Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Friday, January 11, 2019

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என்ற குழப்பம் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அதிகம் வரும். இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. 

தமிழ் சினிமா இயக்குனர்கள் மதுரையையும் விடமாட்டார்கள், மும்பையையும் விடமாட்டார்கள். இன்னும் எத்தனை படத்தில் தான் மும்பை பின்னணி கதையைப் பார்ப்பதோ தெரியவில்லை. இந்தப் படத்தின் முதல் பாதி தேனி மாவட்டப் பின்னணியிலும், இரண்டாம் பாதி மும்பை பின்னணியிலும் நகர்கிறது.

ஒரு அப்பா சென்டிமென்ட் கதைக்கு அழகாக ஆக்ஷன் முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த சென்டிமென்ட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது, ஆக்ஷனும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 


கதையை ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். மனைவியையும் மகளையும் பிரிந்த ஒருவர் மீண்டும் அவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை.

தூக்குதுரை (அஜித்) என்றாலே சுற்றியுள்ள 12 ஊர்களும் அதிரும். அப்படி, அடிதடி, பஞ்சாயத்து, சண்டை என ரத்த சொந்தங்களுடன் இருப்பவர் தூக்குதுரை. அவரின் ஊரான கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ முகாம் அமைத்து உதவி செய்ய மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). வந்த இடத்தில் தூக்குதுரைக்கும், அவருக்கும் காதல் மலர்கிறது. அது திருமணத்தில் முடிந்து, குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் தூக்குதுரை கத்தியைத் தூக்குவது நிரஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கோபத்துடன் தூக்குதுரையை விட்டுப் பிரிந்து மகளுடன் மும்பை செல்கிறார். 

ஊர் திருவிழாவுக்காக பெரியவர்கள் வற்புறுத்தலால் தூக்குதுரை மனைவியை அழைக்க மும்பை செல்கிறார். அங்கு அவருடைய மகளை யாரோ கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, மனைவியுடனும், மகளுடனும் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.



தொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடிப்பதன் காரணம் தெரியவில்லை. இந்தப் படத்தில் கிடா மீசை, தாடி என முகம் முழுவதும் முடியாக இருக்கிறது. அதையும் மீறி சென்டிமென்ட் காட்சிகளில் அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. இடைவேளை வரை கலகலப்பாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பாசமான அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அவருக்கான பில்ட்-அப் காட்சிகளையும், ரசிகர்கள் கைதட்டும் விதத்தில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா. படம் முழுக்க முறுக்கு மீசை, மதுரை பேச்சு, வேஷ்டி என அதகளம் செய்கிறார் அஜித்.

மும்பையிலிருந்து தேனியில் உள்ள சிறிய கிராமத்திற்கு நயன்தாரா வருகிறார். அஜித் படிக்காதவராக இருந்தாலும் அவரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இருவரது காதலையும் அன்னியோன்யமாகக் காட்டிவிட்டு திடீரென நயன்தாரா பிரிந்து போவது ஒட்ட மறுக்கிறது. அஜித் மனைவியானதும், டாக்டருக்குப் படித்த நயன்தாராவை, இரண்டு மூக்குத்திகளுடனும், புடவையுடனும் கிராமத்துப் பெண்ணாக மாற்றியிருப்பதும் சினிமாத்தனமானது. பிறகு மல்டி மில்லியனர் பெண் தொழிலதிபராக மாறுகிறார். இளம் பெண், மனைவி, அம்மா என மூன்று பரிமாணங்களிலும் நயன்தாரா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.

அஜித்தின் வலது, இடது கரங்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா. அஜித் பற்றிய பில்ட்-அப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஜெகபதி பாபு, மல்டி மில்லியன் தொழிலதிபர், அவர்தான் வில்லன். ஆனாலும், மகளுக்காகத்தான் வில்லனாக மாறுகிறார். 





ரோபோ சங்கர் கொஞ்சமே வந்து சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். இடைவேளைக்குப் பின் விவேக் வருகிறார், சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலை ஏற்படுத்துகிறார். அஜித்தின் மகளாக பேபி அனிகா, அவ்வளவு அழகு, பொருத்தமான நடிப்பு.
இமான் இசையில், கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒன்று மெலோடிக்கு, மற்றொன்று ஆட்டத்திற்கு. படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதிரடி அதிகம். 

தேவையற்ற காட்சிகளை வைத்து படத்தை இழுக்கவில்லை. மனைவி நயன்தாரா வீட்டிலேயே அஜித் வேலைக்காரர் போல சேருவது கொஞ்சம் ஓவர் பாஸ். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நாமே யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ்.

கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஸ்வாசம் படம் எடுக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. விவேகத்தில் ஏமாந்த ரசிகர்களுக்கு நிச்சயம் விஸ்வாசம் மாஸ் தான். 


இருப்பினும் இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி கமர்ஷியலான படங்களில் மட்டுமே அஜித்தைப் பார்ப்பது. புதுமையாக அவருக்கு இருக்கும் அவ்வளவு பெரிய ஆரவரமான ரசிகர்களுக்கு முழு திருப்தியாக ஒரு படத்தைக் கொடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் ஒருவர் கூடவா இல்லை.
விஸ்வாசம் - தந்தைப் பாசம்.
.நன்றி: தினமலர்

Thursday, April 25, 2013

வார்த்தை தவறிவிட்ட அ‌‌ஜீத்...? விருது வாங்கிய பிரபல இயக்குனர்..!


வார்த்தை தவறிவிட்டாய்.... 

கண்ணம்மாவைப் பார்த்து பாடியது போல் யாரும் அ‌‌ஜீத்தைப் பார்த்து பாடி விடுவார்களோ? விஷயம் வேறொன்றுமில்லை. தான் நடிக்கிற படத்தில் அல்டிமேட் என்று அடை மொழி போடுவது, ஊர் திரண்டு வாழ்த்த, 'வந்தேண்டா உங்க தலைவன்' என்பது மாதி‌ரி ஓபனிங் சாங் வைப்பது, பன்ச் டயலாக் போடுவது... இதெல்லாம் சுத்தமா கூடவே கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் அ‌‌ஜீத். ஆனால்...

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்து வரும் படத்தில் இதில் ஒன்று இடம் பெறுகிறதாம். ஓபனிங் மாஸ் சாங்.

பில்லா படத்தில் சேவற்கொடி பறக்குதடா ஓபனிங் சாங் வைத்த மாதி‌ரி இதிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வற்புறுத்தி விஷ்ணுவர்தன் அ‌‌ஜீத்திடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அட்வைஸ் பண்ற மாதி‌ரியெல்லாம் இல்லாமல், செம கிராண்டாக, கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார்களாம். பாடியிருப்பது சங்கர் மகாதேவன்.

அ‌‌ஜீத் அவ்வப்போது வார்த்தை தவறினாலும் நன்றாகதான் இருக்கும்.

*****************************



குறும் படம், ஆவணப் படங்கள் எடுக்கிற இளைஞர்கள் இப்போது வ‌ரிசையாக படம் இயக்குகிறார்கள். குறும் படங்கள் சினிமா இயக்குவதற்கான விசிட்டி‌ங் கார்டாக மாறியிருக்கிறது.

இயக்குனர் பாண்டியராஜன் விஷயத்தில் அப்படியே உல்டா. இருபது வயதில் ஆண் பாவம் படத்தை இயக்கி ஒரு வருடம் ஓட வைத்தவர் இப்போது குறும் படங்கள், ஆவணப் படங்கள் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவரது படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றிருக்கிறது. 

இந்நிலையில் மண் பானை என்ற படத்துக்காக அமெ‌ரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மண் பானைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், எடிட்டிங் பி.லெனின். 

Saturday, March 23, 2013

யாருக்கு வரும் இந்த மனசு! அஜீத்தின் தியாகம்!


சமீபகாலமாக நடிகர் அஜீத்தை குறித்தும் அவரது எதிர்கால படங்களை குறித்தும் பல்வேறு யூகங்கள் பரபரப்பாக ஊடங்கங்களில் விவாதிக்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படபிடிப்பில் கார் சேசிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 




அதற்கான மருத்துவ ஆலோசனைக்கு சென்ற போது அறுவை சிகிச்சை தான் நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டதால் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி அஜீத்துக்கு அறுவை சிகிச்சைக்கு நடக்க இருக்கிறது. அது வரையில் புதிய படத்துக்கான எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவதிலை என தீர்மானித்து இருக்கிறார்.


அறுவை சிகிச்சைக்கான கால தாமதம் ஏன் என்று விசாரித்தபோது நம்மை வியக்க வைத்தார் அஜீத். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா , ராணா , நயன்தாரா, டாப்சீ, கிஷோர், அத்துல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர், சுமா ரங்கநாத் என்ற பல்வேறு நட்சத்திர கூட்டம் நடித்து வருகின்றனர். 


தன்னுடைய சிகிச்சையினால் இவர்களின் தேதியும் வீணாகும் என கருதிய அஜீத் தன சிகிச்சை காலத்தை ஒத்தி வைத்துள்ளார் அஜீத். 


இதை தொடர்ந்து தான் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளார். தான் பெரிதாக மதிக்கும் மறைந்த திரு நாகி ரெட்டியாரின் நூற்றாண்டை ஒட்டி ஒப்பந்தமான படம் என்பதாலும் இப்படத்திலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிலர் இருப்பதால் அவர்களின் கால்ஷீட் வீணாக கூடாது என்று கருதி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அறுவை சிகிச்சை என்று முடிவு செய்திருக்கிறார் அஜீத். வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. 


சக நடிகர்களின் வளர்ச்சிக்காக தன் உடல்வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் அஜீத்தின் தியாக உணர்வு திரையுலகில் சக நடிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Thursday, March 21, 2013

விஜய், அஜீத்துக்காக காத்திருக்கும் இயக்குனர்!


தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது. இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ’மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களை இயக்கியவர். 





அஜீத் நடிப்பில் இவர் இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் சுமாரான வெற்றியை பெற்றது. தொடர்ந்து ராஜா என்ற படத்தில் அஜீத்துடன் இரண்டாவது முறையாக இணைந்தார். நீண்ட இவைவெளிக்குப் பிறகு தன் நண்பர் லிங்குசாமியின் தயாரிப்பில் தீபாவளி படத்தை இயக்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மனம் கொத்திப் பறவை படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல படம் என்றும் பரவலாக பேசப்பட்டது.


இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் காமெடி இருக்கும். சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து, இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் கமர்ஷியல் வெற்றியாகும் என்றார். 


மேலும் அவர், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி. அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்றார். 

Friday, December 30, 2011

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!


2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. 

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. 

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது. 

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம். 

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். 

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. 

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள். 

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா. 

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா. 

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. 

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல். 

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

Thursday, September 22, 2011

அடப்பாவிகளே என்னையே 'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்


மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத். 

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

Monday, September 5, 2011

சல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்-பியா


மங்காத்தா படத்தைப் பார்த்த பின்னர் நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன். சல்மான் கான் கோபித்துக் கொள்ளக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

கோவா படத்தில் நடித்தவர் பியா. அஜீத்துடன் ஏகன் படத்திலும் நடித்தார். அதில் 2வது நாயகியாக வந்தார் பியா. சமீபத்தில் வெளியான கோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மங்காத்தா படத்தைப் பார்த்து உருகிப் போய் ட்விட்டரில் எழுதியுள்ளார் பியா.

அதில், மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு. அப்படியே உருகிப் போய் விட்டேன். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். ஸாரி, சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன் என்று கூறியுள்ளார் பியா.

Wednesday, August 31, 2011

மங்காத்தா - அதிரடி விமர்சனங்கள்... mankatha review




நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக வந்து 
அஜித் ஆடியிருக்கும் ஆட்டம்தான் மங்காத்தா... 
இன்றுமுதல் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டது. 


இதன் விமர்சனங்கள் படம் வெளியான இன்றே நண்பர்களால் கொடுக்கப்பட்டுள்ளது...

அவைகளின் தொகுப்புதான் இவை உங்களுக்கு பிடித்த தளத்திற்க்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்.. நன்றி...



செங்கோவி 
மங்காத்தா - திரை விமர்சனம் 


பில்லசபி பிரபாகரன் 



தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி...!





Friday, August 26, 2011

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!


அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'மல்டி ஸ்டாரர்' படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு 'மங்காத்தாவே' நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

Monday, August 15, 2011

ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிரபு


அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர். 

எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன். 

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார். 

மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.

Friday, August 5, 2011

நான் பார்த்த கடவுள் ரஜினி - அஜீத்


என் அப்பா அம்மாவுக்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத். 

தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்... 

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''

''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''

''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' 

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''

''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''

''ஆட்சி மாற்றம் பற்றி..?''

''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''

Wednesday, August 3, 2011

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!


இன்றைய இளைஞர்களின் விருப்பமான நடிகர், இளைஞர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் யார் தெரியுமா... அஜீத்!


ஆனந்த விகடன் பத்திரிகையின் சினிமா இணையதளத்தில் 'இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?' என்று கேள்வி கேட்டிருந்தார்கள்.

இதற்கு பதிலாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களில் ஒருவர் பெயரை குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது. 

38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள வாக்கெடுப்பில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

சூர்யாவுக்கு 495 வாக்குகளும், கமலஹாசனுக்கு 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 376 வாக்குகளும், சிம்புவுக்கு 199 வாக்குகளும், ஆர்யாவுக்கு 107 வாக்குகளும், சீயான் விகரமுக்கு 73 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது. 

முன்பு வட இந்திய இணைய தளம் நடத்திய சர்வேயிலும் இதேபோல அஜீத் ரசிகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...