பாலிவுட்டில் ஷோ மேன் ஆப் இந்தியா என்ற பெருமைக்குரிய அடைமொழியைப் பெற்றவர்கள் இருவர்தான். ஒருவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு சுபாஷ் கய்.
இன்று அந்தப் பட்டப்பெயர் பாலிவுட்டில் யாருக்குமே இல்லை. மாறாக தென்னிந்திய திரைப்பட உலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் எனப் புகழப்படும் இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமாகியுள்ளது.
எந்திரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரைத்தான் பாலிவுட்டிலிருப்பவர்களும் ஷோமேன் ஆப் இந்தியா எனப் புகழ்கின்றன.
அந்த ஷோமேன் இன்று தனது 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்!
இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர். அவற்றில் இந்தியில் அவர் எடுத்த நாயக் (முதல்வன் ரீமேக்) தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள்தான். குறிப்பாக பாய்ஸ் மட்டும்தான் இவற்றில் 100 நாட்கள் ஓடியது. மற்ற படங்கள் வெள்ளி விழா கண்டன.
அவரது கடைசி இரு படங்கள் சிவாஜி மற்றும் எந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்தவை. எந்திரனின் வெற்றிதான் ஷங்கரின் இத்தனை வருட திரைவாழ்க்கையின் உச்சம் என்றால் மிகையல்ல.
பொதுவாக ரஜினியின் படங்களில் அவரைத் தவிர, வேறு யாரையும் ரசிகர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் எந்திரன் வெற்றியில் ரஜினிக்கு இணையான முக்கியத்துவத்தை ஷங்கருக்கும் அளித்தனர் ரசிகர்கள். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்தப் படம் அவரது வெற்றிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற கேள்வியோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பிறந்த நாள் காணும் அவருக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் இன்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
ஷங்கரின் ஹீரோ ரஜினியும் இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.
No comments:
Post a Comment