இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வந்தது.
போர் நடந்த வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள், நிருபர்கள், புகைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த தடை நீக்கப்படவில்லை.
அந்தப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் புதையல், பணம், தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், போர் முடிந்தும் மூன்று ஆண்டுகளாக ராணுவம் தேடி வந்தது.
தமிழர் நிலங்களையெல்லாம் அபகரித்து, ராணுவ முகாம்களாகவும் மாற்றியுள்ளது.
மேலும் சண்டை உக்கிரமாக நடந்த பகுதிகளில் பல்லாயிரம் தமிழர் கொல்லப்பட்டதன் தடயங்களை அழிப்பதிலும் மும்முரமாக இறங்கியிருந்தது ராணுவம்.
இதற்காகவே, போர் முடிந்த பிறகும் பயணிகளை, குறிப்பாக பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுத்து வந்தது சிங்கள அரசு.
இப்போது இந்த வேலைகளை கச்சிதமாக முடித்துவிட்டனர் ராணுவத்தினர். வன்னிப் பகுதியில் புலிகள் பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள நகைகளை ராஜபக்சே குடும்பத்தினர் பதுக்கிக் கொண்டதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று வட இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக இலங்கை அரசு அறிவித்தது.
போர் முடிந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதாலும், சுற்றுலா நல்ல வளர்ச்சியடைந்து வருவதாலும் இந்த தடையை நீக்குவதாக ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment