Friday, July 29, 2011

அக்டோபர் 3ல் ராணா - ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்... ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!


ரஜினியின் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணா படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. 

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். 

அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி. சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார். 

டாக்டர்கள் அறிவுரைப்படி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். 

இந்நிலையில் 'ராணா' பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் கேஎஸ் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, July 28, 2011

பிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்!


தேசிய விருது பெற்ற சந்தோஷம், மாமனார் ரஜினி நலம் பெற்று வீடு திரும்பிய உற்சாகம், கூடவே ரஜினி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் எனும் அளவுக்கு அதிகப்படி உரிமை கிடைத்த மகிழ்ச்சியிலிருக்கும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். 

இந்த 28வது பிறந்த நாளில் ரஜினியை சந்தோஷப்படுத்தும் இன்னொரு காரியத்தையும் செய்கிறார்... மனைவி ஐஸ்வர்யாவை இயக்குநராக புரமோட் செய்துள்ளார் தனுஷ்.

ஆம்... ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். தனுஷ் பிறந்த நாளான இன்றே இந்தப் புதுப்படமும் துவங்குகிறது.

இந்தப் படத்தில் தனுஷும் ஸ்ருதி ஹாஸனும் ஜோடி சேர்கிறார்கள். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். இன்னும் பெயரை அறிவிக்கவில்லை ஐஸ்வர்யாவும் தனுஷும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம். 

இந்தப் படப்பிடிப்பு காரணமாக, ரசிகர்களை நாளை சந்திக்கிறாராம் தனுஷ்.

Wednesday, July 27, 2011

பாலிவுட்டை வாங்கியது ஹாலிவுட்... தமிழ் சினிமாவில் புதிய திருப்பம்...


இந்திய பொழுதுபோக்குத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழும் யுடிவியை ரூ 2014 கோடி கொடுத்து வாங்குகிறது உலக அளவில் பிரபல நிறுவனமான வால்ட் டிஸ்னி.

யுடிவி நிறுவனத்தில் ஏற்கெனவே டிஸ்னி 50.44 பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிலையில் மீதியுள்ள பங்குகளை தலா ரூ 1000 வீதம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. 

யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி.

இதன் மூலம் புதிதாக $ 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி.

யுடிவி இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பலமாக காலூன்றி வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது டிஸ்னி வசம் முற்றாக இந்த நிறுவனம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிஸ்னி மூலம் தமிழ் சினிமாவுக்கான சர்வதேச மார்க்கெட் பெரிதாகவும் பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே யுடிவி வெளியிட்ட தெய்வத் திருமகள் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்து வேட்டை, வழக்கு எண் 18/9 மற்றும் கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பேனரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படமும் வால்ட் டிஸ்னி தயாரிப்பாக வெளியாகிறது.

ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் தனது துணை நிறுவனம் மூலம் நேரடி தமிழ் படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி


பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அதிரடிக்குப் பெயர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயவரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். கனடாவில் தன் மாமியார் வீடு வரை போய் வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்திவிட்டார். 

மும்பையில் நேற்று நடந்த நடன நிகழ்ச்சியொன்றுக்கு ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராக்கி சாவந்திடம் சினிமா சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.

ராக்கி சாவந்த் மேலும் கூறுகையில், " பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு அப்படியில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னை மணக்க சம்மதித்தால், சந்தோஷமாக உடனே திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

ஏதாவதொரு வழியில், சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல!

Tuesday, July 26, 2011

ராஜபக்சேவுக்கு ஆதரவு.. விஜய்யின் இரட்டை வேடம்....


இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

விஜய் மறுப்பு

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், "இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை," என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம். 

உடனே கோபமாக, "நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்," என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார்.

Saturday, July 23, 2011

ரசிகர்களைப் பரவசப்படுத்திய 'சிங்கப்பூரில் எடுத்த அரியப்படங்கள்!'

சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பிய நாளன்று அவரைப் பார்க்க தமிழகமே திரண்டு வந்ததைப் போன்றதொரு தோற்றம் சென்னை விமான நிலையத்தில்.


ரஜினி விமானநிலையத்திலிருந்து வெளியேறி ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டபோது, அவரை ரசிகர்களில் பலரால் முழுமையாக பார்க்க முடியவில்லை. போலீஸ் தள்ளு முள்ளு தடியடி என ஏக கலாட்டா. ஆனால் இதைவிட ரசிகர்களை வேதனைப்படுத்தியது, 'தலைவரைப் பார்க்க முடியவில்லையே' என்பதுதான். 

அன்றைய தினம் நடந்த கலாட்டாவில், ஒரு பத்திரிகை புகைப்படக்காரரால் கூட ரஜினியை தெளிவாக படம் எடுக்க முடியவில்லை. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது. 

அந்த வேதனை / ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ளன ரஜினியின் புதிய புகைப்படங்கள்.

இந்தப் படங்கள் அவர் சிங்கப்பூரிலிருந்து கிளம்பியபோது எடுக்கப்பட்டவை. 

தனக்கே உரிய மிடுக்கு மற்றும் ஸ்டைலில் அவர் நடந்து வருவது, பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் மருத்துவமனை ஊழியர்களுடன், சிங்கப்பூரில் தனக்கு உதவிய நண்பர்களுடன் சேர்ந்து நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இதில் உள்ளன.

ரஜினியை நேரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக 

அமைந்துள்ளன இந்தப் படங்கள்.
Friday, July 22, 2011

குழந்தைப்பேறு அளிக்கும் கல்யாண முருங்கை


தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாணமுருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன், எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், எரிசோப்பின்,ஸ்டாக்கியாடின், எரிபிடின், ஃபெருலிக் அமிலம், கஃபியிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன், டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படும். 

இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூகருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

வீக்கம் குறையும்

இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

மலடு நீங்கும்

இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

கிருமிகள் வெளியேறும்

இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.1 தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்நோய்க்கு மருந்தாகும் மரப்பட்டை

கல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக்கடுப்பு குணமாகும். (நன்றி தட்ஸ்தமிழ்)

செயல் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. திமுக முடிவு...


திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது.

திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தி்ல் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாள் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது. 

இதுபோக கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

Wednesday, July 20, 2011

நண்பர்களுக்காக சிறை சென்றார் மு.க. அழகிரி.. பரபரப்பு நிமிடங்கள்...

 
நில மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேரை சந்திக்க பாளையங்கோட்டை சிறைக்கு சென்று வந்தார் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசாமி சமுத்திரத்தை சிவனாண்டி என்பவருக்கு சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறி, திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு, கொடி.சந்திரசேகரன், சேதுராமன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கேட்டை சிறையில் அடைத்தனர்.

இதில் கோ.தளபதி, சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர்கள் என்பதால்,இவர்களை காண பாளையங்கோட்டை சிறைக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை வந்தார்.இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி,மைதீன்கான்,மதுரை துணை மேயர் மன்னன், தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா, திருநெல்வேலி திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அவ்வளவு தாங்க நீங்க என்ன நினைச்சீங்க...
 

Tuesday, July 19, 2011

போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'!


பெரியார் அடிக்கடி பிரயோகித்த வார்த்தை வெங்காயம். அது ஏதோ கெட்ட வார்த்தை என்று பலரும் நினைத்ததுண்டு. ஆனால் அந்த வெங்காயம் என்ற வார்த்தைக்குள் எத்தனை பெரிய தத்துவத்தை பெரியார் புரிய வைத்தார் என்பதை பின்னர்தான் அனைவரும் புரிந்து கொண்டனர்.

இன்றைய தலைமுறையினருக்கு பெரியாரின் கொள்கைகளை, புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தின் தலைப்பு 'வெங்காயம்'. போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம் உள்ளனவாம்.

தமிழ் சினிமாவில் பெரியாரின் கொள்கைகளைப் பேசி வருபவரும், அவர் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவருமான சத்யராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

முதல் சிடியை துப்புரவு தொழிலாளர் ஜானய்யா வெளியிட, ஏழுமலை என்ற விவசாயி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், "வெங்காயம்' படம், போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கிற படம்", என்றார்.

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஈழப்போரின்போது தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்துப் பேசினார்.

இயக்குநர் கவுதமன் பேசும்போது, "வெங்காயம், பெரியார் கொள்கைகளை சித்தரிக்கும் படம். பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்தும் அரசியல் கட்சிகள், இந்த படத்தை வாங்கி, திரைக்கு வருவதற்கு உதவ வேண்டும்'' என்றார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.

Monday, July 18, 2011

நெல்சன் மண்டேலாவுக்கு வயது 93: குவியும் வாழ்த்துக்கள்


முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கோடிக்கணக்கான குழந்தைகள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் சுதந்திரற்காக போராடி 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா. இன்று தென்னாப்பிரிக்கா என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது நெல்சன் மண்டேலா தான்.

அத்தகைய சுதந்திரப் போராட்ட வீரர் இன்று தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து 12 மில்லியனுக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் அவருக்காக எழுதப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இன்று பள்ளி ஆரம்பிக்கும் முன் பாடினர்.

கடந்த 2009-ம் ஆண்டு மண்டேலாவின் பிறந்தநாள் மண்டேலா தினமாக அறிவிக்கப்பட்டது. உலக அளவில் மண்டேலாவின் பிறந்த தினம் பொது சேவைக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது கிராமமான குனுவில் குடும்பத்தாருடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் மண்டேலா.

Saturday, July 16, 2011

ஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்

‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை எனப் பார்ப்போம்.

பச்சை நிறமே பச்சை நிறமே
 
பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கிஇலைகள், பாகற்காய்,போன்றவை குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளை தரக்கூடியவையாகும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. பச்சைநிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள தாது உப்புக்கள் இதய நோய் ஏற்படுவதை இது 11 சதவிகிதம் குறைக்கிறது

தானியங்கள்
இதயநோயை கட்டுப்படுத்துவதில் தானியங்கள் இரண்டாவது இடம் வகிக்கின்றன. அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம், பார்லி, போன்ற தானியங்களிலும் பருப்புவகைகளிலும் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின் இ, இதயத்தைப் பலப்படுத்தவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன. மேலும் இவற்றில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.
 
ஒட்ஸ்
 
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் ஒட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்தநாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பாதாம் பருப்பு
 பாதாம் பருப்பை இதயத்தின் நண்பன் என்று அழைக்கின்றனர் அந்த அளவிற்கு இதில் ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால் கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பாதாம் பருப்பை சத்துக்களின் தங்கச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுஉப்புகளும், இதில் உள்ள வைட்டமின் பி17, மெக்னீசியம், இரும்பு துத்தநாகச்சத்தும் பாதம் பருப்பில் அடங்கியுள்ளன. இதனை உட்கொண்டால் இதய நோய் எட்டியே பார்க்காது.

சோயபீன்ஸ்
 
 இதயநோய் வராமல் தடுப்பதில் சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ் உணவுகளில் உள்ள சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு

ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை. அந்த அளவிற்கு ஆப்பிள் ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஃபோலிக் அமிலச் சத்துகள் அடங்கியுள்ளன. எலும்புகள் வலுவடையவும் புதிய சிவப்பணுக்கள் உண்டாகவும் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது. இதிலுள்ள Methionine Acid ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட, இளமையான வாழ்வைத் தருகிறது. மேலும் ரத்தத்தில் கெடுதி செய்யும் கொழுப்பான எல்.டி.எல்-ஐ குறைக்கவும் நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி.எல்-ஐ அதிகரிக்கவும் உதவுகின்றன.

தக்காளி
 
ஏழைகளின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் சுத்தமான நீரும் பயோட்டின் (வைட்டமின் எச்) என்ற சத்தும் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைத் தடுக்க உதவும் லைசின் எனும் அமிலத்தை ரத்தத்தில் குறையாமல் பாதுகாத்து இளமையைப் பேண உதவுகிறது. தக்காளியிலுள்ள பொட்டாசியம் உப்பு அதிக சோம்பல், படபடப்பு, ரத்தக் கொதிப்பு, இதயநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. அதோடு, புற்றுநோய் நிவாரணியாகவும் பயன்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் மாதுளை
 
ஆலீவ் எண்ணெய் இதயநோய் வரும் வாய்ப்பை 53 சதவிகிதம் குறைக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள பாலி பெனோல்ஸ் என்ற இதயத்திற்கு நன்மை தரும் ஆன்டி ஆக்ஸிடென்டல் அதிகம் காணப்படுகிறது.


எனவே உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை தரும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டாலே நம்மை எந்த நோயும் அண்டாது என்பது உறுதி.

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்? பரபரப்பு தகவல்..


காவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்ட பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்போது அப்படியே நேர் எதிராகத் திரும்பியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்த விஜய், காவலன் படத்தின் போது அதே சன் பிக்சர்ஸுக்கு எதிராக மாறினார்.

இந்த காவலன் படத்தை வெளியிட தொடர்ந்து சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தடைகளை ஏற்படுத்தியதால் உரிய தேதியில் வெளியாகாமல் 3 நாள் கழித்து படம் வெளியானதாம்.

இதனால் பல கோடி வசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம் என்றும் கூறி விஜய்யே நேரடியாக கலாநிதி மாறன், சக்சேனா, அய்யப்பன் மீது புகார் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே 4 வழக்குகளில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறன் மீது 2 மோசடி, மிரட்டல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் ஜூலை 26-ம் தேதி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்த நிலையில் விஜய்யும் புகார் தரவிருப்பது, சன் குழுமத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு விஜய்க்கு எதிராக முன்பு போர்க்கொடி தூக்கிய அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, July 15, 2011

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சரிக்கை


தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் தெரிவித்துள்ளார்.

அதிக அளிவில் தண்ணீ்ர் குடிப்பதால் தோல் இளமையாக இருக்கும், நினைவுத் திறன் அதிகரிக்கும், உடல் எடை குறையும், சிறுநீரக பாதிப்புகள் வராது என்று ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

உடலுக்கு பொதுவாக நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, அந்த அளவு குடித்தால் போதும். உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகையில் தாகம் எடுக்கும். அப்படி தாகம் எடுக்கையில் தண்ணீர் குடித்தால் போதும்.

தேவைக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கப்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே, தலைவலி ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானதன்று என்றார்.

Thursday, July 14, 2011

'ராணா'வுக்காக தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!


ரஜினி திரும்பி வந்துவிட்டார், முன்னிலும் உற்சாகமாகவும், பொலிவுடனும். அவரைப் பார்க்க கஷ்டப்பட்டு முட்டி மோதி, போலீஸிடம் அடியெல்லாம்பட்டாலும், இந்த ஒரு விஷயத்துக்காகவே வந்திருந்த ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பெரிதுபடுத்தவில்லை.

அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது.

ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் ராணாதான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்.

காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது. திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே.

பெரிய பட்ஜெட் படம் என்பதால், எந்திரனை விட மிகப் பிரமாண்ட வெற்றியை ராணா பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணாவுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது.

இதையெல்லாம் மனதில் கொண்டு, ராணாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது.

தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.

இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்குவர இருக்கிறார்.

Wednesday, July 13, 2011

மனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்


பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும் (Fungus) அழிக்க பயன்படுத்தினர்.

மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க :

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.
மன அழுத்தம் போக்கும்

நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.
கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். (நன்றி தட்ஸ் தமிழ்)

Friday, July 8, 2011

ரஜினி சென்னை திரும்புகிறார்.. ரசிகர்களை சந்திக்கும் தேதி...


ரஜினி எப்போது வருவார் என்ற கேள்வியே ஓராயிரம் செய்திகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த கேள்வியைச் சுற்றிச் சுற்றியே கடந்த 30 நாட்களாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இப்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ரஜினி எந்த நேரத்திலும் சென்னை திரும்பும் அளவுக்கு 100 சதவீதம் பழைய உடல்நிலை மற்றும் தெம்பைப் பெற்றுவிட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுநாள்வரை ரஜினியை வீட்டுக்கே போய் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்துவந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ரஜினி எப்போது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம் என்று கூறிவிட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியைப் பார்க்கப் போகும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அவரது ஆலோசனையைப் பெற்றுவிட்டு சென்னை திரும்புகிறார். அதைத் தொடர்ந்து சென்னை வரும் ரஜினி, ரசிகர்களைச் சந்தித்த பிறகு, படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.

போயஸ் கார்டன் வீட்டில் புதுப்பிப்பு பணிகள் மும்முரம்

ரஜினி வருவதற்கு முன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வாஸ்துப்படி சில மாறுதல்களைச் செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறது. குறிப்பாக ரஜினியின் படுக்கை அறை, தியான அறை போன்றவற்றில் சில மாறுதல்கள் செய்யப்படுவதாக ரஜினி இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா?- நாஞ்சில் சம்பத்


சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கை கண்டித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழக மாணவரணியினர், சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையை எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கினைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் மாணவரணி சார்பில், அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலையருகே, திராவிடர் கழக மாநில மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்விக்கு எதிராக கல்வி வியாபாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழர் வரலாற்றையும், திருவள்ளுவர், பெரியார், அண்ணா, டி.எம். நாயர், தியாகராயர் போன்ற தலைவர்களின் பற்றிய பாடங்களை மறைத்தும், கிழித்தும் பாடத் திட்டத்தை சீரழித்துள்ள மனுதர்ம போக்கினைக் கண்டித்து சென்னை மாவட்டத்திலுள்ள திராவிடர் கழக மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளுவர் மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்?-நாஞ்சில் சம்பத்

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்ய முயற்சித்து வருவதாக மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

அவர் கூறுகையில், பாடப்புத்தகத்தின் பின்னால் வள்ளுவர் படம் இருக்கிறது. வள்ளுவர் படத்தை பச்சை அட்டை வைத்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா?. வள்ளுவர் மீது உங்களுக்கு (ஜெயலலிதா) என்ன கோபம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது தப்பா?. ஏன் வள்ளுவர் மீது ஆத்திரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல், உயர்நீதிமன்றத்தையே நீங்கள் அவமதிக்கின்றீர்களா?.

நீங்கள் செய்தது இமாலய மடத்தனம். நீங்கள் சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டி விடுவோம் என்று கருதாதீர்கள். சமூக நீதிக்கு சமாதி கட்டுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றார்.

Wednesday, July 6, 2011

முடிந்தது 'தேடல்'... அழிக்கப்பட்டன 'தடயங்கள்'... வன்னியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வந்தது.

போர் நடந்த வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள், நிருபர்கள், புகைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த தடை நீக்கப்படவில்லை.

அந்தப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் புதையல், பணம், தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், போர் முடிந்தும் மூன்று ஆண்டுகளாக ராணுவம் தேடி வந்தது.

தமிழர் நிலங்களையெல்லாம் அபகரித்து, ராணுவ முகாம்களாகவும் மாற்றியுள்ளது.

மேலும் சண்டை உக்கிரமாக நடந்த பகுதிகளில் பல்லாயிரம் தமிழர் கொல்லப்பட்டதன் தடயங்களை அழிப்பதிலும் மும்முரமாக இறங்கியிருந்தது ராணுவம்.

இதற்காகவே, போர் முடிந்த பிறகும் பயணிகளை, குறிப்பாக பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுத்து வந்தது சிங்கள அரசு.

இப்போது இந்த வேலைகளை கச்சிதமாக முடித்துவிட்டனர் ராணுவத்தினர். வன்னிப் பகுதியில் புலிகள் பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள நகைகளை ராஜபக்சே குடும்பத்தினர் பதுக்கிக் கொண்டதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று வட இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக இலங்கை அரசு அறிவித்தது.

போர் முடிந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதாலும், சுற்றுலா நல்ல வளர்ச்சியடைந்து வருவதாலும் இந்த தடையை நீக்குவதாக ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

Saturday, July 2, 2011

சாதி்க் பாட்ஷா கொலை- திமுக தொடர்பா..?ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதி்க் பாட்ஷாவின் தற்கொலைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுக தெரிவித்துள்ளது.

முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். 2ஜி வழக்கு தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையால் மன உளைச்சலில் தவித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறினர்.

ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரத்திற்குப் பிறகுதான் பாட்ஷாவின் மரணம் குறித்த தகவல் வெளியானதால் அதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. பாட்ஷா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது திமுக அரசு. இந்நிலையில் பாட்ஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து ஒரு டாக்டர்கள் குழுவை அமைத்து சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று இன்று திமுக தெரிவித்துள்ளது. இது குறித்து எந்த விசாரணையையும் சந்தி்க்கத் தயார் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திமுகவுக்கு சாதிக் பாட்ஷாவின் மரண வழக்கும் ஒரு தலைவலியாக உள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...