சுயமரியாதை திருமணம் தான், நடத்தி கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண், எனக்கு கிடைக்காமலே போய் விட்டாள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில், ராயபுரம் பகுதி பிரதிநிதி நான்குட்டி இல்ல திருமண விழாவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று நடத்தி வைத்து பேசியதாவது:
இன்றைக்கு, மே, 13. இதே நாளில், செப்டம்பர் மாதத்தில், எழுபதாண்டுகளுக்கு முன், என்னுடைய திருமணம் நடந்தது. இதே கோபாலபுரம் வீட்டில், இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை, 2,000-க்கும் அதிகம்.
இது தவிர, நான் வெளியூர்களுக்குச் சென்று நடத்தி வைத்த திருமணங்கள், சென்னையிலே வேறு பகுதிகளில், நான் நடத்தி வைத்த திருமணங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால், 10,000-க்கும் மேற்பட்ட திருமணங்களை, நான் நடத்தி வைத்திருக்கிறேன்.
தற்போது, சுயமரியாதை திருமணங்களை, நடத்திக் கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை, பெருகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை, 1944-ல் செப்டம்பர், 13-ம்தேதி அன்று, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
சுய மரியாதை திருமணம் தான் நடத்திக் கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண் எனக்குக் கிடைக்காமலேயே போய் விட்டாள்.
ஆக, சுயமரியாதைத் கொள்கைக்காக, 1944-ம் ஆண்டிலேயே, காதலித்தப் பெண்ணை இழந்தவன் தான் நான்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment