கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக உருவாக்கிய பிறகே சர்வதேச விழா ஒன்றில் வெளியிட வேண்டும் என்பதாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி கேன்ஸ் விழாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படத்தின் முதல் முன்னோட்டக் காட்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில், உலகின் முக்கிய படைப்பாளிகள் மத்தியில் திரையிட வேண்டும் என படக்குழுவினர் விரும்பினர்.
ரஜினியும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டார். ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, 'இந்த ட்ரைலர் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் பெரிய மைல்கல்லாக அமையும். ஆனால் இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம். சர்வதேச விழாவில் திரையிடுகிறீர்கள். எனவே இன்னும் சிறப்பாக தயார் செய்யுங்கள்," என்று கூறினாராம்.
ஆனால் அப்படி தயார் செய்ய காலதாமதமாகிவிட்டதால், தனது கேன்ஸ் பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம். ஆனால் வெளியில் பிரான்ஸ் செல்லும் அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இடம்தரவில்லை என்பதுபோல சிலர் கிளப்பிவிட்டனர்.
இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், "இது முற்றிலும் மடத்தனமான கற்பனை. ரஜினி ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களையும் என்னையும் போல மிக நல்ல ஆரோக்கியமடைந்துவிட்டார். ரஜினியின் புகழை சிதைப்பதாக நினைத்து தம்மைத் தாமே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள் இதுபோன்ற செய்தியைப் பரப்புபவர்கள்.
உண்மையில் என்ன நடந்தது தெரியுமா... கோச்சடையான் ட்ரைலர் பார்த்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், இன்னும் கூட சிறப்பாக இந்த ட்ரைலரை உருவாக்கலாமே என யோசனைகள் சொன்னார். எனவே அவசர கோலத்தில் எதுவும் செய்யாமல், கொஞ்சம் பொறுமையாக இந்த ட்ரைலரை உருவாக்குமாறு ரஜினி கூறியதால், நாங்கள் கேன்ஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ட்ரைலரை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.
கேன்ஸ் ரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு சர்வதேச நிகழ்வுகள் நிறையவே உள்ளன. அதில் ட்ரைலரை வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் பிரமாதமான ட்ரைலர் தயாராகிவிடும். இந்தப் படத்துக்கு ஏராளமான உழைப்பும் அபரிமிதமான ஆற்றலும் தேவைப்படுகிறது. ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தந்துவிட முடியாது. இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்," என்றார்.
No comments:
Post a Comment