Friday, March 23, 2012

தமிழ் ஈழம் பிறக்க வேண்டும், அதுதான் எனது வாழ்நாள் லட்சியம்- கருணாநிதி


தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தியைத் தொடர்ந்து செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...

கேள்வி: ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்தமாதிரியான நெருக்கடி ஏற்படும்?

கருணாநிதி: இப்போதே மிரட்டல், பயமுறுத்தல்கள் எல்லாம் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு அங்கேயுள்ள சிங்களவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. இதன்மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய பிரதமருக்கு "பேக்ஸ்'' மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன்.

கேள்வி: ஜெனீவாவில் இந்தத் தீர்மானத்தில் இருந்த கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு மென்மையான வார்த்தைகளை தீர்மானத்தில் சேர்த்ததாகவும் சொல்கிறார்களே? குறிப்பாக முதலில் "போர்க்குற்றங்கள்'' என்ற வார்த்தைகள் இருந்ததாகவும், பின்னர் அதை எடுத்து விட்டதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அது உண்மையாக இருந்தால் அதைப் பற்றிய திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

கேள்வி: மத்திய அரசு தற்போது இந்த முடிவினை எடுக்க தி.மு.கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதிரியான அழுத்தத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கொடுத்திருக்கலாமே?

கருணாநிதி: கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது கூட நாடறிந்த உண்மை.

கேள்வி: உலகத்தின் பார்வை ஒட்டுமொத்தமாக இதிலே திரும்பியிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கருணாநிதி: என்னைப் பொறுத்தவரையில் அது தான் குறிக்கோள். நான் அண்மையிலே என்று மாத்திரமல்ல, கடந்த காலத்திலே பெரிய பத்திரிகைகளின் நிருபர்கள் சில பேர் "உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன'' என்று என்னிடம் கேட்ட போது, "தமிழ் ஈழம் தான்'' என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அந்த கனவு நிறைவேறுகிற வரை, அது உருவாகிற அளவுக்கு என்னுடைய போராட்டமும் இருக்கும்.

கேள்வி: தற்போது ஐ.நா. வில் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் இந்திய, இலங்கை உறவுகள் பாதிக்காதா?

கருணாநிதி: இப்போது அதைப்பற்றியெல்லாம் சொல்ல முடியாது.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு இனி மத்திய அரசு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய வேண்டும்?

கருணாநிதி: இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: அமெரிக்கா கொண்டு வந்ததால் தான் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதா?

கருணாநிதி: இந்தத் தீர்மானம் வந்ததால் வெற்றி பெற்றது.

கேள்வி: தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இலங்கை அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் ஏற்படும்? இலங்கைத் தமிழர்களுக்கு என்னென்ன பயன்கள் ஏற்படும்?

கருணாநிதி: அவர்கள் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள். சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.

கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே தான் கொடுமைகளுக்கெல்லாம் காரணம், அவர் சர்வ தேச குற்றவாளி என்று தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே?

கருணாநிதி: இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...