அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.
தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும்
விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. சாலையைத் தங்களுக்குத்தான் பட்டயம் எழுதிக்கொடுத்துவிட்டதாக நினைத்து, இவர்கள் செய்யும் சாகசங்கள், மக்களை பயமுறுத்தி வருகிறது.
ஆக்சிலேட்டரை முழுவதுமாக முறுக்கிக்கொண்டு, சாலைகளில் பாம்புகளைப் போல் வளைந்து, நெளிந்து தாறுமாறாக ஓட்டுவது, குறுகிய இடைவெளியில் முந்துவது, முந்த முயற்சிப்பது, ஓடிக்கொண்டிருக்கும், இரு வாகனங்களுக்கு இடையே புகுந்து, "கட்' செய்வது, இடதுபுறமாக முந்துவது என, பலரை பயமுறுத்தி வருகின்றனர்.
தலைக்கவசம் அணிந்து கொண்டோ, அணியாமலோ தலை தெறிக்கும் வேகத்தில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதால், பாதசாரிகள் பீதியில் உறைந்து போகின்றனர்.பல இரு சக்கர வாகனங்களில், பின்புறமாக வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும், "ரியர் வீயூமிர்'களை காணமுடிவதே இல்லை. அவை அப்புறப்படுத்தப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை.
தனக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.சாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment