Saturday, June 25, 2011

180 - திரைவிமர்சனம்


கங்கை ஆற்றங்கரையில் தன் தந்தையின் இறுதிக்காரியங்களை செய்கிறார் மனோவாக வரும் சித்தார்த். அதே போல ஒரு சிறுவனும் அவனது தந்தைக்கு இறுதிக்காரியங்களை செய்கிறான்.

அது முடிந்ததும் தனது பொம்மை காரோடு விளையாடப் போய்விடுகிறான். இதைக் காணும் மனோ, வாழ்க்கையில் மரணம் என்பது வரத்தான் செய்யும், ஆதலால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறார்.

 சென்னைக்கு வரும் மனோ மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகை நிருபராக இருக்கும் வித்யா (நித்யா மேனன்) மனோவை சந்திக்கிறார். சில சந்திப்புகளில் மனோ மேல் காதல் கொள்கிறார் வித்யா. தன் காதலை மனோவிடம் சொல்ல, அதை சில காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார். அவரை ஒதுக்கவும் செய்கிறார்.

இதனிடையே ஒரு ஆக்சிடெண்டில் வித்யா சிக்கிக் கொள்கிறார். அவரது மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கூட்டிச் செல்லும் பொறுப்பு மனோவின் மேல் விழுகிறது. வேறு வழியின்றி கூட்டிச் செல்கிறார்.

அப்போது ஒரு பிளாஷ் பேக் வருகிறது – அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் மருத்துவராக பணியாற்றுகிறார் அஜய் (சித்தார்த்). அங்கு ரேணுகாவை (பிரியா ஆனந்த்) சந்திக்கிறார். இருவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் செய்துகொள்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு அஜய் தற்கொலை செய்துகொள்கிறார். - பிளாஷ்பேக் முடிகிறது.

மனோ அமெரிக்காவிற்கு வித்யாவோடு வருகிறார். அங்கே அவரை ரேணுகா பார்த்து விடுகிறார்.

மனோ, வித்யாவின் காதலை ஏன் மறுத்தார்? அஜய் தற்கொலை செய்து கொண்டது ஏன்? ரேணுகாவின் நிலை என்ன? என்பதை சுவாரசியமாகக் காட்டி சுபம் போட்டிருக்கிறார்கள்.

சென்னை மாடர்ன் பையன் மனோவாக வருவதிலும், அமெரிக்க மருத்துவர் அஜயாக வருவதிலும் வித்தியாசத்தைக் காட்டி நடித்திருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சித்தார்த்
.
பிரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் அசத்துகிறார்கள். காதல் வயப்படும் காட்சிகளில் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், தன் கணவனை மீண்டும் காணும் போது ஏற்படும் உணர்ச்சிகளை பிரியா ஆனந்த் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சந்திரமௌலி தன்பங்கிற்கு தனது காட்சிகளை நிறைவாகச் செய்திருக்கிறார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 180 டிகிரி கோணங்களைப் போல அவரது கேமரா கங்கை, சென்னை, அமெரிக்கா என கண்டம் தாண்டியும், கடல் தாண்டியும் விரிகிறது. காட்சிகள் கண்களில் நிறைகிறது.

ரெட் டிஜிட்டல் கேமராவில் சுட்டுத் தள்ளிய காட்சிகள் அனைத்தும், நேரில் பார்த்து ரசிப்பது போல் நம் கண்களில் இயல்பான காட்சிகளாக விரிகிறது. ஷரத்தின் பின்னணி இசை படத்திற்கு இதமாய் இருக்கிறது. பாடல்களும் நன்று.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. அந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை என்றே சொல்லவேண்டும். சுபாவின் வசனங்கள் சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன.

மொத்ததில் நகரவாசிகளை ரசிக்க வைக்கும் படமாக நூற்றெண்பதை வடிமைத்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...