Monday, October 8, 2012

எல்லோரையும் கொஞ்சம் பேச விடுங்க கோபிநாத்!



விவாத நிகழ்ச்சி என்றாலே நிகழ்ச்சி தொகுப்பாளரை விட பங்கேற்பாளர்தான் அதிகம் பேசவேண்டும். ஆனால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளரை விட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அதிகம் பேசுகின்றனர்.

‘நீயா நானா' நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தாலும் அவர்கள் பேசுவதை விட தொகுப்பாளர் கோபிநாத்தான் அதிகம் பேசுகிறார் என்கின்றனர் விமர்ச்சகர்கள்.

இந்தவாரம் உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா கூடாதா என்பது பற்றி விவாதம் நடைபெற்றது. அத்தைப் பெண்ணையோ, மாமன் மகனையோ திருமணம் செய்வதை ஏன் விரும்புகின்றனர். அந்நியத்திற்குள் திருமணம் செய்வதை ஏன் தவிர்க்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் கருத்துக்களை முன் வைத்தனர். சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது பாதுகாப்பானது என்ற கோணத்திலேயே பேசினார்கள் ஒரு சாரார். அதற்கு கோபிநாத், எத்தனையோ வீடுகளில் அந்நியத்தில் இருந்து வந்த பெண் மகள் போல நடந்து கொள்வதும், சொந்தத்தில் திருமணம் செய்த பெண் குடும்பத்தை பிரிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினார் கோபி. இந்த இடத்தில்தான் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை சரியாக கூட கூறவிடாமல் தொகுப்பாளரான கோபிநாத் அதிகம் பேசினார். அது தவிர ஒருவர் கருத்துக்களை கூறும் முன்பாக வேற... வேற... என்று கூறி டைவர்ட் செய்வதும் நடந்தது.

சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதன் மூலம் வெளி வட்டார பழக்க வழக்கம் தடுக்கிறது. மரியதை கிடைக்காது. பரம்பரை பகையா மாற வாய்ப்புள்ளது எனவே நெருங்கிய உறவுக்குள் திருமணம் கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது சாதிய சிந்தனை என்றும் கலப்புத்திருமணங்கள் ஏற்படுவதை தடுக்கிறது என்றும் கூறினார்கள்.

நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது அழகானது. ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். சொந்தமும் சொத்தும் விட்டுப்போகாது என்று கூறினார்கள் சொந்தங்களுக்குள் திருமணம் செய்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, எழுத்தாளர் ராஜேந்திர சோழன், டாக்டர் கமலா செல்வராஜ், உள்ளிட்ட பல சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

உறவுகளுக்குள் திருமணம் செய்வது விபரீதம். ஆளுமையற்ற குழந்தைகளை உருவாக்கும், தலைமுறையை பாதிக்கும். குழந்தைகள் அசாதாரணமான நிகழ்வுகளோடு இருக்கும்.எதிர்கால தலைமுறையை பலவீனமானதாக இருக்கும் என்றார் எழுத்தாளர் ராஜேந்திர சோழன்.

ஆனால் சொந்தக்களுக்குள் திருமணம் செய்வது காலம் காலமாக நடைமுறையில் இருக்கிறது. பாரம்பரியத்தை உடைக்கவேண்டாம் என்றார் வேல. ராமமூர்த்தி

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் மரபணு ரீதியான பிரச்சினையைத்தான் தரும் என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் ஹெப்சிபா. டாக்டர் கமலா செல்வராஜ். சொந்தத்தில் திருமணம் செய்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். எத்தனையோ கண்ணீர் கதைகள் உள்ளன என்றார்.

இளங்கோ கல்லானை சமூக பார்வையாளர் எழுத்தாளர், மரபணு மாற்றத்தினாலும், அறிவியல் ரீதியாகவும் கூட சில தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.

நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போகும் போதே பிரேக் விடும் கோபிநாத், அனல் பறக்கும் இந்த விவாதம் பற்றி பேசலாம் இன்னும் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு என்று சொன்னாலும் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட கோபிநாத்தான் அதிகம் பேசினார் என்கின்றனர் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள்.

எனவே கோபிநாத் நீங்க அதிகமா பேசுறதை விட கொஞ்சம் பங்கேற்பாளர்களையும் பேச விடுங்களேன் என்பது நேயர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...