Thursday, August 8, 2013

டாஸ்மாக் போல இதுக்கும் அரசே விலை நிர்ணயிக்குமா...?



இன்று, மனிதனின் வாழ்க்கையில், முக்கிய அங்கம் வகிப்பது மருந்து. ஒரு நாள் உணவில்லாமல், மனைவி இல்லாமல் கூட இருக்க முடியும். ஆனால், மருந்தில்லாமல் வாழ முடியாது. நோய்கள் பெருகி, அதற்கேற்றாற்போல் மருந்துகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. 

ஆனால், மருந்துகளின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி, இதய நோய், சிறுநீரக பிரச்னை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு, வாழ்நாள் முழுவதும், மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். 

இந்த மருந்துகளை வாங்கும் போது, அதன் விலையைக் கேட்டால், தலைச் சுற்றல் வருகிறது. சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும், "இன்சுலின்' முன்பு, 70 ரூபாய்க்கு விற்றது, இன்று, 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வயதானவர்கள் இரண்டு பேருக்கு, குறைந்தபட்சம், மாதம், 4,000 முதல், 5,000 ரூபாய் வரை, மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது. 

பெரும்பாலான மருந்து கடைகளில், எம்.ஆர்.பி., விலைக்கு மேல், 6 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதை, யாருமே கண்டு கொள்வதில்லை.

அரசு, உப்புச் சப்பில்லாத சாதாரண விஷயங்களுக்கெல்லாம், முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் போது, மருந்து விஷயத்தை, ஏன் கவனிக்காமல் விட்டு வைத்துள்ளது?

"அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், கணிசமாகக் குறைக்கப்படும்' என்று, 2006 முதல், அரசு சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், மாதா மாதம், விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 



இந்த லட்சணத்தில், போலி மருந்து தயாரித்து, மக்களை ஏமாற்றி, கொள்ளை லாபம் அடிக்கும் கும்பல் வேறு. மகாராஷ்டிராவில் விற்கப்படும் மருந்துகளில், 40 சதவீதம், போலி மருந்துகள் தான் என்று, மருந்துக் கடைக்காரர்களே கூறு கின்றனர். இதெல்லாம், அரசுக்குத் தெரியாதா? 

மத்திய அரசு, உடனடியாக, இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, போலிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். முக்கியமான மருந்துகளுக்கு, அரசே விலையை நிர்ணயித்து, மருந்து கம்பெனிகளுடன் கலந்து பேசி, முடிவெடுக்க வேண்டும். நிர்ணய விலைக்கு மேல் விற்கும் மருந்துக் கடைகளுக்கு, "சீல்' வைக்க வேண்டும்.

2 comments:

  1. சரியான வாதம்

    ReplyDelete
  2. வயதானவர்கள் இரண்டு பேருக்கு, குறைந்தபட்சம், மாதம், 4,000 முதல், 5,000 ரூபாய் வரை, மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது. //

    ஆமாங்க. பென்ஷன் மட்டும் இல்லைன்னா என் போன்றவர்களுடைய பாடு பெரும்பாடுதான்.

    என்னென்னமோ திட்டங்கள கொண்டு வராங்க. இந்த மருந்து கம்பெனிகளோட கொள்ளை லாபம் அடிக்கற போக்கை எப்பத்தான் நிறுத்தப் போறாங்களோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...