Thursday, May 2, 2013

பவர் ஸ்டார் வீட்டில் போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்


மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

ஆந்திர மாநில தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர அவரிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் கமிஷனாகப் பெற்றார். ஆனால் பவர் கடனையும் வாங்கிக் கொடுக்கவில்லை, கமிஷனையும் திருப்பிக் கொடுக்கவில்லை. 

இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 26ம் தேதி பவரை கைது செய்து முதலில் புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவரை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றினர். 

பவரை 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் பவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று காலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. 

விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியும் என்றார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது மேலும் 3 பேர் மோசடி புகார்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...