ஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள்பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவிற்கு ஒப்பனை என்பது அனைவரின் அங்கமாகி வருகிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் சந்தைகளில் மேக் அப் சாதனங்கள் குவிந்துள்ளன. ஒருவர் மேக் அப் போடுவதை வைத்தே அவரின் குணத்தை கண்டு கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
முகத்திற்கு கொஞ்சம் பவுடர், லிப்ஸ்டிக் என சிறிதளவு மேக்அப் போட்டுக்கொண்டாலே பெண்களின் அழகை உயர்த்திக் காட்டும். ஆனால் ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேக்அப் சாதனங்களை பயன்படுத்தினால் தான் திருப்தியாக இருக்கும். எனவே மேக்அப் போட்டுக்கொள்ளும் பொருளின் அளவை தவிர்த்து, மேக்அப் போட்டுக்கொள்ளும் ஒருவரது ஆர்வத்தை வைத்து அவரது குணத்தை கண்டறியலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதன்படி, மேக்அப் போட்டுக் கொள்பவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
அனைத்திலும் கச்சிதம்
ஒருசிலர் மேக்அப் இல்லாமல் வெளியில் தலை காட்ட மாட்டார்கள். அதாவது, வீட்டுக் குள்ளும் கூட இவர்கள் பெரும்பாலான நேரங்களில் மேக்அப்புடன் தான் இருப்பார்கள். வீட்டை விட்டு வெளியில் கால் வைத்தாலே மேக்அப் சகிதமாகத் தான் புறப்படுவார்கள். போட்டிருக்கும் மேக்அப் எப்படி இருக்கிறது? என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வார்கள். மேக்அப் கொஞ்சம் கலைந்திருந்தாலே உடனடியாக, சரி செய்து விட்டுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவார்கள்.
இந்த வகையினர் பழகுவதில் கெட்டிக்காரர்கள். ஆண், பெண் பேதமின்றி எல்லோரிடமும் நட்புடன் பழகக் கூடியவர்கள். எப்போதும் இவர்களது முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டே இருக்கும். தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று நினைப்பார்கள். ஏதாவது ஒரு வேலையை தாங்களாகவே இவர்கள் செய்ய விரும்பினால் , அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி கன கச்சிதமாக செய்து முடிப்பார்கள். அடுத்தவர்கள் வேலையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆடையிலும் அசத்தல்
இவர்கள் ஆடை விஷயத்திலும் அசத்தி விடுவார்கள். எந்த விழாக்களுக்கு எப்படிப்பட்ட ஆடைய அணிய வேண்டும் என்று மற்றவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு அதில் எக்ஸ்பெர்ட் ஆக இருப்பார்கள். அடிக்கடி விதவிதமான ஆடைகள் அணிந்து மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இந்த தன்னம்பிக்கை பேர்வழிகள் ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் செய்வார்கள்.
உதவி செய்யும் மனப்பான்மை
இரண்டாமவர்களை மேக்அப் போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று கூற முடியாது“ ஆர்வம் இல்லாதவர்கள் என்றும் கூற முடியாது. முதல் வகையை சேர்ந்தவர்களின் ஆர்வத்தில் பாதியளவு ஆர்வத்தை இவர்கள் பெற்றிருப்பார்கள். வீட்டில் இருக்கும்போது மேக்அப்பை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் மாத்திரம் மேக்அப் போட்டுக்கொள்வார்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது மேக்அப் கலைந்து விட்டால் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இருப்பதை வைத்து சமாளிப்போம் என்று ' அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.
விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் இந்த வகையினராகத் தான் இருப்பார்கள். இவர்கள் எதற்கும் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவார்கள். எந்தவொரு செயலையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிக்க மாட்டார்கள். இவர்களது நடவடிக்கைகளில் வேகத்தைவிட விவேகம் தான் மிகுதியாக காணப்படும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அவர்களை பொறுத்தவரை 100 சதவீதம் பொருந்தும். முகம் தெரியாத நபர் உதவி தேடி வந்து இவர்களை சந்தித்தால், முடியாது என்று கூறாமல் முடிந்தவரையிலான உதவிகளை செய்யக் கூடியவர்கள் இந்த வகையினர். இதனால் இவர்களுக்கு எல்லோரிடத்திலும் நல்ல பெயர் இருக்கும்.
ஆடை விஷயத்தில் இவர்கள் ஓ' போடவும் வைக்க மாட்டார்கள். "ஒன்றும் இல்லை' என்று கூறும் அளவிற்கும் இருக்க மாட்டார்கள். ஆடை விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துபவர்களாக இருக்கும் இவர்களிடம் வெட்டி பந்தா இருக்காது.
மனம் திறக்கும் மங்கையர்
ஒரு சிலர் மேக்அப் போட்டு இருக்கிறார்களா என்பதை உற்று நோக்கினால் தான் தெரியும். இவர்கள் மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் ஏதோ, அவர்களும் போட்டார்கள் அதனால், நானும் போட்டுக்கொண்டேன்' என்கிற ரீதியில் இவர்களது மேக்அப் இருக்கும். வீட்டில் இருக்கும்போது இவர்கள் மேக்அப் போட்டுக்கொள்வது அரிதான விஷயம். அப்படியே மேக்அப் போட்டு இருந்தாலும், அதை பிறர் கண்டுபிடிப்பது ரொம்ப கடினம். வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் லேசாக மேக்அப் போட்டுக்கொள்வார்கள். சென்ற இடத்தில் மேக்அப் கலைந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ள மாட்டார்கள்.
இவர்கள் எந்தச் செயலை மேற்கொண்டாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள முயற்சிப்பார்கள். மனதில் உள்ள விஷயங்களை எளிதில் மற்றவர்களிடம் கூறிவிட மாட்டார்கள். பல விஷயங்களை மனதிற்குள்ளேயே பபூட்டி வைத்து புழுங்கிக் கொண்டிருப்பார்கள். மிகவும் நெருக்கமானவர்களிடம் தான் மனம் திறந்து பேசுவார்கள். மற்றவர்கள் இவர்களிடம் பேச்சுக்கொடுத்தால் ஓரிரு வார்த்தைகளில் தான் பதில் இருக்கும். மற்றபடி இவர்களிடம் பெரியதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆடை விஷயத்தில் இவர்கள் எப்போதாவது தான் கவனம் செலுத்துவார்கள்.
புன்னகை என்னவிலை?
இவர்கள் தான் கடைசி வகையினர் என்பதால், மேக்அப் போட்டுக்கொள்வதிலும் இவர்கள் தான் கடைசி நிலையினர். மேக்அப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதே அரிது. கட்டாயப்படுத்தினால் தான் மேக்அப் போட்டுக் கொள்வார்கள் வீட்டில் இருக்கும்போது மருந்துக்கு கூட இவர்களிடம் மேக்அப்பை எதிர்பார்க்க முடியாது. திருமணம், கோவில் விழா மற்றும் சுப வைபவங்களுக்கு செல்லும்போது மட்டுமே இவர்கள் மேக்அப்பை தேடுவார்கள். அதுவும், ஏனோ, தானோ என்று தான்.
இவர்கள் முகத்தில் புன்னகையை எதிர்பார்ப்பது ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். யாரிடமும் அதிகம் பேச விரும்பாத இவர்களுக்கு தனிமை தான் பெரும்பாலும் துணையாக இருக்கும். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களுக்கு உதாரணமாக இவர்களை கூறலாம்.
தாங்கள் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை இவர்களிடம் மிகுதியாக இருக்கும். இதனால் இவர்களிடம் கலகலப்பை எதிர்பார்க்க முடியாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவர்கள் போல் இருப்பார்கள். ஆடை விஷயத்திலும் இவர்கள் அப்படியே!
இந்த வகையான ஆராய்ச்சி அயல்நாடுகளிலும், மேல்தட்டு வர்க்கத்தில் வசிக்கும் பெண்களிடையை நடைபெற்றது. நம் ஊரிலோ வீட்டு வேலையை அவசர அவசரமாக செய்து விட்டு அள்ளிச் சொருகிக் கொண்டு அலுவலகத்திற்கு போகும் பெண்களுக்கு இந்த ஆய்வு சரிப்பட்டு வருமா என்பது தெரியவில்லை.
இந்த நான்கு வகையினரில் நம் ஊர் பெண்கள் எந்த வகையினர் என்பது இப்போது தெரிந்திருக்கும். ஆனால் இதில் உள்ளபடியே கடைபிடிக்க வேண்டியது என்பது அவசியமில்லை.