பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.
ஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்!
வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...
மாற்றான்
சூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான்! அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.
விஸ்வரூபம்
நட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.
சுந்தர் பாண்டியன்
இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.
தாண்டவம்
விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.
பரதேசி
பாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.
படத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.
சிவாஜி 3 டி
இவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
முகமூடி
மிஷ்கின் படங்களில் ஆபாசம், வன்முறை அதிகமிருக்காது. வன்முறை ரசிக்கிற மாதிரி இருப்பதால் சென்சார் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதிகபட்ச ஆபாசம் என்றால் மஞ்சள் சேலையில் வரும் கானா. அதுவும் உடல் ஆபாசம் அல்ல. ரிப்பீட் செய்வதால் உண்டாகும் அசௌகரியம்.
ஒருநல்ல செய்தி, முகமூடியில் இந்த மஞ்சள் காமாலை இல்லை. ஜீவாவின் கரோத்தே சண்டையைப் பார்த்தால் சராசரி படத்தின் வன்முறைகூட தெரியவில்லை. ஃப்ரெண்ட்லி மேட்ச் போலிருக்கிறது. அப்புறமென்ன... சென்சார் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்து முகமூடிக்கு முதல் வெற்றியை பரிசளித்திருக்கிறது.
முகமூடி, சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் இவர்கள் எல்லாம் சிறுவர்களின் ஆர்வத்தால் உயிர் வாழ்கிறவர்கள். ஏ சான்றிதழ் கிடைத்தால் இவர்கள் எங்கே போவார்கள்? அந்தவகையில் முதல் பரிட்சையை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறான் முகமூடி.