உலக கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தரங்கா, தில்ஷன் களமிறங்கினர். தரங்கா 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜாகீர் வேகத்தில் சேவக் வசம் பிடிபட்டார். ஜாகீர் 3.1 ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் முதல் விக்கெட்டை சாய்த்தார்.
அடுத்து தில்ஷனுடன் கேப்டன் சங்கக்கரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் 33 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கராவுடன் ஜெயவர்தனே இணைந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன் சேர்த்தனர்.
சங்கக்கரா 48 ரன் (67 பந்து, 5 பவுண்டரி) எடுத்து யுவராஜ் சுழலில் டோனியிடம் பிடிபட்டார். இலங்கை அணி 27.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து தடுமாறியது. ஜெயவர்தனே & சமரவீரா இருவரும் 57 ரன் சேர்த்தனர். சமரவீரா 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கபுகேதரா 1 ரன்னில் வெளியேற, இலங்கையை குறைந்த ஸ்கோரில் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி உறுதியுடன் விளையாடிய ஜெயவர்தனே அரைசதம் அடித்து முன்னேறினார். குலசேகரா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இலங்கை ஸ்கோர் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக உயர்ந்தது. ஜாகீர் வீசிய 48வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 17 ரன் கிடைத்தது. குலசேகரா 32 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட் ஆனார். இந்த தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் இருந்த ஜெயவர்தனே பைனலில் சதம் விளாசி அசத்தினார்.
ஜாகீர் வீசிய கடைசி ஓவரில் (18 ரன்) பெரேரா அதிரடியாக 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஜெயவர்தனே 103 ரன் (88 பந்து, 13 பவுண்டரி), பெரேரா 22 ரன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிர்ச்சி தொடக்கம்: அடுத்து 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சேவக், சச்சின் பலத்த ஆரவாரத்துக்கிடையே களமிறங்கினர். மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
உலக கோப்பையில் கடைசி முறையாக விளையாடும் சச்சின் 18 ரன் மட்டுமே எடுத்த நிலையில், மலிங்கா வேகத்தில் சங்கக்கராவிடம் பிடிபட இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முக்கியமான 2 விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
கம்பீர் & கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு போராடியது. இருவரும் 83 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். கோஹ்லி 35 ரன் எடுத்து தில்ஷன் பந்தில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து கம்பீருடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்பீர் 97 ரன் எடுத்து (122 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். கம்பீர் & டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை நகம் கடிக்க வைத்த திக்...திக்... ஆட்டத்தில் இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டோனி இமாலய சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். டோனி 91 ரன் (79 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ் 21 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆர்ப்பரிக்க, வான்கடே ஸ்டேடியம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் குலுங்கியது.
இந்தியா வின் பண்ணியது மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்து குலுங்கியது ஆனந்தத்தில்...
ReplyDelete//பிணம்திண்ணி ராஜபச்சே உன் கனவு பலிக்காது..//
ReplyDeleteநடந்துருச்சி...நீங்க சொன்னது!