தமிழகத்தில் நடைபெறவிருக்கும், ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க., கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க.,வின், 29 எம்.எல்.ஏ.,க் களில், ஏழு பேர், அ.தி.மு.க.,வை ஆதரிப்பவர்களாக மாறியதோடு, "நல்லவருக்கே ஓட்டளிப்போம்' என்று, பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் மாறுவர் என்பது, எவருக்கும் தெரியாது. இந்நிலையில், தே.மு.தி.க., சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர் இளங்கோவன், "எங்களிடம், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 34 எம்.ஏல்.ஏ.,க்கள் ஆதரவுடன், நிச்சயம் வெற்றி பெறுவேன்' எனக் கூறியுள்ளது வியப்பளிக்கிறது.
"எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை; மக்களையும், மகேசனையும் மட்டுமே நம்பி, தனித்தே போட்டியிடுவேன்' என, வசனம் பேசிய விஜயகாந்த், பின், அ.தி.மு.க.,வை மட்டுமே நம்பி, கூட்டணியில் இணைந்து, 29 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றார். ஆனால், இன்று, அவர் கட்சியைச் சார்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களோ,"தலைவர் அதை மறந்தாலும், நாங்கள் மறக்கவில்லை' எனக் கூறி, அ.தி.மு.க.,விற்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர்.
அன்று, கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியும், "சட்டசபைத் தேர்தலின் போது, தே.மு.தி.க.,வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டோமே தவிர, கூட்டணி வைக்கவில்லை' என்று, இன்று, கையை விரித்ததோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தி.மு.க., தலைமை, மகளா, தே.மு.தி.க.,வா என்றால், மகள் பக்கமே சாயும். எனவே தாம் நிறுத்திய வேட்பாளரைப் பின் வாங்கச் செய்தல் என்ற பேச்சிற்கே, தி.மு.க., தளத்தில் இடம் இராது. புதிய தமிழகம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில், தென்காசி தொகுதியை யார் தருகிறன்றனரோ, அவர்கள் பக்கமே சாயும் என்ற நிலைப்பாடு எடுத்த போது, அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தன் வேட்பாளரை நிறுத்தும் என, அறிவித்ததால், அத்தொகுதியைத் தர, தி.மு.க.,வும் சம்மதம் தெரிவித்து,
புதிய தமிழகம் கட்சியின் இரு எம்.எல்.ஏ., ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கே என்றாகி விட்டது. பா.ஜ., உட்கட்சி குழப்பத்தால், உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், அதிக ஓட்டு யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் பக்கம் சாய்ந்தால், பிற்காலம் மகிழ்ச்சியாக இருக்கும் என, கணக்கு போடும். என்ன இருந்தாலும், தி.மு.க., தன் பழைய நண்பன் என்ற நிலையில், தி.மு.க.,வை ஆதரிக்கவே முன் வரும். நிலைமை இவ்வாறிருக்க,
தினந்தோறும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வை இழந்து வருவதோடு, குடும்பக் கட்சி எனவும், தமிழகத்தில் பெயரெடுத்துள்ள, தே.மு.தி.க., கிடைக்காத ஒன்றிற்கு ஆசைப்பட்டு, மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்குவதற்குப் பதில், ஓடிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்தினால், எதிர்காலமாவது பிரகாசமாக இருக்கும்.
No comments:
Post a Comment