"ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று, அவ்வை சொன்னதை, தமிழகத்தில் சில சாதிகட்சிக் தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் போலும். இந்தியாவில், 4,000 த்துக்கும் மேற்பட்ட ஜாதியினர் உள்ளனர் என்பதை மறந்த இவர்கள், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி கொலை செய்வது போல், ஒருவரை ஒருவர் தாக்கி மாண்டு வருவது, நாகரிகமற்ற செயல்களாக தோன்றுகின்றன.
ஜாதித் தலைவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு, பல்வேறு ஜாதித் தலைவர்கள் தோளில் ஒரு துண்டை போட்டு உலா வருகின்றனரே, இவர்கள் தங்கள் ஜாதிக்காரர்களின் முன்னேற்றத்திற்காக, ஒரு துரும்பை தூக்கிப் போட்டதுண்டா?
பல லட்சம் பேர் இன்னும் பள்ளிக்குச் சென்று படிக்க வசதியற்றவர்களுக்கும், அன்றாடம் உழைத்தால் தான் அடுப்பு எரியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும், பொருளாதார சூழ்நிலையால் திருமண வயதை கடந்து நிற்கும் பெண்களுக்கும், இவர்கள் என்ன உதவி செய்துள்ளனர் என்று பட்டியல் போட முடியுமா?
நான்காவது முறையாக பதவியேற்று இருக்கும், திரிபுரா முதல்வரின் கணக்கில், வங்கியில் உள்ள தொகை, 4,000 ரூபாய் மட்டுமே. சொந்த வீடோ, வாகனமோ இல்லை. தினமும் சட்டசபைக்கு ரிக்ஷாவில் தான் வருகிறார்.
ஆனால், ஜாதித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்மூர் பிரஜைகள், தலைவராக பொறுப்பேற்ற போது, இவர்களின் நிலை என்ன, தற்போது இவர்களின் வாழ்க்கை நிலை என்ன என்று, அந்த ஜாதி மக்கள் உணர்ந்தாலே போதும், "எனக்கு எந்த ஜாதியும் வேண்டாம்; ஜாதித் தலைவரும் வேண்டாம்' என்று, தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வர்.
அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தே.மு.தி.க., போன்ற பிரதான கட்சிகள், "இனி எந்த ஜாதிக் கட்சிகளுடனும், கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என்று, ஓர் உறுதிமொழியை எடுப்பது நலம்.
இவர்களை தனிமையில் விட்டு, வேடிக்கை பார்த்தால், ஜாதிக் கட்சிகளின் ஓட்டுக்கள் எத்தனை சதவீதம் என்பது புலப்படும். எல்லா பிரதான கட்சியிலும், எல்லா ஜாதிக்காரர்கள் தலைவராக உள்ள போது, ஜாதியை சொல்லி எவரும் தமிழகத்தில் குப்பையை கொட்ட முடியாது என்பதை, மக்கள் இவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
No comments:
Post a Comment