மகாத்மா காந்தியின் பெயரை அன்னா ஹஸாரே தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் ஒரு தலிபான் காந்தி என்று சாடியுள்ளார் சிவசேனா தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான சுரேஷ்தாதா ஜெயின் கூறியுள்ளார்.
அன்னா ஹஸாரே மீது ஏற்கனவே இவர் ஒரு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது. ஹஸாரே குறித்து ஜெயின் கூறுகையில், மகாத்மா காந்தியின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் ஹஸாரே.
எல்லோரும்தான் ஊழலை எதிர்க்கிறார்கள். ஆனால் ஏதோ இவர் மட்டும்தான் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர் போல காட்டிக் கொள்கிறார். நமது நாட்டில் ஏராளமான சட்ட திட்டங்கள், நடைமுறைகள் உள்ளன. அவற்றை தாண்டி விட்டுப் போக முயலக் கூடாது. எல்லாமே நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். அதை பிளாக்மெயில் செய்து பெற முயற்சிக்கக் கூடாது.
தலிபான் காந்தியாக செயல்பட்டு வருகிறார் ஹஸாரே. அவரது செயல்கள் கண்டனத்துக்குரியவை என்று சாடினார் ஜெயின்.
யார் இந்த ஜெயின்?
முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் இந்த ஜெயின். அப்போது மாநில அமைச்சராகவும் இருந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்களை சுமத்திய அன்னா ஹஸாரே 2003ம் ஆண்டு போராட்டத்தையும் நடத்தினார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த் தலைமையிலான விசாரணைக் கமிஷனை மாநில அரசு அமைத்தது. இந்த விசாரணைக் கமிஷன் ஜெயின் குற்றவாளி என்று குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் பதவி விலக நேரிட்டது. அதன் பின்னர் ஹஸாரேவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெயின்.
அதன் பின்னர் அன்னா ஹஸாரே மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜெயின், விசாரணைக் கமிஷனிடம் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய கமிஷன், ஹஸாரே மீதும் தவறுகள் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment