மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகைகள் கேத்ரினா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கேத்ரினா கைப், லண்டனைச் சேர்ந்தவர். இவரது தந்தை காஷ்மீரி இந்தியர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வரும் கேத்ரினா கைப், படம் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘தீஸ் மார் கான்’ என்ற இந்திப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. இதே போல் மற்றொரு முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்று திரைப்படங்களில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு உரிய வரி கட்டப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடிகைகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை.
No comments:
Post a Comment