Monday, June 3, 2013

வினையாகும் விளையாட்டு..! பலியாடுகளாய் ரசிகர்கள்...!


கிரிக்கெட் வீரர்கள், இவ்வளவு ரன்கள் கொடுத்து, இத்தனை விக்கெட்டுகள் எடுத்தனர் என்பது போய், இவ்வளவு ரன்கள் கொடுத்து, இவ்வளவு லட்சங்கள் சம்பாதித்தார் என்று ஆகிவிட்டது; எவ்வளவு கேவலம்...! 

தூய வெள்ளை உடையில் ஆடிய கனவான்களின் விளையாட்டு, கலர் கலரான உடைகளிலும், அழகியரின் அரைகுறை உடைகளிலும், திசை திரும்பி, கவர்ச்சி வியாபாரம் ஆகி விட்டது. 

மாணவர்களின் தேர்வு காலத்தில், ஐ.பி.எல்., ஆரம்பித்தால், அவர்களின் கவனச் சிதறல், பெற்றோருக்கு, பைத்தியம் பிடிக்காத குறை. மாலை, 4:00 மணி முதல், நடுநிசி, 12:00 மணி வரை, பல கோடி, "டிவி' இயங்குவதால், மின்சார செலவு வேறு! 

வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சிறுக சிறுக பணம் சேர்த்து, வெயிலில் வாடி, வியர்வையில் குளித்து, தாகத்தில் தவித்து, "கனவான்கள்' விளையாட்டை ரசிக்க வந்தவர்கள் எத்தனை பேர்! அத்தனை பேருக்கும், "அல்வா' கொடுக்கப் பணம் வேண்டும் என, வீரர்கள் நினைத்தனரோ என்னவோ, கோடிகளில் வாங்கிக் குவித்து விட்டனர். 



ஐ.பி.எல்., மேட்ச் பார்க்க விடவில்லை என்று, மனைவியை அடித்து, அவர் தற்கொலை செய்து கொண்ட அளவுக்கு, பேயாக பிடித்து ஆட்டிய ஆட்டமல்லவா, ஐ.பி.எல்.,! கிரிக்கெட்.

சூதாட்டத்தில் ஈடுபட்டு, அவமானப்பட்டு உயிர் இழந்தவர், ஒரு சிறந்த தென் ஆப்ரிக்கா கேப்டன். துரத்தப்பட்டவர்களில் பலர், நம்ம ஊர் வீரர்கள்...! அந்த நேரத்தில், ரசிகர்கள் கூட்டம் குறைய ஆரம்பித்ததே, அப்படியே தொடர்ந்திருந்தால், மறுபடி புக்கிங் மோசடி தலைதூக்கி இருக்காதே!

என்னவோ போங்க.... நம் நாட்டில் தான், விளையாட்டு எப்பவுமே, வினையாகிப் போகிறது! இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும், பி.சி.சி.ஐ.,யின் தலைமைப் பதவியைப் பிடிக்க, ஆலாய் பறக்கின்றனர். அவர்களுக்கு, கிரிக்கெட், வாரி வழங்கும் காமதேனு; லாபம் கொழிக்கும் வியாபாரம். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு... எப்பவும் அசட்டுப் பட்டம் தானா?

1 comment:

  1. இன்னும் சிறிது வருடங்களில் முற்றிலும் மாறி விடலாம்...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...