Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, August 14, 2018

பெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..?


நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கும், அரசியல் ரீதியாக உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது, மிக அவசியம்.அப்படி அதிகாரம் கிடைக்கும் போது தான், அது உண்மையாகவே சிறந்த அரசியலாக இருக்கும்.

ஆனால், தற்போது நாட்டின் பல பகுதிகளில், தங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு கூட, கணவரிடம் ஆலோசிக்கும் நிலையில் தான் பெண்கள் உள்ளனர். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், பதவிக்கு வரும் பெண்களில் பலர், படித்தவர்களாக இருந்தாலும், கணவர், சகோதரர்கள் சொல்படியே செயல்பட்டனர். 

உள்ளாட்சிகளில், கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண்கள், தங்கள் பணி என்ன என்பது கூட தெரியாமல் இருந்தனர். அவர்களின் தந்தை, கணவர், சகோதரர் உள்ளிட்ட ஆண்கள் தான், பல இடங்களில் பெண்களை இயக்கினர்.மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் போது, அந்தந்த கட்சிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோரின் கல்வித் தகுதி, திறமை போன்றவற்றை அலசி ஆராய்ந்து நிறுத்த வேண்டும். 

உறவு அரசியல் முறையை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.பார்லி.,யிலும், சட்டசபையிலும், மகளிருக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. 'நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்' என, மத்தியில் ஆள்வோர் கூறுகின்றனர்.'படித்த பெண்கள், சமூகப் பிரச்னை குறித்து, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல், அடுத்த கட்டத்துக்கும் வர வேண்டும். 

சாமானிய பெண்கள், இடஒதுக்கீட்டால், அரசியலில் ஈடுபட்டு விட முடியாது. 'அரசியல்வாதிகளின் மனைவியரும், மகன்களும் மிக எளிதாக அரசியலுக்கு வருவதற்கு மட்டுமே, 33 சதவீத இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கும்' என, தேசிய மகளிர் ஆணையத் தலைவி, ரேகா சர்மா கூறியுள்ளார். அவரது கூற்றையும், ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளது. எனவே, பெண்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகாரத்தை, யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது!---
அ.சரவணன், பெங்களூர்

Friday, June 8, 2018

எப்பவும் ரஜினிதான் கெத்து....?


கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்?

சற்றே 40 வருடங்களுக்கு பின் நோக்கி பயணித்தால் சில உண்மைகள் தெரியவரும்.  அப்பொழுது தமிழில்  சிவப்பான நிறமும் மென்மையான முக தோற்றமும் உள்ளவர்களே கதாநாயகர்கள்.

தமிழ் இளைஞர்களின் இயல்பான  கருப்பான நிறம், வில்லன்களுக்கும் அடியாட்களுக்கும் என ஒதுக்கபட்டது. ரோஸ் நிறத்தில் கார்ன் பவுடரை அப்பி கதாநாயகர்கள் கதாநாயகிகளை லவ்வினர். கருப்பு நிறத்தவர் காதலிக்கவும் ,உயர்ந்த வாழ்வு வாழவும் தகுதி அற்றவர்போன்றே அன்றைய சினிமா காண்பித்தது . கசப்பான உண்மை என்னவென்றால் சினிமாவில் காண்பிப்பதை தான் சமுகம் பின் தொடரும் என்பது தான் .

நிறத்தை பற்றிய தாழ்வு மனப்பான்மை தமிழகத்தில் பரந்து நிறைந்து இருந்தது என்பது உண்மை . கேட்பதற்கு சிரிப்பை தந்தாலும் கருவா பயலே . குழந்தையை தூக்காதடா உன் கருப்பு குழந்தைக்கு ஒட்டிக்கும், மாப்பிள்ள நல்ல சிகப்பு தெரியுமா  என கருப்பு தமிழன் கேலி செய்யப்பட்டான்.



சாதாரணமான விசயமாக இது தோன்றினாலும் கருப்பு தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது போன்ற விஷயங்கள் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை .
.
இந்த காலகட்டத்தில் தான் ஒரு கருப்பாய், மிகவும் சிந்திக்காத ,சடேர் என உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட கூடிய  சாதாரண தமிழனை பிரதிபலிக்க கூடிய பாத்திரமாக ரஜினி திரையில் தோன்ற ஆரம்பித்தார் .

பிரமாதமான நடிப்பு என்று சொல்லமுடியாது .தன் சக கால ஹீரோவான கமலஹாசனை போன்று அழகும் ,திறமையும் , கிடையாது . இத்தனை நெகடிவ் பாயிண்ட்கள் இருந்தும் ரஜினி பாமர தமிழ் ரசிகனை கவர ஆரம்பித்தார் .

ஆரம்ப கால ரஜினி படங்களில் அவர் ஏற்று நடித்த அடித்தட்டு மனித வேடங்கள் மிக பெரிய ரசிகர் வட்டத்தை சேர்த்தது . "சந்தன மேனி" என பாடல் வரிகள் எழுதிய கவிஞர்கள் , கருப்பு" கன்னம் தொட்டு" என பாடல் எழுத ஆரம்பித்தனர் . திரையில் ரஜினி செய்ததை எல்லாம் தானே செய்தது போல ரசிகன் எண்ணி மகிழ்ந்தான்.




அதற்க்கு பின் வந்த கருப்பு கதாநாயகர்கள் விஜயகாந்த் ,முரளி , முதல் தற்போதைய விஜய் ,விஷால் தனுஷ் வரை பலருக்கும் ரஜினி தான் முன்னோடி . இன்று கருப்பு அழகற்றது  என்கிற தோற்ற பிம்பம் மறைந்து விட்டது என்றே கூறலாம் . தான் கருப்பாய்  இருக்கிறோம் என்கிற தாழ்வுமனபான்மை மறைந்து கருப்பாய் இருப்பவர்களை பெண்கள் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் .

தற்போதைய தலைமுறைக்கு இந்த விஷயங்கள் தெரியாது . இன்று 40 பிளசில் இருக்கும்  பல தமிழ் கருப்பு  இளைஞர்களுக்கு தெரியும் . ரஜினி அவர்களின்  தன்னம்பிக்கை .

சூப்பர்மேன் , ஸ்பைடர்மேன் ஜேம்ஸ்பாண்ட் போல ரஜினி என்பது  தமிழ் இளைஞர்களின் கதாபாத்திரம். அந்த பாத்திரம் தோற்க்க  அவரது ரசிகர்கள் விடமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களின் தோல்வி....
சூப்பர்ஸ்டாரின் ரசிகனாய்  ஆர்.கே.செந்தில்குமார் (facebook) 

Wednesday, June 6, 2018

தவிர்க்க முடியாத தமிழ் சினிமா... திரும்பி பார்க்குமா சமூகம்..!

 
தொண்ணூறுகளின் பிள்ளைகள் (90s Kids) என்று ஒரு சொற்றொடர் பரவலாகியிருக்கிறது. எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ பிறந்தவர்கள் இவ்வுலகை அறியத் தொடங்குகிற சிறுவம் அது. 
 
இப்போது அவர்கள் வேலையிலமர்ந்து திருமண அழைப்பிதழில் பெயரேற்றம் பெற்றபடியிருப்பார்கள். அவ்வாறே எண்பதுகளின் பிள்ளைகள் என்று ஒரு சொற்றொடரைக் கூறினால் அதுவே எனக்குச் சிறுவம். தொண்ணூறுகளின் பிள்ளைகளுக்கு அகல்திரைப்படங்கள், 
 
ஷங்கர், இரகுமான், மனீசா, நக்மா, மதுபாலா என்று அவர்களுடைய திரைப்படச் சுவைப்பின் தொடக்கம் இருக்கக்கூடும். எண்பதுகளின் பிள்ளையான எனக்கு இளையராஜா, பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்தினம், ஆபாவாணன், இராதா, அம்பிகா, குஷ்பு என்று திரைப்படச் சுவைப்பின் முகங்கள் அமைந்தன. எம்ஜிஆர் தம்முடைய முதற்படத்தில் அறிமுகமான ஆண்டில் என் தந்தையார் பிறந்தார். நான் எம்ஜிஆரின் முதற்படத்தைப் பார்த்தபோது அவர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்

 
எண்பதுகளின் பிள்ளைகள் இரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் பிரபு பாக்கியராஜ் இராமராஜன் போன்ற நடிகர்களின் விருப்பினராக இருந்தவர்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் அவரவர் வீட்டு மூத்தோர்களின் விருப்புக்குரியவர்கள். 
 
 
 
கறுப்பு வெள்ளைப் படங்கள் என்றால் ஓர் இளக்காரம் தோன்றியிருந்த காலகட்டம் அது. அதனால் பழைய படங்களைப் பார்ப்பதைச் சிறுவர்களாகிய நாங்கள் எட்டிக்காயாகவே கருதினோம். அக்காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஞாயிற்றுக் கிழமைப் படங்கள் அதன் கறுப்பு வெள்ளைப் பழைமைக்காகவே எள்ளி நகையாடப்பட்டதும் உண்டு. வளர்ந்து அறிவு முதிர்ச்சி ஏற்பட்ட பின்னரே கறுப்பு வெள்ளையின் கலைமதிப்பை அறிந்தோம் என்பது கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது.


புதுப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பழைய படங்களும் தொடர்ந்து திரையிடப்பட்டன. மூன்றாம் வகுப்பு படிக்கையில் நான் கடிதங்கள் எழுதவும் அனுப்பவும் பழகியிருந்தேன். என் தாய்மாமனுக்கு எழுதிய கடிதமொன்றில் அனைத்து நலன்களையும் வினவி முடித்து "ஊர்க் கொட்டகையில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பதில் கடிதத்தில் மறக்காமல் தெரிவிக்கவும்" என்று முடித்திருந்தேன். 
 
பதில் கடிதத்தில் "சுமதி என் சுந்தரி" என்ற விடையும் கிடைக்கப்பெற்றேன். ஊர்க் கொட்டகையில் சுமதி என் சுந்தரி ஓடினால், அன்றிரவு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதைத்தான் நாங்கள் பார்த்தாக வேண்டும். இவ்வாறு பழைய படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். அம்மையின் இடுப்புக் குழந்தையாக இருந்தபோது நான் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆட்டுக்கார அலமேலு. இன்னொன்று குடியிருந்த கோயில். இப்போது 
 
 
 
அப்படம் பார்த்த காட்சிகள் மங்கலான அரைநினைவுகளாக இருக்கின்றன. அவ்விரண்டு படங்களும் என்னைக் கவர்ந்தன என்றாலும் குடியிருந்த கோயில் கொண்டாட்டமாகவும் கோலாகலமாகவும் இருந்ததாய் நினைவு. பழைய படங்களின் நீளமான கண்ணீர்க் காட்சிகள் சிறுவர்களுக்குக் கட்டாயம் விளங்கவேண்டும் என்பதில்லையே. இதற்கிடையே "வாழ வைத்த தெய்வம்" என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஓடோ ஓடு என்று ஓடியது. எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. 
 
குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன் படுகின்ற பாடுகளைப் பற்றிய படம் அது. ஜெமினி கணேசன் நடித்தது. பொதுவாக, ஒரு படத்திற்குச் சென்றால் திரையைவிட்டுக் கண்களை விலக்க மாட்டோமில்லையா... வாழ வைத்த தெய்வத்தைப் பார்க்கையில்தான் திரையரங்கை நன்றாகக் கழுத்து திருப்பிப் பார்த்தேன். அன்றுதான் "பழைய படமா... நம்மால் முடியாதடா சாமி... ஆளை விடுங்க..." என்ற மனநிலைக்கு வந்தேன்.

சிறுவத்தின் ஆர்வத்தோடு படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது அவ்வப்போதைய புதுப் படங்களே ஆர்த்தைத் தூண்டின. ஆனால், எல்லாப் புதுப்படங்களும் சிறப்பாக இருக்கவில்லை. அதுபோன்ற களைப்பான வேளையில்தான் தற்செயலாக எம்ஜிஆர் படமொன்றைப் பார்த்தேன். 
 
 
 
ஊரிலிருந்து உறவுகள் வந்திருக்க அவர்களோடு அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு "இரண்டாவதாட்டம்" சென்றோம். "எல்லாரும் படம் பார்க்கப் போறோம்... நீ மட்டும் எதற்கு வீட்டில் தனியாக இருந்துக்கிட்டு... கிளம்பு..." என்று என்னைக் கிளப்பிவிட்டார்கள். அவர்கள் எல்லார்க்கும் அந்தப் படத்தைப் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம். அவர்களுடைய விருப்பத்திற்குரிய நாயகன். முன்பே கேட்டு மகிழ்ந்த பழைய பாடல்கள். ஆனால், அரைகுறை மனத்தோடு விருப்பமில்லாமல் படம்பார்க்கச் சென்ற நான் என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிட்டேன். 
 
படத்தின் விரைவு புதுப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனித்தது. அட... பழைய படங்கள் என்று தள்ளியிருந்தோமே... இவ்வளவு நன்றாக இருக்கிறதே... என்று திகைத்துப் போய்விட்டேன். அந்தப் படம் எம்ஜிஆர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்." நல்லவனும் கொள்ளையனுமாக இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்த அப்படம் பிறமொழிப் படமொன்றின் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். எம்ஜிஆர் படங்களைப்போலவே சிவாஜி படங்களின்மீதும் என் ஆர்வம் திரும்பியது. பாசமலர் போன்ற அழுகைப் படங்களைப் பார்த்து மிரட்சியடைந்திருந்த நான் சிவாஜி படங்களைப் பார்க்காமல் இருந்தேன். தற்செயலாகவே "திருவிளையாடல்" பார்க்க வாய்த்தது. சிறுவத்தின் இளநிலை ஆர்வங்களைத் தாண்டத் தெரியாதிருந்த எனக்குத் திரைச்சுவையின் நுண்மைகள் பிடிபடத் தொடங்கின. 
 
 
 
சிவனின் திருவிளையாடல்களைக் கூறிச்சென்ற அப்படத்தின் முதற்பகுதியாக இடம்பெற்ற "ஆயிரம் பொற்காசுப் படலம்" என்னை மயக்கி ஆட்கொண்டது. மறுநாளே தென்னம்பாளையத்தில் ஒரு மளிகைக்கடையில் திருவிளையாடல் உரையாடல் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். திரைப்படமொன்று அதன் எழுத்துப் படியிலும் தமிழ்ச்சுவை சொட்டும்படி அமைந்திருந்தது என்றால் அது திருவிளையாடல்தான். சிவாஜியின் படங்கள் தமிழ்த்திரைத்துறைக்குக் கிடைத்த பொற்களஞ்சியம் என்று விளங்கியது. அதன்பிறகு அவருடைய படங்களை நான் பார்த்த பார்வையே வேறு. 
 
தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. புதிது புதிதான ஆக்க முறைகள் திரைத்தொழிலில் நுழைந்துவிட்டன. இன்று அதன் வளர்ச்சி விண்முட்டுகிறது. இத்தகைய பெரும்போக்குக்கு இடையே இளைய தலைமுறையினர் பழைய படங்களின்மீது எத்தகைய மனப்பதிவுகளோடு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. புதுப்படங்களில் குவிந்திருந்த என் ஆர்வத்தைத் திரையரங்கில் பார்க்க வாய்த்த பழைய படங்களே மடைமாற்றின. இன்றுள்ளவர்கள் பழைய படமொன்றைத் திரையரங்கில் காண முடியாது. சின்ன திரையில் காணப்படும் பழைய படங்கள் முழுத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. 
 
இளைய தலைமுறையினர் இழந்து நிற்கும் எத்தனையோ அருமைகளில் பழைய படங்களும் அடங்கும். அதற்காக, அவற்றை விட்டு நீங்கக்கூடாது. நம்மையறியாமல் நாமடைய வேண்டியதை இழப்பதாகும் அது. இலக்கியத்தைப் போலவே திரைப்படங்களிலும் பழையதே சிறப்பு. புகழ்பெற்ற பழைய படங்களை எப்படியேனும் தேடிப் பிடித்துப் பாருங்கள் என்பதே என் பரிந்துரை. 
 
Thanks - கவிஞர் மகுடேசுவரன்


Friday, May 25, 2018

தேர்தல் முடிவுகள் மட்டுமே ஜனநாயகம் அல்ல!

மே
ற்கு வங்க மாநிலத்தில் மே 14-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வன்முறையின் துணையோடு மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் நடந்த தொகுதிகளில் 76% திரிணமூல் காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. எனினும், மாற்றுக் கட்சியினர் போட்டியிடாத அல்லது போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தால்தான் திரிணமூலின் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியும்.
உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் சேர்த்து மொத்தம் 58,792 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பிருந்தே மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கிவிட்டன. பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை, ஆளும் கட்சியினரின் அராஜகத்தை அடக்கத் தவறியதல்லாமல், பல இடங்களில் அவர்களுக்குக் துணையிருந்ததாகக்கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். மூன்றடுக்கு உள்ளாட்சி மன்ற முறை ஏற்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு தொடங்கி, இதுவரையில் இப்படி ஒரு வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்தது கிடையாது. மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, இடதுசாரி முன்னணி 2011-ல் பதவியிலிருந்து இறங்கிய பின், இப்படிப்பட்ட வன் செயல்கள் மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை.
வன்செயல்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. நிர்வாகத் திறமை போதாத காரணத்தாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ இப்படி நடந்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக திடீரென பெரிய கட்சியாக வளர்ந்துவிடவில்லை. ஆனால், அது வளர்கிறது என்ற எண்ணமே திரிணமூல் காங்கிரஸை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது.
 இப்போதைய பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 25% இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது. எனினும், 2021 மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யைப் பதவியிலிருந்து அகற்றுவதே தங்களுடைய லட்சியம் என்று வெளிப்படையாகவே அறிவித்துச் செயல்படுகிறது பாஜக. அதன் வளர்ச்சியால் அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு எதிராக மாநில அளவிலும் தேசிய அளவி லும் பிற கட்சிகளை ஓரணியில் திரட்டத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி அல்ல; மக்களின் ஆதரவே முதன்மையானது. ஜனநாயகத்தை வீழ்த்தி பெறும் வெற்றிகள் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும். இந்து தலையங்கம்
!

Friday, May 18, 2018

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ? இதுவும் உண்மைதானே

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
 கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

 மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

 அடிப்படைச் சட்டங்கள் என்ன?

 நமக்கான உரிமைகள் என்ன?

 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

 நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

 மற்றவர்களை நேசிப்பது எப்படி?

 நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட் whatsup

Friday, May 11, 2018

இதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...



கல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. புரிதலின்றி பயிலும் எவ்வகை கல்வியானாலும், மாணவர்கள் கரை சேர முடியாது.

சுதந்திரம் பெற்ற ஓராண்டிலேயே, சீனா, தன் மக்களை தாய் மொழியில் படிக்க செய்து, இந்தியாவை விட, 20 ஆண்டுகள் முன்னேறி விட்டது. தாய் மொழியை புறம் தள்ளி, புரிதல் படாத ஆங்கில மொழியை கட்டி அழுது, இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும், எல்லா தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக அசுர வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன; அதற்காக, அப்பள்ளிகள், 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளன. 

ஒரு மாணவன், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர வேண்டும் எனில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தாக வேண்டும். அங்கு, ஏழைகள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வசதி படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே முன்னேற வேண்டுமா...

மாநிலத்தில், 884 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில், வேதியியலில், 421; பொருளாதாரத்தில், 370; வணிகவியலில், 215; இயற்பியலில், 156; தமிழில், 284; மற்ற துறைகளில், 194 என, 1,640 பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; இதே கதி தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது.

'மந்தைகளில் பயணிக்கும் செம்மறி ஆடுகளை பின் தொடர்ந்து, குருட்டு ஆடுகள் செல்லுமாம்' என்ற அடைமொழியை பின்பற்றுவது போல் தான், இன்றைய கல்வி நிலை உள்ளது.

டாக்டர் அப்துல் கலாம், சிவன், அண்ணாதுரை போன்றோர் எல்லாம், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்று தான் விஞ்ஞானிகளாகினர். இதை புரிந்து, தமிழர்கள், தாய் மொழியை அரவணைப்பரா?
சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்

Sunday, May 6, 2018

‘1100 ஜிபி இலவச டேட்டா’ - ஜியோ அடுத்த அதிரடி...



மொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.


2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.

இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.

பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிலையில், 17 கோடி வாடிக்கையாளர்களுக்கு சலுகையை நீடித்தது.

இந்நிலையில் பிராட்பேண்ட் சேவையை விரிவு படுத்த ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டே சில குறிப்பட்ட நரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.

ஜியோ பைபரில் இருந்து வீடுகளுக்கு இந்த சேவை இணைப்பு வழங்கப்படுகிறது. அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் உள்ள இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படுகிறது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ள ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிகபட்சமாக 1100 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வ நடைபெறும் என கூறப்படுகிறது.

Wednesday, May 2, 2018

இது நியாயமா ஸ்டாலின் அவர்களே



'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், லோக் ஆயுக்தா அமைக்கப்படும்; இன்றைய அமைச்சர்கள் அத்தனை பேரும், கம்பி எண்ணப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்! அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டும் உத்தமர்கள் என்பது போல், அவர் பேசியிருக்கிறார். 

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பல தலைமுறைக்கு கோடி கோடியாக சொத்துகளை குவித்திருப்பது, உலகத்துக்கே தெரியும்.தமிழகம் உட்பட சில மாநிலங்கள், லோக்பால் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றன; இது, வேதனைப்பட வைக்கிறது.

மக்களின் பாதுகாவலர் என்ற பொருள் உணர்த்தும், 'லோக்பால்' என்ற அமைப்பை, நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மொரார்ஜி தேசாய் தலைமையில், அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, 1966ல், அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.கடந்த, 1968 முதல், 2013 வரை, எட்டு முறை பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டும், லோக்பால் அமைக்கப்படவில்லை. 

நாடு சுதந்திரம் பெற்ற அன்றே, ஊழல் தலைதுாக்க துவங்கி விட்டது.ராணுவ ஜீப் ஊழல், நகர்வாலா பேங்க் ஊழல், போபர்ஸ் ஊழல் முத்திரை தாள் ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் என, பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது...லோக்பால் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், நாட்டில் லாலு பிரசாத்களும், கேதான் தேசாய்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்ற நிலை மாறி இருக்கும்.

அரசியல்வாதிகளின் மூலம், கோவில் சொத்துகளும், நாட்டின் வளங்களும் கொள்ளை போவது, தடுக்கப்பட்டு இருக்கும்!கோடிகளை குவிக்க நினைக்கும் அமைச்சர்களுக்கு, சிறிதாவது பயம் இருந்து இருக்கும். லோக்பால் விஷயத்தில், தமிழக அரசின் சப்பைக்கட்டு, நீதிமன்றத்தில் எடுபடவில்லை.'லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து, ஜூன் மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்டு, நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதிகள் கொட்டம் அடங்கி விடும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை,

Sunday, April 22, 2018

விவசாய போராட்டங்கள் நாடகம்தானா....!




நான் திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னுார் கிராமத்தில், விவசாயம் செய்து வருகிறேன்.என் பாட்டனார் காலத்தில், நல்ல நேரம் பார்த்து, விவசாயத்தில் நல்ல விளைச்சல் வர வேண்டும் என, விதை முகூர்த்தம் செய்வர். 

அதன்படி, விதை தெளித்தல் முதல், அறுவடை வரை பணிகள் நடைபெறும்; அவர்கள் நினைத்தபடி, நல்ல மகசூலும் கிடைத்தது.இன்று, விவசாயத்தை பெரும் பொருட்டாக, விவசாயிகள் நினைப்பது இல்லை. விதை தெளிக்கும்போதே, நஷ்டஈடு, நிவாரணம் வாங்க வேண்டும் என தான் விதைக்கின்றனர். 

விவசாயிகளின் போக்கிற்கு ஏற்ப, அரசும் செயல்படுகிறது. தமிழகத்தில், விவசாயிகள் மீது, அக்கறை உள்ளவர் போல் அய்யாக்கண்ணு, பாண்டியன், மாசிலாமணி என, ஆளுக்கு ஒரு அமைப்பை வைத்துள்ளனர். 




'டிவி'க்களில் இஷ்டத்திற்கு அவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். 
உண்மையாக, விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும், அக்கறை இருந்தால், முதலில் தமிழகத்தில் காணாமல் போன, காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் இவற்றை அவர்கள் கண்டுபிடிக்கட்டும்!

திருச்சியில், காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்து, அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் எத்தனை ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டுள்ளன... ஏரி, குளங்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி விட்டன என்பது, அவருக்கு தெரியுமா...

தமிழகத்தில், திருமலைராஜன், வெட்டாறு, குடமுருட்டி, வெண்ணாறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, கோரை ஆறு, அடப்பாறு, முள்ளியாறு, திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, சென்னையில் கூவம், அரசலாறு, காவிரி, உப நதிகள், கொள்ளிடம் மற்றும் உபநதிகள் ஆக்கிரமிப்புகளால் மூழ்கி உள்ள, ஆறுகளின் பட்டியல் நீண்டபடி உள்ளன.

எந்த ஆற்றிலாவது தண்ணீர் ஓடுகிறதா... அதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை, அய்யாகண்ணு உள்ளிட்ட, அவருடன் போராடுவோர் கண்டறிந்து, பின் காவிரிக்கு வர வேண்டும்; வெத்து போராட்டங்கள் என்றும் வெல்லாது!மாநிலத்தில் நீர் நிலைகளை காப்பாற்ற, உருப்படியான ஐடியாக்களை, அரசுக்கு தெரிவித்து, உறுதுணையாக இருக்க பாருங்கள்! (நி.சங்கர், திருத்துறைப்பூண்டி)

Thursday, April 19, 2018

பற்களும்.... சிரிப்பும்... ஒரு எச்சரிக்கை பதிவு


ஒருவரை பார்த்த முதல் நொடியில் நாம் அவரிடம் கவனிப்பது என்ன என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் சொன்ன பதில், அவர்களின் சிரிப்பு. ஆக, முகத்தில் முக்கியமாக இருப்பது பற்களும், சிரிப்பும்தான்.

பற்கள் என்றதும் நினைவிற்கு வருவது அழகான சிரிப்பு. பால் போன்ற வெண்மையான வரிசையான பற்கள். இப்படி அழகு சம்பந்தப்பட்ட பற்களை நாம் மனதில் வைத்துள்ளோம். ஆனால் பற்கள் அழகுக்கு உதவுவது அவற்றின் வேலையில் ஒரு சிறிய பகுதி. அழகை தாண்டி அவை செய்யும் வேலைகள் பல உண்டு.

பேச்சில் பெரும் பங்கு : சொற்களை சரியாக உச்சரிக்க மற்றும் சீராக பேசுவதற்கு பற்கள் மிகவும் முக்கியம். சொல் என்பது பல், நாக்கு, உதடு இவை மூன்றும் சேர்ந்து உருவாக்கும் ஓசை. வாயின் அமைப்பு, நாக்கின் நீளம், பற்களின் அளவு மற்றும் அமைப்பு இவை அனைத்தும் சொற்களை உருவாக்குவதில் பங்களிக்கின்றன. 

அதனால்தான் ஒவ்வொருவரின் பேச்சும், உச்சரிப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்று சரியாக இல்லாவிட்டால், பேசுவதில் தடை ஏற்படும். தெத்து பற்கள், கோணல் பற்கள், பற்கள் ஆடும்பொழுது அல்லது பற்கள் விழுந்து காலியாக இருந்தால் என அனைத்து சூழ்நிலையிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும். பற்களில் பலம் இல்லாமல் ஆடும்பொழுது நம்மால் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியாது. சரியான இடத்தில் சரியான வரிசையில் பற்கள் இருப்பதும், பற்கள் இல்லாத இடத்தில் பற்கள் கட்டுவதும் ஒருவரின் பேச்சிற்கு அவசியமானது.

உணவை சுவைத்து ருசித்து சாப்பிட ஆசை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ருசியை நம்மால் எப்படி உணர முடிகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். உணவை வாயில் போட்டதும் கரைய தொடங்கும். பின்னர் உணவை அரைப்பதற்கு பற்களும், உமிழ்நீரும் சேர்ந்து உழைக்கும். 

உணவு அரைந்து அதில் நம் சுவை அரும்புகளில் உள்ள திரவங்கள் கலக்கும்பொழுதுதான் உணவின் சுவை மூளைக்கு சென்றடையும். உணவின் சுவையை நாம் உணர முடியும். சரியான பற்கள் இல்லையென்றால், உணவை முழுதாக மசிக்க முடியாது. இதனால் எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் அதன் முழு திருப்தி நமக்கு வராது. சாப்பிடுவதற்கு அடுத்த கட்டம் அதனை விழுங்குதல், அதாவது வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு அனுப்புதல்தான் உணவை விழுங்குவது என்று பொருள். உண்ணுவதும், விழுங்குவதும் அடுத்தடுத்து சரியான இடைவெளியில் நடக்க வேண்டும்.

 உணவை சரியான அளவு மசித்தபின் பற்கள் இறுக்கமாக மூடிக்கொண்டு நாக்கு நம் அன்னத்தின் மேல் அழுத்தினால்தான் உணவு வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு நகரும். உணவு மட்டுமல்லாது தண்ணீர் போன்ற திரவங்கள், மாத்திரை போன்ற கடினமான பொருட்கள் என பலவற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் விழுங்குவதற்கு பற்கள் உற்ற துணையாக இருக்கின்றன. வாயின் சுத்தத்தில் பற்களின் பங்கு என்ன என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். 

எல்லா மனிதரும் காலை கண்விழித்த உடன் செய்ய வேண்டிய முதல் வேலை பல் துலக்குவது. வேப்பங்குச்சி, சாம்பல், செங்கல், பொடி, டூத்பேஸ்ட் , பிரஷ் என வடிவம் மாறினாலும் பழக்கம் ஒன்றுதான். நம் முன்னோர் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள். சுத்தம் செய்யாத பற்களின் மேல் ஒரு படலம் உருவாகும். அதில்தான் கிருமிகள் தங்க ஆரம்பிக்கும். இவற்றை சரியாக அகற்றாவிட்டால் பல் சொத்தை, ஈறு நோய் போன்றவற்றை உருவாக்கும். எனவே பற்களை சுத்தமாக வைப்பதன் மூலம் வாயின் சுத்தமும் பாதுகாக்கப்படுகிறது.
முகத்தின் சமவிகிதம் : மனித முகம் மூன்று சம பங்காக பிரிக்கப்படுகிறது. 

தலை உச்சியில் இருந்து புருவம் வரை முதல் பாகம். புருவத்தில் இருந்து மூக்கின் நுனி வரை இரண்டாம் பாகம். மூக்கின் நுனி முதல் வாய் நாடி வரை மூன்றாம் பாகம். இந்த மூன்று பாகங்களும் சரியான சமவிகிதத்தில் இருப்பதுதான் இயற்கை. இதில் ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் இயற்கை விகிதங்களை உட்பட்டுதான் இருக்கும். பற்கள் இல்லாமலோ அல்லது பற்கள் சரியான வரிசையில் இல்லாவிட்டாலோ, முகத்தின் மூன்றாவது பாகம் மற்ற இரண்டு பாகங்களோடு ஒத்துப்போகாது. இதை சரிசெய்யாவிட்டால் ஒருவரின் முகத்தோற்றமே மாறிவிடும். 

சரியான பல் வரிசை முகத்தின் சமவிகிதத்தை தக்க வைக்க முடியும். எலும்பின் பலம் பற்களின் பலத்தை பொறுத்தே தாடையில் எலும்பின் அளவு இருக்கும். எப்படி மரத்தின் வேர்கள் மண்ணை அரிக்காமல் பிடித்துக்கொள்ளுமோ, அதேபோல்தான் பற்களும் அதைச்சுற்றி உள்ள எலும்பை தேயாமல் பிடித்து வைத்துக்கொள்ளும். பல் இல்லாத வாயில் வேர் இல்லாத மண் போல சிறிதுசிறிதாக எலும்பின் அளவு குறைந்துவிடும். இதனால் தாடையே வலுவிழந்துவிடும். இதனால்தான் விழுந்த பற்களை உடனடியாக கட்டுவது அவசியம். சரியான இடத்தில் பற்கள் நிலையாக இருப்பது தாடை எலும்பின் பலம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.


உடல் ஆரோக்கியம் : வாயே நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. ஒருவரின் உடல் உபாதைகளில் முக்கியமான பலவற்றை அவரின் பற்களையும், வாயையும் பார்த்தே கணித்துவிடலாம் என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. வாய் துர்நாற்றம் அனைவராலும் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும். ஆனால் இவை வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதைவிட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறுகள் அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும், வாய் எரிச்சலும் ஏற்படும். ஆக, நம் உடலில் ஏற்படும் பல வகை நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும், உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.


குறட்டைக்கு குட்பை : உறங்கும்போது சுவாசக்குழாய்களில் ஏற்படும் தடைகளினால் வரும் சத்தமே குறட்டை. பற்கள் நேரடியாக குறட்டைக்கு காரணமாக முடியாது. ஆனால், சில பிரச்னைகளால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். அதாவது ஞானபற்கள் முளைக்கும் முன்னர் தாடையில் வீக்கம் ஏற்பட்டால், அதனால் குறட்டை அதிகம் ஆகலாம். கீழ்த்தாடை தலையுடன் சேரும் இடத்தில் தேய்மானம் ஏற்பட்டாலோ, துாங்கும்பொழுது நாக்கு சுவாசக்குழாய்க்கு தடையாக இருந்தாலோ குறட்டை வரலாம். இவ்வாறு வரும் குறட்டையை கட்டுப்படுத்த பற்கள் மற்றும் வாயினால் முடியும். இதற்கு அவரவர் அளவிற்கேற்ப வாயில் ஒரு சாதனம் பொருத்த வேண்டும். அது சுவாசக்குழாய்க்கு எந்த தடையுமின்றி காற்றுப்போக வழிவகுக்கும். 

இதை குறிப்பிட்ட காலம் உபயோகப்படுத்தினால் குறட்டை தொல்லையில் இருந்து விடுபடலாம். பற்களின் மூலம் கழுத்து வலி ஏற்பட 3 காரணங்கள் உண்டு. ஒன்று ஞானப்பற்கள் எனப்படும் கடைசி கடவாய் பற்கள். சிலருக்கு தாடை எலும்புக்குள் புதைந்து இருக்கும்.

 இதைச்சுற்றி கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் கழுத்து வலி போன்று தெரியும். இரண்டாவது கீழ் பற்களில் வெகு நாட்களாக கவனிக்கப்படாத சொத்தை மூலம் சீழ் உண்டாகி, அது கழுத்து வரை பரவும் பொழுது கழுத்தில் வலி தெரியும். மூன்றாவதாக பற்களில் சொத்தையே இல்லாமல் கூட பற்களை அதிகம் கடிப்பவர்களுக்கு தாடை எலும்பில் சாதாரண அளவைவிட அதிகமாக அழுத்தம் உண்டாகும். தாடை சார்ந்த தசைகள் கழுத்திலும் உள்ளன. இதனால் கழுத்தில் உள்ள தசைகளிலும் வலி வரும். 

பற்களை சரிசெய்தால் அதனால் ஏற்படும் கழுத்து வலியும், தலை வலியும் சரியாகிவிடும்.
தன்னம்பிக்கை தரும் பற்கள் : கோணலாக அல்லது தெத்து பற்கள் இருப்பவர்கள், முன் பற்களின் நடுவே இடைவெளி இருப்பவர்கள்,பற்கள் இல்லாமல் இருப்பவர்கள், அது தெரியாமல் இருக்க பற்கள் தெரியாமல் பேசவும் சிரிக்கவும் செய்வார்கள். இதுதொடர்ந்தால் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். நம்மையும் அறியாமல் மற்றவர்களுடன் பேசுவதை குறைக்க நேரிடும். நன்றாக பேசுபவர்கள் திடீரென வெளிஇடங்களுக்கு வர தயங்குவார்கள்; பிறரை சந்திப்பதை தவிர்ப்பார்கள். 

இவை எல்லாம் தேவை இல்லாத பயம். எந்த நிலையிலும் பற்களை சரிசெய்து நிலையான பற்களை பொருத்தலாம். இதன்மூலம் இழந்த சிரிப்பையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். பற்களின் பலத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து, பற்களின் பாதுகாப்பில் தேவையான நேரத்தில் தேவையான அக்கறை செலுத்தினால் உடலும் மனதும் வளம் பெறும்.
நன்றி-டாக்டர் ஜெ. கண்ணபெருமான்,மதுரை. 94441 54551

Wednesday, April 18, 2018

இந்த படம் ஏன் ஆஸ்கார் ஜெயித்தது?


The Shape of Water படத்தை பற்றி நான் படித்த முக்கால்வாசி பதிவுகள் “இந்த படம்லாம் எப்படி ஆஸ்கார் ஜெயிச்சுது”, “இதற்கு போய் ஏன் ஆஸ்கார் கொடுத்தார்கள்” என்ற ரீதியில் கேள்விகள் எழுப்பியவைகளாகவே இருந்தன. சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்தேன். இந்த படம் எப்படி இருக்கு என்பதை எழுதுவதை காட்டிலும், மேலே கேட்ட கேள்விகளுக்காக, படத்தோட context பற்றி, இது ஏன் சிறந்த படம் விருது வாங்கியதுங்கிறத பற்றி எழுதலாம்னு தோணிச்சு. அதோட, இந்த படத்தோட ஆஸ்கார் வெற்றி பற்றி மட்டும்தான் எல்லாரும் பேசுறாங்க . ஆனா இந்த படம் முப்பெரும் film festivalகளில் ஒன்றான வெனிஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான Golden Lion விருதினை ஆஸ்காருக்கு ஆறு மாதங்கள் முன்னே ஜெயித்துவிட்டது. அதை பற்றி யாரும் பேசியது போல தெரியவில்லை. இன்னமும் ஆஸ்கர்தான் உச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமா? :) ஆஸ்கரையாவது Hollywood, வணிகம், capitalist propaganda, narcisstic paradeனு எதையாவது குறை சொல்லலாம். But Venice Golden Lion ? இந்த படத்தை சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் கொண்டாடுவதன் காரணம்?


நல்ல சினிமா என்றாலே அது ஸ்லோவான drama படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒருவித elitist மனப்பான்மை என்கிற கருத்து சமீபகாலமாக மேற்கத்தைய சினிமா வட்டாரங்களில் கொஞ்சம் மேலோங்கி வருகிறது. நேர்மையாகவும் தரமாகவும் இருக்கும் பட்சத்தில் Genre சினிமா எனப்படும் ஒரு குறிப்பிட்ட conventionகளுக்கு உட்பட்டு வரும் படங்களுக்கு என்ன குறைச்சல், அவைகளையும் பாரபட்சம் பார்க்காமல் விருதுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்கிற கருத்தை தற்போது நிறைய பார்க்கலாம். Mad max fury road, Arrival, Get out, Shape of water, Logan போன்ற genre படங்களின் விருது விழா பங்கேற்பு இந்த கருத்தை ஆமோதிப்பதையும்காணலாம்.

மேலும், என்னதான் தற்போதய ஹாலிவுட் சினிமாவை குறைகூறினாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு Golden Age of Hollywood எனப்படும் (1930-60) காலகட்ட ஹாலிவுட் படங்கள் மேல் என்றுமே மதிப்பும் காதலும் இருக்கும். தற்போது சினிமா துறையில் நிறைய பேரை inspire செய்த காலகட்டம் அது. இந்த Shape of water படம், 1950களில் ஹலிவுட்டில் வந்த Creature from the Black Lagoon (1954), It Came from Beneath the Sea (1955), The Giant Behemoth (1959) போன்ற sea monster படங்களின் டைரக்ட் inspiration. படம் நடக்கும் காலகட்டம், அணுகுண்டுகளால் mutate ஆகி பெருகிவரும் புது creatures, coldwar tension,ரஷ்ய உளவாளிகள், ரகசிய ஆராய்ச்சி கூடம், one dimesional வில்லன் என அந்த படங்களின் tropes இதில் ஏகப்பட்டது இருக்கும். கூடவே ஏகப்பட்ட கிளாசிக் ஹாலிவுட் படங்களின் homage / referenceகளையும் இந்த படத்தில் காணலாம். குறிப்பாக படத்தில் வரும் அந்த கனவு நடன காட்சி ஹாலிவுட் மியூசிக்கல் படங்களின் legendகளான Fred Astire - Ginger Rogers நடித்த Follow the Fleet (1936) பட நடன காட்சியின் மறு உருவாக்கம்.


மேலே கூறிய referenceகளோடு மட்டும் நிற்காமல் இன்றைய காலகட்டதிற்கேற்ப கதயமைப்பை மாற்றியதும் படத்தின் புகழுக்கு காரணம். உதாரணத்திற்கு strong female characterization. மேலே சொன்ன படங்களில் monsterகளிடமிருந்து பெண்ணை ஹீரோ காப்பாற்றுவார். அல்லது King Kong, Beauty and the Beast போன்ற நல்ல monster படங்களில் அந்த monster ஒரு பெண்ணை காப்பாற்றும். ஆனால் இங்கு அந்த monsterரையே ஒரு பெண்தான் காப்பாற்றுகிறார். அதற்கப்புறம், படத்திலிருக்கும் social outcast angle, racism, homosexual references, தன்னை விட தாழ்ந்தது என நாம் நினைக்கும் ஒரு இனத்திடம் நாம் காட்டும் வன்மம், Interracial romance போன்ற contemporary themesஸும் criticsஸை கவர்ந்ததற்கு ஒரு காரணம். இது தவிர Production Design, Cinematography (குறிப்பாக Color tone: Bold lead woman, homosexuality, technology, interracial romance போன்ற, படம் நடக்கும் காலகட்டத்தின்படி, futuristic conceptsகள் நிலவும் சீன்களுக்கு, “Green is the future” என்ற வசனத்தின்படி, green color tone அமைக்கப்பட்டிருக்கும். மற்ற சீன்களுக்கு குறிப்பாக வில்லனின் வீட்டில் நடக்கும் சீன்களுக்கு அந்த வண்ணம் இருக்காது. ஏனென்றால் அங்கு நடப்பவை எதுவும் எல்லாம் அந்த காலகட்டத்தோடு ஏறக்கட்டவேண்டிய past elements), நடிப்பு, இசை, இயக்கம் போன்ற அனைத்து துறைகளிலும் படம் சிறந்தே விளங்கியது.




இதெல்லாம் இபபடம் Venice மற்றும் பொதுவாக விமர்சகர்களிடையே வரவேற்பு பெற காரணம். ஆனால் இப்படம் ஆஸ்கார் வென்றதற்கு வேறொரு ஸ்பெஷல் காரணமும் தனியாக இருக்கிறது. Award seasonனை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். சிறிது காலத்துக்கு முன் சாதாரண members தேர்ந்தெடுக்கக்கூடிய விருதுகளான Golden Globes, BAFTA Awards போன்றவற்றில் வெற்றி பெரும் படங்களே பொதுவாக ஆஸ்காரிலும் வெற்றி பெறும். ஆனால் சமீபகாலமாக இவற்றில் வெற்றி பெறாத படங்கள் ஆஸ்காரில் Best Film விருது வென்றிருக்கின்றன. 2014ல் Boyhood, 2015ல் The Revenant, 2016ல் La la land, 2017ல் Three Billboards மற்ற academic விருது விழாக்களில் வெல்ல, ஆஸ்கரில் முறையே Birdman (2014), Spotlight (2015), Moonlight (2016), Shape of Water (2017) வென்றது. இந்த வேறுபாட்டிற்கு முக்கிய காரணம், சமீப காலமாக Best Film ஆஸ்கார் பிரிவுக்கு மட்டும் பிரத்யேகமாக பழக்கத்திலிருக்கும் Preferential Ballot முறை.




ஆஸ்கரின் மற்ற பிரிவுகளுக்கும் இதர academic விருது வழங்கும் விழாக்களின் எல்லா பிரிவுகளுக்கும், தேர்வு முறை ஒன்றுதான். நாமினேட் செய்த படங்களில் ஒரு படத்தை உறுப்பினர்கள் “சிறந்தது” என்று ஓட்டு போடவேண்டும். எது அதிக ஓட்டு பெற்றதோ அதுவே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் ஆஸ்கர் Best film பிரிவுக்கு மட்டும் உபயோகிக்கப்படும் இந்த Preferential Ballot முறைப்படி, உறுப்பினர்கள் நாமினேட் செய்யப்பட்ட அனைத்து படங்களையும் 1,2,3,4… என்று rank செய்யவேண்டும். எந்த படம் 50 சதவீதத்திற்கு மேல் 1st rank பெறுகிறதோ அதுதான் வின்னர். அப்படி எதுவும் மெஜாரிட்டி பெறவில்லையென்றால், கம்மியாக 1st rank பெற்ற படத்தை [உதாரணத்திற்கு Get Out படம்] eliminate செய்து விட்டு, Get Out படத்தை 1st rankகாக தேர்வு செய்தவர்கள் எந்த படத்திற்கு அடுத்த rank கொடுத்தார்களோ அந்தந்த படங்களுக்கு ஒரு ஓட்டு சேர்க்கப்படும். மறுபடியும் மெஜாரிட்டி செக்கிங், 50% இல்லையென்றால் மறுபடியும் elimination என்று மெஜாரிட்டி கிட்டும்வரை இந்த process தொடர்ந்து நடைபெறும். (கொஞ்சம் complicatedதான். May be இந்த வீடியோ பார்த்தால் ஓரளவிற்கு புரியலாம் https://www.youtube.com/watch?v=dPohsrs0cCA). இந்த முறையின் சாராம்சத்தின்படி, divisive movies எனப்படும் “மிகவும் விரும்பப்படும், இல்லை மிகவும் வெறுக்கப்படும்” வகையான படங்களை விட, பெரிதாக யாராலும் விரும்பப்படவில்லையென்றாலும், அனைவராலும் நல்ல படம் என்று பெயரெடுக்கக்கூடிய படங்களுக்கே வெற்றி பெற வாய்ப்பு அதிகம். அதாவது ஒரு படம் 49% 1st rank + 51% 10th rank பெற்றிருந்தது, இரண்டாவது படம் 45% 2nd rank + 55% 3rd rank பெற்றிருந்தால், இரண்டாவது படமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

Racist content மற்றும் சில காரணங்களுக்காக Three Billboards படம் சிலரால் வெறுக்கப்பட்டு கடைசி rank கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கிளாசிக் சினிமாவை காதலித்து அதன் பாணியில் அவற்றை போற்றி மரியாதை செய்யும் வகையில் வரும் நல்ல படங்களை, குறிப்பாக காதலை மய்யமாக கொண்ட nostalgic/fantastical படங்களை (E.g.: The Artist (2011), La la land(2016)), ஆஸ்கர் உறுப்பினர்கள் என்றுமே கைவிடமாட்டார்கள். அந்த வகையில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் விரும்பப்படாமல் போயிருந்தாலும், நிச்சயமாக யாருடைய வெறுப்பையும் சம்பாதித்திருக்க முடியாத Shape of Water படம், ஆஸ்கார் ஜெயிக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்யமான விஷயமாக இருந்திருக்கும்.

முகநூலில்  TOM LEAZAK


Thursday, December 26, 2013

பலிக்குமா கலைஞரின் இந்த கேடுகெட்ட வியூகம்


'காங்கிரசோடும் பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை' என, கருணாநிதி, தன் கட்சி பொதுக்குழுவில், அடித்து சத்தியம் செய்திருக்கிறார். 

கிராமப் புறத்தில், மொடாக் குடிகாரன், 'இனி, நான் குடிக்கமாட்டேன்' என, சத்தியம் செய்தால், 'இது எத்தனையாவது சத்தியம்?' என, பலரும் அவனை கிண்டலடிப்பர். அதுபோல் தான், கருணாநிதியின் சத்தியமும், கேலிக்குரியதாகி உள்ளது. 

ஒவ்வொரு முறையும், 'காங்கிரசுடன் உறவு முறிந்து விட்டது' என, கருணாநிதி அறிவிக்கும் போதெல்லாம், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து, காங்கிரசாரின் உருவ பொம்மையை கொளுத்தி விளையாடுவது வழக்கம். 

கொளுத்திய பட்டாசு அணைவதற்குள், பதவிக்காக, தன் குடும்ப நலனுக்காக, காங்கிரசோடு ஒட்டி உறவாடுகிற நிலையை, கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் எடுத்து விடுவார் கருணாநிதி. 

'இந்திராவிடம், தாயின் அன்பைப் பார்த்தேன், சோனியாவிடம், மகளின் பாசத்தைப் பார்க்கிறேன்' என, சில தினங்களுக்கு முன் உருகினார். சில மாதங்களுக்கு முன், மகள் கனிமொழியின் எம்.பி., பதவிக்காக சோனியாவை, 'மணிமேகலை' என்றார். 'பண்டார பரதேசிகள்' என, அழைத்த, பா.ஜ.,கட்சியுடன் தான், மத்தியில் பேரம் பேசி அமைச்சர் பதவி வாங்கினார். 

அது, காங்கிரசாய் இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், வேறு வழியில் லை. இப்படி, 'உதார்' விட்டால், கிட்டே வரும் உதிரிக் கட்சிகளை வைத்து வென்று, பின், அவற்றை கழற்றி விட்டு, மத்தியில் ஒட்டிக் கொள்ளலாம் என்ற நரித்தந்திரம் தான், கருணாநிதி நினைப்பில் உள்ளது. 

அதனால் தான், 'மத்தியில் அந்தக் கட்சி வருமா? இந்தக் கட்சி வருமா?' என, ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் உட்கார்ந்து, கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்கு என்பது, மொத்த வழக்குகளையும், எப்படி குழிதோண்டி புதைப்பது என்பது தான். இதில், தமிழர் நலன், கட்சி நலன் என்பதெல்லாம், 'டுபாக்கூர்' தான்! 

எது எப்படி போனாலும், இனி வரும் காலங்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தேய்பிறை தான். எத்தனை கூட்டல், கழித்தல், வகுத்தல் போட்டுப் பார்த்தாலும், கருணாநிதியின் கணக்கு, தப்பாகவே இருக்கும். இது சத்தியம். என்.மதியழகன், பெண்ணாடம், கடலூர்.

Tuesday, December 24, 2013

வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?



*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.

Tuesday, October 15, 2013

மறதிக்கு காரணம் இதுதாங்க.. சொன்னா நம்பனும்


சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்' வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் "உள்ளே' தள்ளுகிறோம். இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

அவை:

இனிப்பு வகைகள்:


இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது. இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செயற்கை இனிப்புகளை நாடுகின்றனர். அதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் எடை குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் உடலுக்கு வேறு பல தீங்குகள் ஏற்படுகின்றன. மூளை பாதிப்பு, செயல்பாட்டில் மந்தம் ஆகியவை ஏற்படுகின்றன.


"ஜங் புட்':

கனடாவில் உள்ள மான்டெரல் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஜங் புட்'களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.


வறுத்த உணவுகள்:

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.


அதிக உப்புள்ள உணவுகள்:

உப்பு மனிதனின், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் இயங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்புள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் அறிவாற்றல், சிந்தனைத்திறன், புத்திக் கூர்மை ஆகியவை பாதிக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிக உப்பை பயன்படுத்துவோருக்கும் உண்டாகும். இதனால் உப்பின் அளவை சிறுவயதிலிருந்தே குறைத்து உண்டு வர வேண்டும். வயதானவர்கள் உப்பை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நலம். அதிலும் சிறந்த உப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகள்:


உடலின் செயல்பாட்டுக்கும், தசை வளர்ச்சிக்கும் புரோட்டின் முக்கியம். இருப்பினும் பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான புரோட்டின் உணவுகளே உடலுக்கு நன்மை பயக்கும். செயற்கை புரோட்டின் உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளை செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி ஞாபக மறதியை அதிகரிக்கும்.


கொழுப்பு உணவுகள்:

அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது. உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது கொழுப்பு உணவுகள். முறையற்ற உணவுப்பழக்கத்தால் கொழுப்பு கூடுகிறது. உணவில் கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.


சோடா:

சோடா, குளிர்பானங்களை அதிகளவு அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஞாபக மறதியை அதிகரிக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான இனிப்புகள் உடலின் எடையை கூட்டும். அதிக குளிர்ச்சி மற்றும் சோடாவில் உள்ள ஆசிட் பற்கள், கிட்னியை பாதிக்கும். நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கி ஆஸ்துமா மற்றும் இதயநோய்கள் ஏற்படவும் வழிவகுக்கும். எலும்புகள் வலுவிழந்து போகும். சோடாவில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சோடா அருந்துவதால் பசியின்மை, மந்தம் ஆகியவையும் ஏற்படும். இயற்கையான பழரசங்களை அருந்துவதே உடலுக்கு நன்மை. கண்ணைக் கவரும் வண்ணத்தில் கிடைக்கும் பானங்களால் தீமையே ஏற்படும்.


நிகோடின்:

நிகோடின் உணவு வகையைச் சேர்ந்தது இல்லை. இருப்பினும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், மூளையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவை நிகோடின் தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது. நிகோடின் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளை செயல்பாட்டை தடுக்கிறது. புகைபிடிப்பதால் உடலுக்கு தீமை மட்டுமே ஏற்படுகிறது. இருப்பினும் அதை தொடர்ந்து செய்வது, நமது உடலுக்கு நாமே தீ வைத்துக் கொள்வதற்கு சமம்.


ஆல்கஹால்:

நவீன உலகில் மது அருந்துவது புது கலாசாரமாக மாறி விட்டது. இது மிகவும் அபாயகரமானது. மது அருந்துவதால் உடல் நலம் மட்டுல்லாது மனநலமும் பாதிக்கப்படும். மது அருந்துவது முதலில் கல்லீரலை பாதித்து, ஆயுட்காலத்தை குறைக்கிறது. மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பம், மறதி உண்டாகிறது. தெளிவான சிந்தனை பாதிக்கப்படுகிறது. அதிகம் மது அருந்துவோருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. பரிட்சயமான நபர்களின் பெயர், சொந்த பொருட்கள் கூட மறந்து விடும். மதுவை தொடர்ந்து அருந்துபவர்கள் தங்களது முடிவை தானே தேடிக் கொள்கின்றனர். மது அருந்துவோர் அதை விட்டுவிட்டால், புதுவாழ்வு பெற்றதாக அவர்களே உணர்வர்.

Tuesday, October 8, 2013

இனிமேல் அரசியல் இப்படித்தான் இருக்குமா...?


தமிழக முதல்வராக , காமராஜர் இருந்த போது, அவரது பேரன், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, மருத்துவக்கல்லுரியில் சேருவதற்கு, அவரிடம், சிபாரிசு செய்யச் சொன்னார். 

அதற்கு, காமராஜர், 'நீ என்ன மதிப்பெண் பெற்றுள்ளாயோ, அதற்கு தகுந்த படிப்பில் சேர்ந்து படித்துக் கொள்' என்று, சிபாரிசு செய்ய மறுத்து விட்டார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள், எப்படி தங்களது அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்? 

பிரதமர் வி பி சிங் அமைச்சரவையில், முன்பு சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவரும், தற்போது, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யுமாக இருப்பவருமான, ரஷீத் மசூத், தன் மருமகள் உட்பட, ஒன்பது மாணவர்களுக்கு, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ், தகுதியில்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லுாரி அட்மிஷன், லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இப்படி, நாடு முழுவதும், கடந்த, 30 ஆண்டுகளில், பல துறைகளில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு, அரசு வேலைகளும், பலருக்கு மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில், பல கல்லுாரி படிப்புகளுக்கான சீட்டுகளும் லஞ்சம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சிக்கியவர், எம்.பி., ரஷீத் மட்டுமே. அதிலும், இன்று மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஊழல் என்பது, ராணுவம் வரை புரையோடி கிடக்கிறது. 

இதில், வேடிக்கை என்னவெனில், 'ரஷீத் மசூத் குற்றவாளி' என, நீதிமன்றம் அறிவித்த பின், தண்டனை அளிக்க, சிறப்பு நீதிமன்றம் கூடிய போது, அவரது வழக்கறிஞர், 'என் கட்சிக்காரர், இந்த நாட்டுக்காக, பல ஆண்டுகள் சேவை புரிந்தவர். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. \

தண்டனை விஷயத்தில், அவருக்கு கருணை காட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். ரஷீத் மசூத், 30 ஆண்டுகளாக, அரசியலில் இருப்பவர். ஆனால், சிக்கிக் கொண்டது என்னவோ, இந்த ஊழல் வழக்கில் தான். இன்னும், சிறை செல்ல வேண்டியவர்கள், பலர் உள்ளனர். 

இவர்களா, காமராஜர் ஆட்சியை தரப் போகின்றனர்? தற்போதைய சூழலில், ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை, அரசு கையகப்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

Thursday, October 3, 2013

யானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா..?



பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. 

உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. 

தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை. கூட்டமாக வாழக்கூடியவை. 

ஆண் யானை பருவ வயதை (15) அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும். இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும். வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும். 

யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண் யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத யானைகளை "மக்னா' என்கின்றனர். 

யானையின் வால் அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல் போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.

 இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை. சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும் ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும். மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் "எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது. ஞாபகசக்தி அதிகம். 


மதம் பிடிப்பது ஏன்?

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். யானைகள் சந்திக்கும்


சவால்கள் :

பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. 

ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக் கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும் யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. 


யானையை பாதுகாப்பது முக்கியம் :

யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும். மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம் இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து, அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம் செய்யும் பேருதவி. 

Thanks - டாக்டர் கலைவாணன்,
யானைகள் நல மருத்துவர், தேனி.
மொபைல்: 94434 61712 

Tuesday, October 1, 2013

சர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!


உலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பெயர், ஒன்று கூட இடம்பெற­வில்லை. எப்­படி, தர­வ­ரி­சைப்­பட்­டி­யலை பட்­டியல் இடு­கின்­றனர்? 

பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்றும் ஆசி­ரி­யர்­களின் தகுதி. உல­க­ளவில் புகழ் பெற்­றுள்ள இதழ்­களில், அவர்கள் எழு­திய கட்­டுரை. அக்­கட்­­­­­டு­­­­­ரை­கள், உல­க­ளவு அறி­ஞர்­களால் அங்­கீ­கரிக்­கப்­பட்­டவை. புதிய கண்­டு­பி­டிப்­பு­களின் ஆய்வு அறிக்கை. அப்­பல்­கலைக் கழ­கத்தில் பயிலும், அன்­னிய நாட்டு மாண­வர்­களின் எண்­ணிக்கை. இந்த வகை தகு­தியை வைத்து, தர­வ­ரிசை நிர்­ண­யிக்­கப்­பட்­டன. 


சுதந்­திரம் பெற்று, 66 ஆண்டு கடந்தும், இன்னும் மர­ணப்­ப­டுக்­கை­யி­லி­ருந்து கல்வி எழ அடம்­பி­டிக்கக் ­காரணம், நாம் கல்­வியை போதிக்கக் கூடிய சரி­யான ஆசி­ரியர்­களை தேர்வு செய்­ய­வில்லை என்­பதும், நம்­ கல்வி முறை அறிவை துாண்டும் வித­மாக இல்­லாமல், பியூன் வேலைக்கு தகு­தி­யான முறையில் உள்­ளது என்­பதை மறுப்­ப­­­­­தற்கு இல்லை. 




உல­க­கெங்கும், ஒரு ஆசி­ரி­யருக்கு, 20 மாணவர் என்ற விகிதம் உள்­ளது. ஆனால், இங்கு ஆசி­ரி­ய­ருக்கு, 80 என்ற விகி­தத்தில், 1:80 நிலையில் உள்­ளது. இது தவிர பெரும்­பா­லான கல்­விக்­கூ­டங்­களில், கட்­டட அமைப்பு, விளை­யா­டுத்­திடல், சுகா­தார வசதி, குடிநீர், நுாலகம் ேபான்­றவை இல்லை.


அடிப்­படை கல்­வியை ஒழுங்­கான முறையில் அளிக்­காத ­போது, இவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் என்ன சாதித்து விட­மு­டியும்? ஆசி­ரியர் தகுதி தேர்வு, எப்­படி நடத்­தப்­ப­டு­கி­­­­­றது இங்கே? ஒருவர் அப்­பட்­டத்­திற்­கான தகுதி ­இருக்­கி­றதோ, இல்­­­­­லையோ கையில், பி.ஏ., – எம்.ஏ., – ­எம்.எஸ்சி., என்ற பட்­டத்­துடன், பி.எட்., பட்­டத்­தையும் சேர்த்து சுமக்­கிறோம்.


அரசு இப்­ப­டிப்­பட்ட பட்­டங்­களை நம்­பாமல், அரசு எதற்கும் பயன்­ப­டாத தேர்வு முறையை புகுத்தி, ‘மம்தா பானர்­ஜியின் தாயார் பெயர் என்ன?’ என்ற கேள்­விக்கு யார் சரி­யாக பதிலை அளிக்­கின்றனரோ, அவர்களையே அதி­புத்­தி­சா­லி­க­ளாக நினைத்து, அவர்­க­ளிடம் மாண­வர்­களை ஒப்­ப­டைத்தால், மாணவர் எப்­படி உருப்­ப­டுவர்? 



கடந்த, 1948ல் நம் நாட்டைப் போலவே, நம் எதிரி நாடான சீனா இருந்­தது. ஆனால், அந்­நாட்டில் இயங்கும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் முதல் பத்து இடத்தில் இடம் பெற்­ற­தற்கு என்ன காரணம்? அங்கு, தாய்­மொ­ழி­யா­கிய சீன மொழி­யையே ஆரம்ப கல்வியில் துவங்கி, பல்கலைக்கழகம் வரை படித்து, படிப்பின் தன்­மையை புரிந்து கொண்டு, அவர்கள் நம்மை விட எல்லா வகை­யிலும் முன்­னேற்றம் கண்­டுள்­ளனர்! 


இங்கே படிக்கும் பாடமே எது­வுமே புரி­தல்­ப­டாத மனப்­பாடம் செய்து, செய்த மனப்­பா­டத்தை அப்­ப­டியே ஒரு­வரி பிறழாமல் எழுதி விடுவர். ஒரு வாரம் கழித்து அப்­பா­டத்தை பற்றி கேட்டால் கையை பிசைந்து நிற்பர். எம்.பில்., – பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சிக் கட்­டு­ரைகள், யாரோ ஒருவர் எழுதி தர, அவ­ரிடம் ஒரு குறிப்­பிட்ட பட்­டத்­திற்கு, பணம் கை மாறி­ய­வுடன், அம்­மா­ணவன் இப்­பட்­டத்­திற்கு தகுதியானவர் என்று இங்குள்ள கீழ்தரமான நிலையை அறிந்த பிரான்ஸ் போன்ற நாடுகள், நம் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் அளிக்கும் முனைவர் பட்­டத்தை துாக்கி குப்­பையில் போட்டு விடுகின்றன. 


நம் ஆசி­ரி­யர்­களில், 100க்கு, 90 பேர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தகு­தியே இல்­லா­த­வர்கள் என்­பதை உறு­தி­யாக அறி­யலாம். மாத ஊதியம் மட்டும் இவர்­க­ளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை அரசு கொட்டி அழு­கி­றது. உடல் ஊன­முற்­ற­வனை, ராணுவ வீர­ராக தேர்வு செய்து, லடாக் பகு­தியில் பாது­காப்­பிற்கு நிறுத்­து­வது எப்­படி முட்­டாள்­த­ன­மா­னதோ, அதே போல் தான், ஆசி­ரி­ய­ராக தேர்வு செய்யும் தேர்வு முறையும். 


சீனர்கள் நமக்கு எதி­ரி­யாக இருக்­கலாம். ஆனால், அவர்­க­ளிடம், பால பாடம் படித்து, நம் கல்­வி­யா­ளர்கள் கல்­வி­மு­றையை மாற்­றினால் நல்­லது. இல்­லையேல், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உத­வாத நிலையில் நம் கல்­வியை சமா­தியில் அடக்கம் செய்­யலாம்.

Monday, September 30, 2013

தமிழகத்தில் ஏன் இப்படி மரணங்கள்



தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர், சிறுமியர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். 

தமிழகத்தில் தொடரும் நிகழ்வுகள் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணறு, தேவி என்ற 4 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோல், கரூர் அருகே முத்துலட்சுமி என்ற 7 வயதுச் சிறுமி ஆழ்துளை கிணற்றில் கடந்த ஏப்ரல் மாதம் விழுந்து உயிரிழந்தாள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளத்தூர் கிராமத்தில் குணா என்ற 3 வயதுச் சிறுவன் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கைலாசநாதபுரம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது சுதர்சன் என்ற 5 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். 

இதுபோல் நாடு முழுவதிலும் ஏதும் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பலர் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரை விடும் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 



ஏன் இந்த மரணங்கள்? 

விவசாயத் தேவைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காக இன்று நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து பல பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படாத மற்றும் தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சிலர் அப்படியே விட்டு விடுகின்றனர். 

லட்சக்கணக்கில் செலவு செய்து தோண்டப்படும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகளுக்கு, அந்த கிணறுகளை மூட வேண்டுமானால் மேலும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பலர் அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். வயல்வெளிகளில் விளையாடச் செல்லும் குழந்தைகள் இதுபோன்ற மூடப்படாத கிணறுகளில் தவறி விழுந்து உயிரை விடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

அரசின் கடமை 

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க, பயன்படுத்தப்படாமல் மற்றும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கு குறிப்பிட்ட துறையினரை பொறுப்பாக்க அரசு முன்வரவேண்டும். மரணங்கள் நிகழும் நேரத்தில் மட்டும் அதிரடியாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் அதுபோன்ற கிணறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிறுவர் மரணங்கள் தொடர காரணமாக உள்ளன. கிணறுகளை மூடாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும். 

கண்டுகொள்ளப்படாத உச்ச நீதிமன்ற உத்தரவு 

ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும்போது அது தொடர்பான விவரங்களை தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு, நில உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். 

வெளியாட்கள் யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை திறந்து வைக்காமல், உரிய அளவிலான மூடியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடி விட வேண்டும் என பல வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. 

எனினும் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்திட தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத வரை, தேவியைப் போன்ற சிறுவர், சிறுமியருக்கான ஆபத்து தொடரவே செய்யும்.  (தி ஹிந்து  கட்டுரை)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...