Tuesday, August 14, 2018

பெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..?


நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கும், அரசியல் ரீதியாக உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது, மிக அவசியம்.அப்படி அதிகாரம் கிடைக்கும் போது தான், அது உண்மையாகவே சிறந்த அரசியலாக இருக்கும்.

ஆனால், தற்போது நாட்டின் பல பகுதிகளில், தங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு கூட, கணவரிடம் ஆலோசிக்கும் நிலையில் தான் பெண்கள் உள்ளனர். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், பதவிக்கு வரும் பெண்களில் பலர், படித்தவர்களாக இருந்தாலும், கணவர், சகோதரர்கள் சொல்படியே செயல்பட்டனர். 

உள்ளாட்சிகளில், கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண்கள், தங்கள் பணி என்ன என்பது கூட தெரியாமல் இருந்தனர். அவர்களின் தந்தை, கணவர், சகோதரர் உள்ளிட்ட ஆண்கள் தான், பல இடங்களில் பெண்களை இயக்கினர்.மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் போது, அந்தந்த கட்சிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோரின் கல்வித் தகுதி, திறமை போன்றவற்றை அலசி ஆராய்ந்து நிறுத்த வேண்டும். 

உறவு அரசியல் முறையை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.பார்லி.,யிலும், சட்டசபையிலும், மகளிருக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. 'நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்' என, மத்தியில் ஆள்வோர் கூறுகின்றனர்.'படித்த பெண்கள், சமூகப் பிரச்னை குறித்து, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல், அடுத்த கட்டத்துக்கும் வர வேண்டும். 

சாமானிய பெண்கள், இடஒதுக்கீட்டால், அரசியலில் ஈடுபட்டு விட முடியாது. 'அரசியல்வாதிகளின் மனைவியரும், மகன்களும் மிக எளிதாக அரசியலுக்கு வருவதற்கு மட்டுமே, 33 சதவீத இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கும்' என, தேசிய மகளிர் ஆணையத் தலைவி, ரேகா சர்மா கூறியுள்ளார். அவரது கூற்றையும், ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளது. எனவே, பெண்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகாரத்தை, யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது!---
அ.சரவணன், பெங்களூர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...