தமிழ் சினிமாவில் மதுரையை களமாய் எடுத்துக் கொள்கிறவர்களில் பல பேர் ஏதோ அவ்வூர்காரர்கள் எல்லா நேரத்திலும் அரிவாளும் கையுமாகவே திரிவார்கள் என்ற எண்ணத்தை ஏறபடுத்தி, கும்பல் கும்பலாய் நாலைந்து பேர் ‘வந்திட்டாய்ங்க. போய்ட்டாய்ங்க” என்று பேசிக் கொண்டலைபவர்களாகவும்,, லைவாய் படமெடுக்கிறேன் என்று யாரையாவது நடுரோட்டில் லந்து கொடுத்துக் கொண்டும் அலைபவர்களாக நினைத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டிருக்க, அதே நினைப்புடன் படம் பார்க்க போனால் நிச்சயம் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும்.
சேவல் சண்டையை பல மதுரை பேஸ்டு படங்களில் ஏற்கனவே வைத்திருந்தாலும் அதையே கதை களமாய் வைத்துப் போடப்படும் சண்டையை திரைக்கதையாய் அமைத்து, அதனூடே மனித மனங்களின் சேவல் ச்ண்டைகளையும், அதன் நுண்ணிய உணர்வுகளையும் ஊடே நுழைத்து பயணித்திருக்கும் படம் தான் ஆடுகளம். இயக்குனர் வெற்றிமாறன் நின்று ஆடியிருக்கிறார் பல இடங்களில்.
பேட்டைக்காரருக்கும், ரத்தினம் டீமிற்கும் சேவல் சண்டையில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு முக்கிய பிரச்சனையில் மீண்டும் போட்டி வெடிக்கிறது. அதில் பேட்டைக்காரனின் சிஷ்யனின் சேவலை அதுவும் ஏற்கனவே பேட்டைக்காரர் கொல்லும் படி சொன்ன சேவலை அவர் கொல்லாமல் வளர்த்துவந்து அதை வைத்து ஒரு பெரிய அமெளண்ட்டை வெற்றி பெருகிறார். அந்த வெற்றி அவர் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போட்டது என்பதுதான் கதை. பார்க்க, கேட்க சிம்பிளாக இருந்தாலும் ரத்னம், பேட்டைக்காரர், கருப்பு, பேட்டைக்காரர் பெண்டாட்டி அத்தாச்சி, துரை, கருப்பின் நண்பன் இவர்களுக்குள் இருக்கும் பகை, பகை முடிக்க அவர்கள் தீட்டும் சதி, வன்மம் எல்லாம் சேர்த்து திரைக்கதையாக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ஆழமான ஒரு கேரிக்கேட்சரை உருவாக்கி அதை நம் மனதில் பதியவைத்தாலே ஒழிய, நிற்காது.
சேவச் சண்டையையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் பேட்டைக்காரர், அவரின் மேல், அவர் திறமையின் மேல் காதல் கொண்டு எல்லோரையும் விட்டு வந்த அவரது இளம் மனைவி, ஒயின் ஷாப் பார் நடத்தும் கிஷோர், எந்த விதமான கவலையுமில்லாமல் அண்ணே.. அண்ணே என்று அவர் பின்னாலேயே அலையும் கருப்பு தனுஷ், காமெடிக்காக வைக்கப்படும் நண்பன் கேரக்டர் போலில்லாமல் கூட அலையும் நண்பன் கேரக்டர், ஆங்கிலோ இந்தியன் தப்ஸி, அவரின் பாட்டி, அவர்களின் நண்பரான ஜெயப்பிரகாஷ் என்று ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதை நாயகன் என்று சொல்லப்போனால் அது பேட்டைகாரர் ஜெயபால் தான். அந்த அடந்த மீசைக்குள் புதைந்திருக்கும் முகமும், அந்த கண்களும், பல இடங்களில் நடிப்பது தெரியாமல் நடித்திருக்கிறார். முக்கியமாய் அந்த சேவல் சண்டைக் காட்சியில் தன் வித்தை மேல் இருக்கும் அசகாய நம்பிக்கையில் ஏன் அந்த சேவலை அறுத்து போடலைன்னு கேட்பதும், அதே சேவல் தொடர்ந்து ஜெயிக்கும் போது தன் பெயர் சொல்லித்தான் ஜெயிக்கிறான் என்றாலும், தன் கணிப்பு மாறிப் போய்விட்டதே என்று மருகுவதும், அந்த மருகல் கொஞ்சம், கொஞ்சமாய் பொறாமை ஆவதும், தன் பெருமை குறைந்துவிட்டதாய் காம்ப்ளெக்ஸில் இறுகிப் போய் நிற்குமிடத்தில் எல்லாம் ஜெயபால் மின்னுகிறார். இவர் நடித்ததை விட ராதாரவி அவரின் குரலில் நடித்தது அதிகம். அவர் முகம் காட்ட வேண்டிய உணர்வுகளை சின்ன சின்ன பாஸ்களிலும், மாடுலேஷனிலும் பேசி நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல கிஷோருக்கு குரல் கொடுத்திருக்கும் சமுத்திரக்கனியையும் பாராட்ட வேண்டும்.
தனுஷ் படம் பூராவும் சின்னச் சின்ன ரியாக்ஷன்களில் கூட மிளிர்கிறார். வேட்டைக்காரனிடம் காட்டும் பவ்யமாகட்டும், மதுரை ஸ்லாங்காகட்டும், அதே வேட்டைக்காரனிடம் தன் சேவல் பந்தயம் ஜெயிக்கும் என்று கொஞ்சம் தைரியமாய் சொல்லுமிடமாகட்டும், ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் பின்னால் சுற்றி, அங்கிருக்கும் லோக்கல் பஞ்சாயத்து ரவுடியின் முன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் என்று சொன்னதும் முகத்தில் காட்டும் ரியாக்ஷனாகட்டும், தனுஷ் பல இடங்களில் தூள் பரத்துகிறார். முக்கியமாய் இரண்டாவது பாதியில் அவர் வாழ்க்கையில் எதிர்பார்க்காத நிகழ்வுகளாய் நடக்கும் போது மிகவும் வெள்ளெந்தியாய் அதை எதிர்த்து போராடுவதும், யார் காரணம் என்று தெரிந்து கொண்டவுடன் அந்த அதிர்ச்சியுடன், ஏதும் செய்ய முடியாத இயலாமையையுடன் பேசும் காட்சியில் உருக்குறார். என்ன மொத்தமாய் ஒரு லெக் பீஸ் அளவுக்கு இருந்து கொண்டு பத்து பேரை போட்டு துவைப்பது எல்லாம் தான் கொஞ்சம் ஓவராய் இருக்கிறது.
தப்ஸி ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கு சரியான தீர்வு. திரிஷாவை விட இவர் சரியாக பொருந்துகிறார். படத்தில் எனக்கு ஒட்டாத ஒரு விஷயமே தனுஷ், தப்ஸியின் காதல் தான். பெரிதாய் ஏதும் இம்பாக்ட் இல்லாத ஒரு ட்ராக்காகத்தான் தோன்றுகிறது. கமர்ஷியல் வேல்யூவுக்காக வைக்கப்பட்டது அதற்கு ஏற்றார் போல அமைந்துவிட்டது.
டெக்னிக்கலாக சொல்ல வேண்டுமென்றால் வேல்ராஜின் ஒளிப்பதிவு மிகவும் லைவ்வாக இருக்கிறது. குறிப்பாய் சேவல் சண்டைக்காட்சிகளிலும், இரவில் நடக்கும்சண்டைக்காட்சிகளிலும். சேவல் சண்டைக்காட்சிகள் முழுவதும் சி.ஜியில் செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே தெரிந்தாலும் பாராட்டபட வேண்டிய ஒர்க். ரத்தம் சொட்டுவது எல்லாம் தான் கொஞ்சம் ஓவராய் இருந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் ஏற்கனவே “யாத்தே..யாத்தே” பாடல் ஹிட் அதை படமாக்கியிருக்கும் விதமும் நச்சுன்னு இருக்கிறது. பின்னணியிசையிலும் ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறார். முக்கியமாய் இண்டர்வெல் சேவல் சண்டைக்காட்சிகளில்.
எழுதி இயக்கிய வெற்றி மாறனுக்கு இரண்டாவது படம். பொல்லாதவனின் ஹாங் ஓவரிலிருந்து ஆரம்பிக்கிறது இப்படமும். ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களம், சேவல் சண்டைப் பற்றிய நுணுக்கங்கள், முக்கிய கேரக்டர்களில்லாமல் ரத்னம், அவருடய அம்மா, பேட்டைக்காரரின் மனைவி, ஆங்கிலோ இந்திய ஏரியாவில் உதார் விடும் ரவுடி, என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஆரம்பிக்கும் போது என்னடா திரும்ப, திரும்ப சேவ்ச்சண்டை என்று வருகிறது என்று ஆயாசப்பட ஆரம்பிக்கும் போது மனித மனங்களின் சண்டை ஆரம்பிக்க, சூடு பிடிக்க ஆரம்பித்தது முடிவு வரை குறையவேயில்லை. என்ன ஆங்காங்கே வரும் பாசக்காட்சிகள், காதல் காட்சிகள் கொஞ்சம் ஸ்பீட் ப்ரேக்கராய்தான் தெரிகிறது. அதே போல க்ளைமாக்ஸும் படு சினிமாவாக இருப்பது கொஞ்சம் நிரடத்தான் செய்கிறது. இவ்வளவு பரபரப்பான கதைக்களனில் மிக நுணுக்கமான மன உணர்வுகளை வைத்து ஆட நல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியம் உள்ள வெற்றி மாறனுக்கு மீண்டும் வெற்றி கிடைத்திருப்பது ஒன்று அதிசயமில்லை.
ஆடுகளம் – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்
No comments:
Post a Comment