பெரும்பாலும் பெற்றோர் ஈடுபடுகின்ற பணியிலே தான் வாரிசுகளும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவருடைய அன்னையார் திரைப்படத்திலே நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் திரைப்படத்திலே நடிக்கவில்லையா? அதன் பிறகு தானே அவர்தன் தொழிலை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வந்தார் என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட மிக நீளமான அறிக்கைக்குப் பதில் அறிக்கையாக தானும் ஒரு நீளமான பதிலறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அந்த கேள்வி பதில் பாணி அறிக்கை...
கேள்வி: தங்கள் மகளை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ்கட்சிக்கு நீங்கள் தூது அனுப்பியபோது, "பார்லிமெண்டில் உணவு மசோதா,நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் முயற்சிஎடுக்கும்போது குறுக்கே நிற்கக் கூடாது" என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்ததாகவும், நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் உள்ள உண்மைநிலையை நீங்கள் தான் விளக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தன்அறிக்கையில் கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி: பாவம், ஒரு முதலமைச்சர், தன்னிடமுள்ள நிர்வாக இயந்திரங்களின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏடுகளிலே வெளிவரும் யூகச் செய்திகளை நம்பி அரசியலை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டாரே? முதல்வர் கூறியுள்ள பத்திரிகைச் செய்திகள்அனைத்தும் உண்மைக்கு மாறானவை. அதிலே எள்ளளவு கூட உண்மையில்லை. காங்கிரசும் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. காங்கிரஸ்கட்சியின் பொறுப்பாளர், முகுல் வாஸ்னிக் அவர்களே இதைப் பற்றி,காங்கிரஸ் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்பதை அந்தநேரத்திலேயே தெளிவுபடுத்தி; அது ஏடுகளிலேயே வெளிவந்திருக்கிறது.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இன்று (11-8-2013) விடுத்துள்ளஅறிக்கைகளில், உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கான திருத்தங்களை திமுக நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா? என்று கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி: முதல்வரா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்? கடந்த 7-8-2013 அன்றே இந்த மசோதாவிற்கான திருத்தங்களை திமுக சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கொடுத்துவிட்டாரே! அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஒரு முதல்வர் 10ஆம்தேதி அறிக்கையிலே; அதை ஒரு கேள்வியாக என்னிடம் கேட்டிருக்கிறாரே,அதற்காக நான் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை! பாவம்! அந்தச்செய்தி கொடநாடு வரையிலே எட்டவில்லை போலும்!
கேள்வி: நீங்கள் முன்பு கொடுத்த அறிக்கையிலே, "மசோதாவினை திமுக எதிர்க்கும் என்ற வாசகங்கள் இடம் பெறவில்லை" என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: அவர் கூறுகின்ற எனது அறிக்கையிலே எங்கேயாவது மசோதாவினை திமுக ஆதரிக்கும் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறதா? ஜெயலலிதா 2-8-2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் போதுகூட; "மசோதாவை அதிமுக எதிர்க்கும்" என்று தெரிவித்திருக்கிறாரா என்றால் கிடையாது, கிடையாது, கிடையவே கிடையாது.
மாறாக கடைசி பத்திஎன்னவென்றால், "Hence, I strongly urge you to ensure that the concerns of Tamil Nadu are addressed through the inclusion of the appropriate amendments in the Bill that the Government of India intends to place before Parliament to replace the Food Security Ordinance" என்பது தான். அதாவது இந்த மசோதாவில் தேவையானதிருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதையே தான் நானும் என்னுடைய "உடன்பிறப்பு" மடலில், "அவசர, அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப கொண்டு வர மத்திய அரசு முன்வரவேண்டும். மாநில உரிமைகளுக்கு இம்மியளவு பாதிப்பும் ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்" என்று எழுதியிருக்கிறேன்.
கேள்வி :- இதே வடிவில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீது வாக்கெடுப்புநடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா என்று ஜெயலலிதாகேள்வி கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி: தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை திமுக ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல்,இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை திமுக எதிர்க்கும். முதல்வர் ஜெயலலிதா இனியாவது தெளிவு பெறுவாரா?
கேள்வி: உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நீங்கள் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக திரும்பத் திரும்ப எழுதிய பிறகும் முதல்வர் ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதைப் பற்றி?
கருணாநிதி: பொதுவாக அவருக்கு அன்றாடம், அவர் பெயரில் ஏதாவதுஅறிவிப்பு வெளிவரவேண்டும்; அல்லது அறிக்கை வெளி வரவேண்டும். பேரவை நடைபெற்றாலாவது, 110வது விதியின் கீழ் ஏதாவது அறிக்கையைப் படிக்கலாம். தற்போது அதற்கு வழியில்லை என்பதால், தினமும் ஏதாவது அறிக்கை விடுகிறார். உணவுப் பாதுகாப்பு மசோதாவில் பல சாதக பாதகங்கள் இருக்கலாம். அதனால் தான் தொடக்கத்திலேயே அதைப்பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தச் சட்டத்தினால் வரக் கூடிய பாதகங்களை முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மசோதாவின் நன்மைகளை மத்திய அரசின் சார்பில் கூறுகிறார்கள். இதிலேமுக்கியமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு விடக் கூடாது என்பதைத் தான்நான் சுட்டிக் காட்டியுள்ளேன். அதையும் மீறி இந்த மசோதா இப்போதுள்ள வடிவிலேயே கொண்டு வரப்படுமேயானால் அதை நாங்கள் ஏற்க முடியாதுஎன்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இதற்குப் பிறகும் கிராமங்களில் "காமன்" பண்டிகைகளில் எரிந்த கட்சி - எரியாத கட்சி என்றுபோட்டி போட்டுக் கொண்டு பாடுகின்ற அதே "மெட்"டில் ஜெயலலிதா அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத் தக்கது மாத்திரமல்ல; ஒரு முதல்வர் இந்த அளவிற்கு இறங்கியிருக்கிறாரே என்ற வருத்தத்தையும் தரத் தக்கதுமாகும்.
கேள்வி: குடும்பத்தினரைப் பற்றி ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் சுட்டிக் காட்டுவதைப் பற்றி நீங்கள் கேட்டதற்கு, உங்கள் குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன் என எல்லோருமே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கழகமே குடும்பம் என்றிருந்த நிலைமை மாறி குடும்பமே கழகம் என்று ஆகி விட்ட நிலையில் குடும்பத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது எப்படி என்று ஜெயலலிதா கேட்கிறாரே?
கருணாநிதி: குடும்பத்திலே உள்ளவர்கள் அரசியலிலே ஈடுபட்டிருக்கும்போது, அவர்கள் தவறு செய்தால், அதைப்பற்றிப் பேசுவதிலே தவறில்லை. ஆனால் இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டிப் பேசக் கூடாதல்லவா? மேலும் நான் அரசியலிலே இருப்பதால், என்னுடைய குடும்பத்தினரில் சிலர் அரசியலிலே ஈடுபடுகிறார்கள்.
இந்திய அரசியலில் எடுத்துக் கொண்டால் நேரு குடும்பத்திலே தொடங்கி, அரசியல் தலைவர்கள் பலரது குடும்பங்களில், அவரவர் குடும்பத்தினர் அரசியலில் ஈடுபட்டுத் தான் வருகிறார்கள். என் குடும்பம் மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை! பெரும்பாலும் பெற்றோர் ஈடுபடுகின்ற பணியிலே தான் வாரிசுகளும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவருடைய அன்னையார் திரைப்படத்திலே நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் திரைப்படத்திலே நடிக்கவில்லையா? அதன் பிறகு தானே அவர்தன் தொழிலை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வந்தார்!
கேள்வி: சில்லரை வணிகத்தில் அந்நியப் பெரும் நிறுவனங்களைஅனுமதிக்க முடிவு செய்த இந்திய அரசைக் கண்டித்து நீங்கள் கூறிய போதிலும், நாடாளுமன்றத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக திமுகஉறுப்பினர்கள் வாக்களித்ததைச் சுட்டிக்காட்டி, இது துரோகம் இல்லையா? இரட்டை வேடம் இல்லையா? என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி: நான் அப்போதே வெளியிட்ட எனது அறிக்கையின் தொடக்கத்திலேயே தெளிவாக சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறேன். தமிழகத்திலே அப்படிப்பட்ட நிலை இல்லை என்று தமிழக முதல்வரே சொல்லி விட்டதால், இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவிதமானஆபத்தும் ஏற்படாது என்பதால்தான், மத்தியில் நிலையான அரசு வேண்டும்என்பதை மட்டும் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய அரசை தி.மு. கழகம்ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறேன். அப்போது மாத்திரமல்ல; அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளிலே கூட சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டினை எதிர்த்துத் தான் கருத்துகளை வெளியிட்டிருக்கிறேன்.
அப்போது தி.மு. கழகம் காங்கிரஸ் கட்சியோடு ஓரணியில் இருந்து, மத்திய ஆட்சியில்கூட்டுப் பொறுப்போடு செயல் பட்டதால், கூட்டணிக்குத் துரோகம் செய்யாமல் வாக்குப் பதிவின் போது அவ்வாறு நடந்து கொண்டது என்பதை அப்போதும்,இப்போதும் தெளிவாக்கிட விரும்புகிறேன். அதற்கான காரணத்தையும்அப்போதே விளக்கியிருக்கிறேன். இது ஒன்றும் துரோகமோ, இரட்டை வேடமோகிடையாது. கூட்டணிக் கட்சியை ஆதரிக்காமல் விட்டிருந்தால் தான் அதுஅரசியல் துரோகமாகக் கருதப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
கேள்வி :- நீங்கள் தெளிவாக நீண்ட விளக்கங்கள் அளித்த பிறகும்,அதைப் படிக்காமலேயே முதல்வர் ஜெயலலிதா ஏழு கேள்விகளைக்கேட்டிருக்கிறாரே? அதில் உணவு பாதுகாப்புச் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் அரிசி ஒரு லட்சம் டன் அளவுக்கு குறைக்கப்பட்டு விடும் என்பது தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி: முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ள ஏழு கேள்விகளுக்கும்அவர் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் பதிலளித்திருக்கிறேன். அந்தப் பதிலைமுழுமையாகப் படிக்காமலேயே திரும்பவும் அதைக் கேட்டால் நான் என்ன செய்வது? உதாரணமாக, நான் என்னுடைய அறிக்கையில், "தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை இந்த மசோதா காரணமாகத் தமிழகத்தில் ஏற்கனவேநடைமுறையில் இருந்து வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும், யாருக்கும் பாதிப்பு கூடாதுஎன்பதிலும், மாநில உரிமைகள் பறி போய் விடக் கூடாது என்பதிலும் உறுதியாகஇருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இதற்கு மேலும் முதல்வர் தெளிவு பெறவில்லையே; ஏன் என்று தான் புரியவில்லை. தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம்; ஆனால் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் லலிதாக்களை எழுப்பவே முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
No comments:
Post a Comment