Thursday, May 3, 2012

எம்ஜிஆரை இழிவுபடுத்தும் விஜயகாந்த்... இனி எழுவாரா?


ஒரு காட்டில் வீரதீரப் புலி ஒன்று இருந்ததாம். அந்தப் புலியைப் பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கி வாலைச் சுருட்டியபடி இருந்தனவாம். 

இதைக் கவனித்த ஒரு பூனைக்கு, தானும் அந்தப் புலி போல் ஆகி, எல்லா விலங்குகளையும் அடக்கி ஆள வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது. 

எனவே, புலியைப் போன்ற உருவத்தைத் தன் உடலில் கொண்டு வருவதற்காக வட்ட வட்டப் புள்ளியாக தனது உடலில் சூடு போட்டுக் கொண்டதாம். சூடு தாங்காமல் அலறியபடி அங்கும் இங்கும் ஓடி, பின் தண்ணீரில் உடலை நனைத்துவிட்டு, "நாம் பேசாமல் பூனையாகவே இருந்திருக்கலாமே, ஏன் இந்த விபரீத விளையாட்டில் இறங்கினோம்' என்று சிந்தித்துக் கண்ணீர் விட்டதாம். 

மேற்சொன்ன இந்தக் கதையைப் போல் தான் விஜயகாந்தின் நடவடிக்கைகள் உள்ளன. தன்னை எம்.ஜி.ஆராக பாவித்துக் கொண்டு பேசுவதும், தான், கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று தன்னைத் தானே புகழாரம் சூட்டிக்கொண்டு, மக்களுக்காகப் பாடுபடுவதாக பிரசாரம் செய்வதும் வேடிக்கையாக உள்ளது. 


தவிர, எம்.ஜி.ஆர்., சினிமா வழி அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்தாலும், ஒரு போதும் அவர் சினிமா பாணியில் நடந்து கொண்டதில்லை. பொதுக்கூட்ட மேடைகளிலும் சரி, சட்டசபையிலும் சரி, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டதில்லை. கையை நீட்டி, நாக்கை மடித்து தகாத வசனங்களைப் பேசியதில்லை. மிக மிக கண்ணியத்துடனும், நாகரிகத்துடனும் நடந்து கொண்டார். 

அண்ணாதுரையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைசி வரை கடைபிடித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. தனக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து, தான் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசிடம் சுமுகமாக நடந்துகொண்டு, நிதி ஆதாரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். 

அதை விட்டுவிட்டு, வீணாக வாயைக் கொடுத்து, வம்பில் மாட்டிக் கொள்வது தேவையா? பொது வாழ்வில் இருப்போருக்கு வேகத்தை விட, விவேகம் தேவை. ஆனால், விஜயகாந்திடம் இருப்பது வேகம் மட்டுமே. விஜயகாந்த் தனது பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்க நேரிடும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...