Saturday, March 30, 2013

இது கவனக்குறைவல்ல, அலட்சியம்!

மழை வெள்ளத்தால் குடிசைகள் அடித்துச் செல்லப்படுவதும் மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதும் இயற்கைப் பேரிடர். இதையும்கூட சரியான திட்டமிடல் மூலம் தடுக்க முடியும். இருப்பினும் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல், அணை நீரைத் திறந்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதை ஒரு விபத்து என்று விட்டுவிட்டால் போதுமா? அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டாமா? 

மார்ச் 27-ஆம் தேதி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஒரு தையலர் குடும்பத்தினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இதற்குக் காரணம், பில்லூர் அணையிலிருந்து திடீரென 6,000 கனஅடி தண்ணீர் மின்உற்பத்திக்காகத் திறந்துவிடப்பட்டதுதான். இவர்கள் பவானி ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறி நின்று தப்பிக்க முயன்றும் முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், வண்டிப்பாளையம் அணை நீர் திடீரென 8,000 கனஅடி திறக்கப்பட்டு, அங்கே ஞாயிறு விடுமுறைக்காக குழந்தைகளுடனும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்துடனும் மகிழ்உலா வந்திருந்த இரண்டு குடும்பத்தினரில் 9 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் இறந்தனர். 

இந்தச் சம்பவத்திலும் சொல்லப்பட்ட காரணம், மின்உற்பத்திக்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டோம். எதிர்பாராத வகையில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்பதுதான். 

இவ்வாறு அணையின் நீர் திறக்கும்முன்பாக சங்கொலி எழுப்புவது மரபு. "அதிகாரிகள் ஏன் அவ்வாறு செய்யவில்லை?' என்ற கேள்விக்கு, அன்றைய ஆட்சியர் அளித்த பதில், "உள்ளூர் மக்களுக்கு அணை நீர் திறக்கப்படும் நேரம் தெரியும். பராமரிப்புப் பணிக்காகத்தான் அணையைச் சிறிதுநேரம் மட்டுமே மூடி வைத்திருந்தனர்' என்பதுதான். அணையை பலநாள் மூடிவைத்து திறப்பு விழா செய்தால் மட்டுமே சங்கொலி ஒலிக்கும் என்பதுபோல சித்திரிக்கப்பட்ட இந்தப் பதில், அதிகாரிகளையும் தொடர்புடைய ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவாது. 

2011-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே ஒரு சுற்றுலாத் தலத்தில் மழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 5 பேர் உறவினர்கள் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கோ பல கிலோமீட்டர் தொலைவில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து, இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான தகவலோ, எச்சரிக்கையோ இல்லை. அதை வேண்டுமானால் இயற்கை இடர் என்றோ, விதிப்பயன் என்றோ எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டதா, அணைகளிலிருந்து நீரைத் திறந்து விடும் செயல்? 

ஒரு ரயில் வண்டி ஓட்டுநர்கூட, ஆளில்லா சாலைக்குறுக்குத்தடம் நெருங்கி வரும் முன்பாக ஒலி எழுப்புகிறார். சுமார் ஒரு மைல் தூரத்துக்கும் மேலாக அந்த ஒலி கேட்கும். ஆனால், அணையில் பல ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடும்போது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திறந்துவிடுவார்கள் என்றால், இதை எப்படி அனுமதிப்பது? ஒரு துயரச் சம்பவம் நடந்தபிறகும் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள் என்றால், தவறிழைத்தவர்களை மேலதிகாரிகளும், அரசும் தண்டிக்காமல் காப்பாற்ற முற்படுவதுதான் காரணமாக இருக்க முடியும். 

எல்லா அணைகளிலும் நீர் திறக்கும்போது எவ்வாறு குறைந்த அளவில் தொடங்கி, நீர்அளவைப் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும், எச்சரிக்கை ஒலி எழுப்பத் தேவையான வசதிகளை உருவாக்கித் தருவதற்கும் சட்டப்பேரவை நடைபெறும் இந்த நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வழி காண வேண்டும். முறையான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஒலி இல்லாமல் அணை நீர் திறக்கப்பட்டு அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு அணையின் பொறியாளரைப் பொறுப்பாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுங்கள் என்று மட்டுமே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்கள் அவ்வாறு வெளியேறினார்களா? வெளியேறினால் அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்தவித நடவடிக்கையையும் முன்னெச்சரிக்கையாகச் செய்வதில்லை. குடிசைகளும் மனிதர்களும் அடித்துச்சென்ற பிறகுதான் அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு, அவர்களுககு அரிசி, உணவு, உடை எல்லாமும் வழங்கப்படுகின்றன. முன்னதாகவே இவர்களைக் கட்டாயமாக வெளியேற்றி தங்க இடமும் உணவும் தந்தால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமே! 

ஜனநாயக இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, எந்த அசம்பாவிதத்திற்கும் யாரும் பொறுப்பேற்கவோ அல்லது பொறுப்பாக்கப்படுவதோ இல்லை என்பதுதான். ஓர் அரசு ஊழியர் தவறு செய்தால், அவரைத் தண்டிக்காமல் எப்படி காப்பாற்றுவது என்பதில்தான் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் முனைப்பாக இருப்பார்களே தவிர, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ, நிர்வாகம் சீர்கெடுவதைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது என்பதுதான் யதார்த்த உண்மை. 

அரசு ஊழியரின் குடும்பம் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர, பொதுமக்கள் அவதிப்படுவதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. எதிர்ப்பு வலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போதுகூடக் கடைநிலை ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவார்களே தவிர, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தவறுக்கு தார்மிகப் பொறுப்பேற்றதாக சம்பவம் இதுவரை இல்லை. இந்த நிலைமை மாறாதவரை, அப்பாவி இந்தியக் குடிமகனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் தோன்றவில்லை. 
(தினமணி தலையங்கம்)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...