடனும், மகளுடனும் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.



தொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடிப்பதன் காரணம் தெரியவில்லை. இந்தப் படத்தில் கிடா மீசை, தாடி என முகம் முழுவதும் முடியாக இருக்கிறது. அதையும் மீறி சென்டிமென்ட் காட்சிகளில் அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. இடைவேளை வரை கலகலப்பாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பாசமான அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அவருக்கான பில்ட்-அப் காட்சிகளையும், ரசிகர்கள் கைதட்டும் விதத்தில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா. படம் முழுக்க முறுக்கு மீசை, மதுரை பேச்சு, வேஷ்டி என அதகளம் செய்கிறார் அஜித்.

மும்பையிலிருந்து தேனியில் உள்ள சிறிய கிராமத்திற்கு நயன்தாரா வருகிறார். அஜித் படிக்காதவராக இருந்தாலும் அவரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இருவரது காதலையும் அன்னியோன்யமாகக் காட்டிவிட்டு திடீரென நயன்தாரா பிரிந்து போவது ஒட்ட மறுக்கிறது. அஜித் மனைவியானதும், டாக்டருக்குப் படித்த நயன்தாராவை, இரண்டு மூக்குத்திகளுடனும், புடவையுடனும் கிராமத்துப் பெண்ணாக மாற்றியிருப்பதும் சினிமாத்தனமானது. பிறகு மல்டி மில்லியனர் பெண் தொழிலதிபராக மாறுகிறார். இளம் பெண், மனைவி, அம்மா என மூன்று பரிமாணங்களிலும் நயன்தாரா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.

அஜித்தின் வலது, இடது கரங்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா. அஜித் பற்றிய பில்ட்-அப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஜெகபதி பாபு, மல்டி மில்லியன் தொழிலதிபர், அவர்தான் வில்லன். ஆனாலும், மகளுக்காகத்தான் வில்லனாக மாறுகிறார். 





ரோபோ சங்கர் கொஞ்சமே வந்து சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். இடைவேளைக்குப் பின் விவேக் வருகிறார், சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலை ஏற்படுத்துகிறார். அஜித்தின் மகளாக பேபி அனிகா, அவ்வளவு அழகு, பொருத்தமான நடிப்பு.
இமான் இசையில், கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒன்று மெலோடிக்கு, மற்றொன்று ஆட்டத்திற்கு. படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதிரடி அதிகம். 

தேவையற்ற காட்சிகளை வைத்து படத்தை இழுக்கவில்லை. மனைவி நயன்தாரா வீட்டிலேயே அஜித் வேலைக்காரர் போல சேருவது கொஞ்சம் ஓவர் பாஸ். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நாமே யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ்.

கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஸ்வாசம் படம் எடுக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. விவேகத்தில் ஏமாந்த ரசிகர்களுக்கு நிச்சயம் விஸ்வாசம் மாஸ் தான். 


இருப்பினும் இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி கமர்ஷியலான படங்களில் மட்டுமே அஜித்தைப் பார்ப்பது. புதுமையாக அவருக்கு இருக்கும் அவ்வளவு பெரிய ஆரவரமான ரசிகர்களுக்கு முழு திருப்தியாக ஒரு படத்தைக் கொடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் ஒருவர் கூடவா இல்லை.
விஸ்வாசம் - தந்தைப் பாசம்.
.நன்றி: தினமலர்

2 comments:

  1. என்னதான் சொன்னாலும் அந்த மொக்கை அஜித் படத்துக்கு பேட்ட மண்டி போட்டிருக்கு
    இந்த அசிங்கத்துக்கு ரஜினி நாண்டுக்கிட்டு சாகலாம்

    ReplyDelete
  2. நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...