ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன.
தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன.
ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன.
ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன.
இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது.
தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற்றி அனைவரையுமே கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.
இந்த 2011-ல் தயாராகும் பல படங்கள் சரித்திர அல்லது புராண காலகட்டத்தைச் சேரந்த படங்களாகவே உள்ளன.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ரூ 130 கோடியில் உருவாகும் ராணா படம் முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஏழாம் அறிவு கதையும் சித்தர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். போகர் என்ற சித்தர் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டம். படத்தின் ஸ்டில்களும் அதைத்தான் காட்டுகின்றன.
விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் முழுக்க முழுக்க சரித்திரப் பின்னணி கொண்டது. ஆங்கிலத்தில் வெளியான ட்ராய், கிளாடியேட்டர் மாதிரியான அதிரடி ஆக்ஷன் வரலாற்றுப் படம் இது.
சிம்புதேவன் - தனுஷ் இணையும் மாரீசன், கிமு 12-ம் நூற்றாண்டுக் கதை. கிட்டத்தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.
சற்குணம் இயக்கும் வாகை சூடவா, சமகால வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு இந்தப் படம் தள்ளிப்போடப்பட்டாலும் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என அவர் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பாரதிராஜா இயக்கிவரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் கூட ஒரு சரித்திரக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் செல்வராகவன், மிஷ்கின், கமல்ஹாஸன் போன்றவர்களும் சரித்திரப் படம் எடுப்பதற்கான ஆயத்தங்களில் உள்ளனர். மதராஸப்பட்டணம் தந்த இயக்குநர் விஜய்யும் கூட விரைவில் அடுத்த சரித்திரப் பட ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.
சரித்திரப் படம் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனாலும் இளம் இயக்குநர்கள் அதில் உள்ள சவாலை விரும்பி ஏற்று சரித்திரப் படம் பண்ணுவது, இந்த கலை மீது அவர்களுக்குள்ள பிடிப்பைக் காட்டுகிறது. இன்னொன்று, முன்பு பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் தங்கள் கிராமத்து அனுபவங்களை அப்படியே செல்லுலாய்டில் செதுக்கித் தந்தார்கள். இன்றைய படைப்பாளிகள் பலருக்கு அந்தப் பின்னணியோ, ஆழந்த அனுபவமோ இருப்பதில்லை.
எனவேதான் ஏற்கெனவே தயாராக உள்ள சரித்திரக் கதைகளை தொழில்நுட்ப பிரமாண்டம் சேர்த்துக் கொடுத்து மக்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.
எப்படிப் பார்த்தாலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சரித்திரப் படங்கள் வரவிருக்கின்றன. சரித்திரத்தின் மீது இந்த தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.
சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் சரித்திரம் இனிக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்!
No comments:
Post a Comment