Thursday, December 26, 2013

பலிக்குமா கலைஞரின் இந்த கேடுகெட்ட வியூகம்


'காங்கிரசோடும் பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை' என, கருணாநிதி, தன் கட்சி பொதுக்குழுவில், அடித்து சத்தியம் செய்திருக்கிறார். 

கிராமப் புறத்தில், மொடாக் குடிகாரன், 'இனி, நான் குடிக்கமாட்டேன்' என, சத்தியம் செய்தால், 'இது எத்தனையாவது சத்தியம்?' என, பலரும் அவனை கிண்டலடிப்பர். அதுபோல் தான், கருணாநிதியின் சத்தியமும், கேலிக்குரியதாகி உள்ளது. 

ஒவ்வொரு முறையும், 'காங்கிரசுடன் உறவு முறிந்து விட்டது' என, கருணாநிதி அறிவிக்கும் போதெல்லாம், தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து, காங்கிரசாரின் உருவ பொம்மையை கொளுத்தி விளையாடுவது வழக்கம். 

கொளுத்திய பட்டாசு அணைவதற்குள், பதவிக்காக, தன் குடும்ப நலனுக்காக, காங்கிரசோடு ஒட்டி உறவாடுகிற நிலையை, கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் எடுத்து விடுவார் கருணாநிதி. 

'இந்திராவிடம், தாயின் அன்பைப் பார்த்தேன், சோனியாவிடம், மகளின் பாசத்தைப் பார்க்கிறேன்' என, சில தினங்களுக்கு முன் உருகினார். சில மாதங்களுக்கு முன், மகள் கனிமொழியின் எம்.பி., பதவிக்காக சோனியாவை, 'மணிமேகலை' என்றார். 'பண்டார பரதேசிகள்' என, அழைத்த, பா.ஜ.,கட்சியுடன் தான், மத்தியில் பேரம் பேசி அமைச்சர் பதவி வாங்கினார். 

அது, காங்கிரசாய் இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், வேறு வழியில் லை. இப்படி, 'உதார்' விட்டால், கிட்டே வரும் உதிரிக் கட்சிகளை வைத்து வென்று, பின், அவற்றை கழற்றி விட்டு, மத்தியில் ஒட்டிக் கொள்ளலாம் என்ற நரித்தந்திரம் தான், கருணாநிதி நினைப்பில் உள்ளது. 

அதனால் தான், 'மத்தியில் அந்தக் கட்சி வருமா? இந்தக் கட்சி வருமா?' என, ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் உட்கார்ந்து, கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்கு என்பது, மொத்த வழக்குகளையும், எப்படி குழிதோண்டி புதைப்பது என்பது தான். இதில், தமிழர் நலன், கட்சி நலன் என்பதெல்லாம், 'டுபாக்கூர்' தான்! 

எது எப்படி போனாலும், இனி வரும் காலங்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தேய்பிறை தான். எத்தனை கூட்டல், கழித்தல், வகுத்தல் போட்டுப் பார்த்தாலும், கருணாநிதியின் கணக்கு, தப்பாகவே இருக்கும். இது சத்தியம். என்.மதியழகன், பெண்ணாடம், கடலூர்.

Tuesday, December 24, 2013

வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?



*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.

Monday, December 23, 2013

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை


ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. 

அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை. 

இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும். இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.



ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...' 

'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..." 

அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?" 'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி. 

இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர். 
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 

'தலைவா, வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'. அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 

'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று 

ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்". இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். 

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !" அமிதாப் ஆடிப் போனார். 

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?" ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார். 

இருவரும் வாடிகன் சென்றனர். போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. 

ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. 

"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார். அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. 

நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார்,

"பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"

போப்பாண்டவரை தெரியாது.. ஆனால் ரஜினியை தெரியுமா..?



Wednesday, December 18, 2013

பாலு மகேந்திரா-வின் தலைமுறைகள்- விமர்சனம்


இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம். 

உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம். நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம். 


தமிழ், தமிழ் கிராமங்கள், தமிழர் அடையாளங்கள், தமிழர் பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து தொலைந்து தொலைந்து... நன்கு தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் முற்றாக ஆங்கிலத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறை பிள்ளையின் தாய் மொழியையும் கொல்லும் அவலம் பார்த்து ஆதங்கப்படும் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட வாத்தியாரின் கிழப் பருவத்து நாட்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் பாலுமகேந்திரா. 

இந்த வாழ்க்கைக்கு இனி திரும்பத்தான் முடியுமா என்ற மலைப்பான கேள்வியுடன் கனத்த மவுனத்தைச் சுமந்து வெளியேறுகிறோம். உள்ளது உள்ளபடியான பதிவு இது. 

தாத்தாக்களின் கைகளைப் பிடித்து நடந்த நாட்கள், தாத்தாக்கள் செதுக்கிக் கொடுத்த பொம்மைகளுடன் பொழுது போக்கிய பால்யம், ஆறும் பசும் வயல்களும் சுத்தக் காற்றும் சுவாசித்த கிராமத்துத் தருணங்களை மனதில் தேக்கியிருக்கும் யாரையும் தலைமுறைகள் தளும்ப வைக்கும். 



இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் படத்தின் முதன்மை பாத்திரம். வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண்களும், ஏக்கம் சுமந்த பார்வைகளும், ஒரு கலாச்சார சீரழிவைப் பார்த்து நிற்கும் கையாலாகாத்தனமும்.. கண்களிலேயே இன்னும் நிற்கின்றன! 

அவரது மகனாக நடித்திருக்கும் சசிகுமார், மருமகளாக வரும் ரம்யா சங்கர், ஊர் மனிதர்களாக தோன்றும் லட்சுமணன், அந்த பாதிரியார்.. எந்தப் பாத்திரத்தையும் சினிமாவில் பார்க்கிற உணர்வே இல்லை. பேரனாக வரும் சிறுவன் ஸ்ரீகாந்த் அற்புதம். 

ஒரு காட்சியில் வந்தாலும் படத்தில் நிறைந்திருக்கிறார் இயக்குநர் எம் சசிகுமார். படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகுமாரும் ரம்யாவும் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள், அதுவும் குடும்ப விஷயங்களை. இத்தனைக்கும் கதைப்படி இருவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இந்தக் காட்சி மனதில் எரிச்சலைக் கிளப்புவது நிஜம். 

ஆனால், இதோ... பக்கத்து வீட்டில், மகன்- மகள் தமிழ் பேசிவிடக் கூடாது என்று தண்டனை முறையையே அறிவித்துள்ள பெற்றோரை நினைத்துப் பார்த்தால், பாலு மகேந்திரா சரியாகவே இந்த சமூக மாற்றங்களைக் கவனித்து வருகிறார் என்பது புரிந்தது. அதிகமில்லை, அளந்து அளந்து பேசும் பாலுமகேந்திராத்தனமான வசனங்கள்தான். 



ஆனால் அது போதுமானதாகவே இருக்கிறது இந்தப் படத்துக்கு.. வளவள என பேசாமல் காட்சிகளைப் பேச வைப்பதுதானே சினிமா மொழி! விறுவிறுப்பான திரைக்கதை இல்லை.. அதிரடியாக எந்தத் திருப்பமும் இல்லை. ஆனால் இவை ஏதுமில்லாமலேயே, தன் உணர்வுகளை ஒரு ரசிகனுக்குள் கடத்த முயலும் என்பதைக் காட்டியிருக்கிறார் பாலு. 

35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது. அதுவே ஒரு எளிய கவிதைத்தனம் சேர்க்கிறது படத்துக்கு. இயற்கை தந்த ஒளியில், எந்த உறுத்தலான கூடுதல் நுட்பமும் சேர்க்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

இளையராஜாவின் இசை இந்தப் படத்தில் நிஜமான ஒரு சோதனை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். வசனங்கள் பேசும் இடங்களில் இசைக்கு வேலையில்லை. காற்றும், நதியும், பறவைகளும் சலசலத்து சங்கமிக்கும் காட்சிகளிலும் இசைக் கருவிகள் அமைதி காக்கின்றன. 

ஆனால் பாத்திரங்கள் பேசிக் கொள்ளாத காட்சிகளில் மட்டும் உறுத்தாமல் ஒரு தென்றலைப் போல வந்து போகிறது ராஜாவின் இசை... எது நிஜமான பின்னணி இசை என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு வகுப்பெடுத்திருக்கிறார் இசைஞானி! 

'அய்யோ தமிழும் தமிழ் கிராமங்களும் கலாச்சாரமும் அழிகிறதே... வீறு கொண்டெழுங்கள்' என்ற பிரச்சார தொனி இல்லாமல், ஆனால் அந்த மாதிரி உணர்வை பார்க்கும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். வணிக ரீதியிலான பலன்களை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக முன்வந்த சசிகுமார் பாராட்டுக்குரியவர்.

நன்றி ஒன் இந்தியா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...