Showing posts with label ஜென் கதைகள். Show all posts
Showing posts with label ஜென் கதைகள். Show all posts

Sunday, August 18, 2013

இப்படி செய்தால் தெளிவு கிடைக்குமா.,?


அவர் ஒரு அரசியல்வாதி. ஊரில் பெரிய மனிதன். எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.

அவரும் சில பிரார்த்தனைகளையும். பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார். 

சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன், ''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.

உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.

அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. ''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்க, குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,'' என்றார்.

''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார். 

அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார். பத்து நிமிடம் ஆயிற்று. கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம். 

அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று, ''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?'' என்று கேட்டார்.

வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?'' என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள். நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்'' உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார், ''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

Saturday, July 13, 2013

இதற்கு அர்த்தம் இதுதானா....? அப்ப சரிங்க..!


ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான். 

அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார். 

அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. 

"என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். 

அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். 

அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். 

எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும். அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...