"குற்றப் பின்னணியுடைய எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும்" என்று, உச்ச நீதிமன்றம் போட்ட, சாட்டையடி உத்தரவால், அரசியல்வாதிகள் அனைவருமே சற்று, ஆடித் தான் போயிருப்பர்.
காரணம், "கிரிமினல்'களின் புகலிடமாக அரசியல் இருப்பது தான்.
லஞ்சம், கொள்ளை, கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்முறை என்று, பல்வேறு குற்றங்களை செய்து விட்டு, பண பலம், ஆள்பலத்தால், பதவியில் அமர்ந்து விடுகின்றனர்.
அநாகரிக அரசியல் நடத்தி, தங்கள் வாரிசுகளையும் பதவியில் அமர்த்தி, கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்து விடுகின்றனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத இவர்களுக்கு, "மக்கள் பிரதிநிதிகள்' என்ற, மதிப்பான பெயர் வேறுகுற்றவாளிகளே வேட்பாளர்களாக இருக்கும் போது, "எரிந்த கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி?' என்ற விரக்தியில், ஏதோ ஒரு கொள்ளியைத் தேர்ந்தெடுக்கும், இக்கட்டான நிலைக்கு, மக்கள் தள்ளப்படுகின்றனர்.
இந்த நிலையில், மேற்கண்ட உச்ச நீதிமன்ற உத்தரவு, வாக்காளர்களுக்கு வரப்பிரசாதம். நல்லவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க, சிந்தித்து ஓட்டளிக்கமுடியும்.
நீதித்துறையை மட்டுமே நம்பியிருக்கும் மக்களுக்கு, நிறைவை தருவதாக அமைந்துள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவு. என்றாலும், அரசியல்வாதிகள், பலே கில்லாடிகள். சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து, அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வர்.
குற்றம் செய்தவர்கள், நல்ல பிள்ளைகள் போல் ஒதுங்கி, தாங்கள் இருந்த இடத்தில், "பினாமி'களை உட்கார வைத்து, திரை மறைவில் நின்று, சாவி கொடுத்த பொம்மைகளாக, அவர்களை, தங்கள் இஷ்டப்படி செயல் பட வைத்து, ஆட்சி நடத்துவர்.நீதித்துறை தடுக்கில் பாய்ந்தால், குற்றவாளிகள் கோலத்தில் பாய்வர்.
இம்மாதிரியான, தகிடுதத்த அரசியல்வாதிகளின் குறுக்கு வழி, சட்டத்தால் அடைக்கப்பட வேண்டும்.நல்லவர்கள் மட்டுமே, மக்களின் பிரதிநிதியாக வர முடியும் என்ற நம்பிக்கையோடு, உச்ச நீதிமன்ற உத்தரவை இரு கரம் நீட்டி வரவேற்போம்; ஜனநாயகத்தை காப்போம்.
நல்லது மேலும் நடக்கட்டும்...
ReplyDelete