Friday, May 3, 2013

தமிழக அரசின் 20 ரூபாய் அரிசி..! சில வெளிவராத தகவல்கள்


அரசு வழங்கும், கிலோ, 20 ரூபாய் அரிசியின் தரம், கேள்விக்குறியாக உள்ளதாக பரவலான கருத்து உள்ளது. உமியை நீக்கியவுடன், அரிசியின் ஆயுள் குறையத் துவங்கும். அடுத்து, தற்போதைய அரிசி தயாரிப்பு முறை, மிகவும் நவீனமாக மாறி விட்டது. 

தண்ணீர் விட்டு பாலிஷ் செய்யும், "சில்க்கி' பாலிஷ் முறை, 100 சதவீதம் ஆலைகளில் அமலுக்கு வந்துவிட்டது. சாதாரண தயாரிப்பில், அரிசியின் தரம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால், "சில்க்கி' இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட அரிசி, ஒரு மாதம் உபயோகப்படுத்தாமல் இருந்தாலே, புழு, வண்டு பிடித்துக் கெட்டுப் போகும்.

தமிழக அரசு, கிலோ, 20 ரூபாய் அரிசியை, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து, பின் சிறு சிறு பொதிகளாக, "பேக்' செய்து கடைகளுக்கு அனுப்பி, வினியோகம் செய்து வருகிறது. இதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும். 

உதாரணத்துக்கு, ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து தமிழக அரசு, அரிசியை இறக்குமதி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அரிசி ஆலைகளில் தயாரித்து எத்தனை நாள் இருந்தது என்று, தமிழக அரசுக்கு எப்படித் தெரியும்? 

அங்கு, 10 நாள், ரயில் வேகனில், ஐந்து நாள், சிறு பொதிகளாக மாற்றும் குடோனுக்கு கொண்டு செல்ல சில நாள், அதை, "பேக்' செய்ய சில நாள், பின் அதை குறிப்பிட்ட கடைகளுக்கு கொண்டு செல்ல, சில நாள் என்று, அரிசியின் தரம் குறைந்து கொண்டு தானே போகும்! அதனால், 20 ரூபாய் அரிசி புழுத்துப் போவதாக, புகார் வரும் வாய்ப்பு உள்ளது.

இந்த அரிசி சப்ளையால், மோட்டா ரக அரிசி, சற்று தேக்கம் அடைந்து விட்டது உண்மை. இதனால் பாதிக்கப் போவது தமிழக விவசாயிகளே. அவர்கள் வைத்திருக்கும் நெல்லை வாங்க, ஆர்வமில்லை.தமிழக அரிசி ஆலை அதிபர்களிடம், தமிழக அரசே நேரடியாக அரிசி கொள்முதல் செய்ய வேண்டும். 

நுகர்பொருள் வாணிபக் கழகங்களில், நெல் விலையை, கிலோ, 14 ரூபாய் என்று உயர்த்த வேண்டும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து, அரிசி கொண்டு வரவும், மேலும் பிற இடங்களுக்கு மாற்றவும், 75 கிலோ மூட்டை ஒன்றுக்கு, தாராளமாக, 200 ரூபாய் ஆகும். அதை பொதிகளாக மாற்ற, 50 ரூபாய் செலவு ஆகும். ஆக மொத்தம், 250 ரூபாய், அரிசி ஆலை உரிமையாளர் களுக்கு, அரசு தர வேண்டும். ஆலை உரிமையாளர்களுக்கு இதை அளித்து விட்டால், மிகத் தரமான அரிசி, 20 ரூபாய் விலைக்கு அளித்துவிட முடியும்; இது மோட்டா ரகத்துக்கு மட்டும் பொருந்தும். 

சன்ன ரகம் என்றால், வெ.பொன்னி தான். இதையும் குறைந்தபட்சம் மூன்று மாதமாவது, ஸ்டாக் வைத்தால் தான், உணவாகும் போது குழையாமல், தண்ணீர் விடாமல் இருக்கும். இந்த சன்ன ரகத்திற்கு குறைந்தபட்சம், கிலோ, 35 ரூபாய்க்கு குறைத்து வாங்கினால், அது தரமற்றதாகி, மக்கள் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். 

தமிழக அரசு, அரிசி விற்பனையை இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். மோட்டா ரகம் இன்ன விலை; சன்ன ரகம் (பழசு) இன்ன விலை என்று கடை பிடிக்க வேண்டும்.ஒரு வட்டத்துக்கு, ஒரு அரிசி ஆலையை நியமித்து, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கும்படி உத்தரவிட வேண்டும். 

போக்குவரத்து செலவுகளுக்காக ஆகும் தொகையை, "மானியமாக' நினைத்து அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் வாழ்த்தவும், ஆலை உரிமையாளர்கள் புத்துயிர் பெறவும், மக்களுக்கு தரமான அரிசி கிடைக்கவும், இந்த அணுகுமுறை உதவலாம்.
(மெயில் 
கடிதம் : க.சோமு, கருங்குழி)

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...