Friday, September 14, 2018

சீமராஜா - சினிமா விமர்சனம்சிவகார்த்திகேயன், சூரி, இமான், பொன்ராம் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக வெளிவந்திருக்கும் படம் சீமராஜா...

காதல், காமெடி, சண்டை, பன்ச் டயலாக் என கலந்து கட்டி இருந்தாலும், சம்மு வரும் காட்சிகள் மனதை கொள்ளையடிக்கிறது.

சூரி வழக்கம் போல சிவாவுக்கு அல்லக்கையாக வந்தாலும், அவ்வப்போது பெண்கள் ஆடியன்ஸை கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும், அந்த சிறுத்தை காமெடி தியேட்டரையே கலகலப்பாக்குகிறது. 

சிம்ரன் இடை'யிடையே வந்து கத்துகிறார். ரசிக்க முடியவில்லை. ப்ளாஸ்பேக் ராஜாவாக சிவா உடலளவில் கம்பீரமாக இருந்தாலும், முகத்தில் கம்பீரமற்று குறும்பு ராஜாவாக தெரிகிறார். 

ப்ளாஸ்பேக்கில் ராஜா மனைவியாக கீர்த்தி சுரேஷ் சில நிமிடங்களே வந்தாலும் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடிக்கிறார்.சமந்தா, மிக அழகாக இருக்கிறார். கம்பு சுற்றும் காட்சிகளில் க்ளாப் வாங்குகிறார். இமான் இசை வழக்கம் போல முனுமுனுக்க வைக்கிறது. 

VVS, ரஜினிமுருகன் படங்களில் காதலையும், காமெடியையும் மட்டுமே நம்பி சக்ஸ்ஸ் ஆக்கிய இந்த கூட்டணி கிராமத்து மண் பங்கீடு பிரச்சனை எனும் கதையை காதலுடனும், காமெடியுடனும், சற்று விறுவிறுப்பைக் குறைத்து படைத்திருப்பதால் ருசி இல்லாத விருந்தாக வந்திருக்கிறார் சீமராஜா.
.
சிவா வழக்கம் போல, பெண் ரசிகைகளை கவர்கிறார். இதுவரை வந்த பெரும்பாலான கருத்துக்கள் படம் மொக்கை என்றே வந்திருந்தாலும், பெண்களின் விருப்பமாக சில நாட்களுக்கு சீமராஜா இருப்பார். அதற்கு சமந்தாவும், சூரியும் துணையிருப்பார்கள்.

முகநூலில் தமிழ்வாசி பிரகாஷ்

Tuesday, August 14, 2018

பெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..?


நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கும், அரசியல் ரீதியாக உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது, மிக அவசியம்.அப்படி அதிகாரம் கிடைக்கும் போது தான், அது உண்மையாகவே சிறந்த அரசியலாக இருக்கும்.

ஆனால், தற்போது நாட்டின் பல பகுதிகளில், தங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு கூட, கணவரிடம் ஆலோசிக்கும் நிலையில் தான் பெண்கள் உள்ளனர். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், பதவிக்கு வரும் பெண்களில் பலர், படித்தவர்களாக இருந்தாலும், கணவர், சகோதரர்கள் சொல்படியே செயல்பட்டனர். 

உள்ளாட்சிகளில், கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண்கள், தங்கள் பணி என்ன என்பது கூட தெரியாமல் இருந்தனர். அவர்களின் தந்தை, கணவர், சகோதரர் உள்ளிட்ட ஆண்கள் தான், பல இடங்களில் பெண்களை இயக்கினர்.மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் போது, அந்தந்த கட்சிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோரின் கல்வித் தகுதி, திறமை போன்றவற்றை அலசி ஆராய்ந்து நிறுத்த வேண்டும். 

உறவு அரசியல் முறையை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.பார்லி.,யிலும், சட்டசபையிலும், மகளிருக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. 'நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்' என, மத்தியில் ஆள்வோர் கூறுகின்றனர்.'படித்த பெண்கள், சமூகப் பிரச்னை குறித்து, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல், அடுத்த கட்டத்துக்கும் வர வேண்டும். 

சாமானிய பெண்கள், இடஒதுக்கீட்டால், அரசியலில் ஈடுபட்டு விட முடியாது. 'அரசியல்வாதிகளின் மனைவியரும், மகன்களும் மிக எளிதாக அரசியலுக்கு வருவதற்கு மட்டுமே, 33 சதவீத இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கும்' என, தேசிய மகளிர் ஆணையத் தலைவி, ரேகா சர்மா கூறியுள்ளார். அவரது கூற்றையும், ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளது. எனவே, பெண்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகாரத்தை, யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது!---
அ.சரவணன், பெங்களூர்

Friday, August 10, 2018

ஒரு மருத்துவரின் மனப்போராட்டம்...!Apothecary (2014)

முன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary. ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே!


இந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர். நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார். அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.


நாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.


கனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் ’உலகத்துக்கு’ மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கப் பார்க்கிறார்கள். இறுதியில் ஜெயித்தது யார்? என்பது மீதிக்கதை!
நமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.


மதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு, காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீதி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.


இன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள். இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார். லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.


மேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.


படத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.
சொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள்? அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.


இன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும். கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்துவம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.

****

படத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.


எடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்டை என்கிற வணிக அம்சங்கள் இல்லை. படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு. மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
நன்றி முகநூலில் :  Ramki Selvam‎  @World Movies Museum

Friday, June 8, 2018

எப்பவும் ரஜினிதான் கெத்து....?


கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்?

சற்றே 40 வருடங்களுக்கு பின் நோக்கி பயணித்தால் சில உண்மைகள் தெரியவரும்.  அப்பொழுது தமிழில்  சிவப்பான நிறமும் மென்மையான முக தோற்றமும் உள்ளவர்களே கதாநாயகர்கள்.

தமிழ் இளைஞர்களின் இயல்பான  கருப்பான நிறம், வில்லன்களுக்கும் அடியாட்களுக்கும் என ஒதுக்கபட்டது. ரோஸ் நிறத்தில் கார்ன் பவுடரை அப்பி கதாநாயகர்கள் கதாநாயகிகளை லவ்வினர். கருப்பு நிறத்தவர் காதலிக்கவும் ,உயர்ந்த வாழ்வு வாழவும் தகுதி அற்றவர்போன்றே அன்றைய சினிமா காண்பித்தது . கசப்பான உண்மை என்னவென்றால் சினிமாவில் காண்பிப்பதை தான் சமுகம் பின் தொடரும் என்பது தான் .

நிறத்தை பற்றிய தாழ்வு மனப்பான்மை தமிழகத்தில் பரந்து நிறைந்து இருந்தது என்பது உண்மை . கேட்பதற்கு சிரிப்பை தந்தாலும் கருவா பயலே . குழந்தையை தூக்காதடா உன் கருப்பு குழந்தைக்கு ஒட்டிக்கும், மாப்பிள்ள நல்ல சிகப்பு தெரியுமா  என கருப்பு தமிழன் கேலி செய்யப்பட்டான்.சாதாரணமான விசயமாக இது தோன்றினாலும் கருப்பு தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது போன்ற விஷயங்கள் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை .
.
இந்த காலகட்டத்தில் தான் ஒரு கருப்பாய், மிகவும் சிந்திக்காத ,சடேர் என உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட கூடிய  சாதாரண தமிழனை பிரதிபலிக்க கூடிய பாத்திரமாக ரஜினி திரையில் தோன்ற ஆரம்பித்தார் .

பிரமாதமான நடிப்பு என்று சொல்லமுடியாது .தன் சக கால ஹீரோவான கமலஹாசனை போன்று அழகும் ,திறமையும் , கிடையாது . இத்தனை நெகடிவ் பாயிண்ட்கள் இருந்தும் ரஜினி பாமர தமிழ் ரசிகனை கவர ஆரம்பித்தார் .

ஆரம்ப கால ரஜினி படங்களில் அவர் ஏற்று நடித்த அடித்தட்டு மனித வேடங்கள் மிக பெரிய ரசிகர் வட்டத்தை சேர்த்தது . "சந்தன மேனி" என பாடல் வரிகள் எழுதிய கவிஞர்கள் , கருப்பு" கன்னம் தொட்டு" என பாடல் எழுத ஆரம்பித்தனர் . திரையில் ரஜினி செய்ததை எல்லாம் தானே செய்தது போல ரசிகன் எண்ணி மகிழ்ந்தான்.
அதற்க்கு பின் வந்த கருப்பு கதாநாயகர்கள் விஜயகாந்த் ,முரளி , முதல் தற்போதைய விஜய் ,விஷால் தனுஷ் வரை பலருக்கும் ரஜினி தான் முன்னோடி . இன்று கருப்பு அழகற்றது  என்கிற தோற்ற பிம்பம் மறைந்து விட்டது என்றே கூறலாம் . தான் கருப்பாய்  இருக்கிறோம் என்கிற தாழ்வுமனபான்மை மறைந்து கருப்பாய் இருப்பவர்களை பெண்கள் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் .

தற்போதைய தலைமுறைக்கு இந்த விஷயங்கள் தெரியாது . இன்று 40 பிளசில் இருக்கும்  பல தமிழ் கருப்பு  இளைஞர்களுக்கு தெரியும் . ரஜினி அவர்களின்  தன்னம்பிக்கை .

சூப்பர்மேன் , ஸ்பைடர்மேன் ஜேம்ஸ்பாண்ட் போல ரஜினி என்பது  தமிழ் இளைஞர்களின் கதாபாத்திரம். அந்த பாத்திரம் தோற்க்க  அவரது ரசிகர்கள் விடமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களின் தோல்வி....
சூப்பர்ஸ்டாரின் ரசிகனாய்  ஆர்.கே.செந்தில்குமார் (facebook) 

Wednesday, June 6, 2018

தவிர்க்க முடியாத தமிழ் சினிமா... திரும்பி பார்க்குமா சமூகம்..!

 
தொண்ணூறுகளின் பிள்ளைகள் (90s Kids) என்று ஒரு சொற்றொடர் பரவலாகியிருக்கிறது. எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ பிறந்தவர்கள் இவ்வுலகை அறியத் தொடங்குகிற சிறுவம் அது. 
 
இப்போது அவர்கள் வேலையிலமர்ந்து திருமண அழைப்பிதழில் பெயரேற்றம் பெற்றபடியிருப்பார்கள். அவ்வாறே எண்பதுகளின் பிள்ளைகள் என்று ஒரு சொற்றொடரைக் கூறினால் அதுவே எனக்குச் சிறுவம். தொண்ணூறுகளின் பிள்ளைகளுக்கு அகல்திரைப்படங்கள், 
 
ஷங்கர், இரகுமான், மனீசா, நக்மா, மதுபாலா என்று அவர்களுடைய திரைப்படச் சுவைப்பின் தொடக்கம் இருக்கக்கூடும். எண்பதுகளின் பிள்ளையான எனக்கு இளையராஜா, பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்தினம், ஆபாவாணன், இராதா, அம்பிகா, குஷ்பு என்று திரைப்படச் சுவைப்பின் முகங்கள் அமைந்தன. எம்ஜிஆர் தம்முடைய முதற்படத்தில் அறிமுகமான ஆண்டில் என் தந்தையார் பிறந்தார். நான் எம்ஜிஆரின் முதற்படத்தைப் பார்த்தபோது அவர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்

 
எண்பதுகளின் பிள்ளைகள் இரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் பிரபு பாக்கியராஜ் இராமராஜன் போன்ற நடிகர்களின் விருப்பினராக இருந்தவர்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் அவரவர் வீட்டு மூத்தோர்களின் விருப்புக்குரியவர்கள். 
 
 
 
கறுப்பு வெள்ளைப் படங்கள் என்றால் ஓர் இளக்காரம் தோன்றியிருந்த காலகட்டம் அது. அதனால் பழைய படங்களைப் பார்ப்பதைச் சிறுவர்களாகிய நாங்கள் எட்டிக்காயாகவே கருதினோம். அக்காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஞாயிற்றுக் கிழமைப் படங்கள் அதன் கறுப்பு வெள்ளைப் பழைமைக்காகவே எள்ளி நகையாடப்பட்டதும் உண்டு. வளர்ந்து அறிவு முதிர்ச்சி ஏற்பட்ட பின்னரே கறுப்பு வெள்ளையின் கலைமதிப்பை அறிந்தோம் என்பது கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது.


புதுப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பழைய படங்களும் தொடர்ந்து திரையிடப்பட்டன. மூன்றாம் வகுப்பு படிக்கையில் நான் கடிதங்கள் எழுதவும் அனுப்பவும் பழகியிருந்தேன். என் தாய்மாமனுக்கு எழுதிய கடிதமொன்றில் அனைத்து நலன்களையும் வினவி முடித்து "ஊர்க் கொட்டகையில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பதில் கடிதத்தில் மறக்காமல் தெரிவிக்கவும்" என்று முடித்திருந்தேன். 
 
பதில் கடிதத்தில் "சுமதி என் சுந்தரி" என்ற விடையும் கிடைக்கப்பெற்றேன். ஊர்க் கொட்டகையில் சுமதி என் சுந்தரி ஓடினால், அன்றிரவு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதைத்தான் நாங்கள் பார்த்தாக வேண்டும். இவ்வாறு பழைய படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். அம்மையின் இடுப்புக் குழந்தையாக இருந்தபோது நான் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆட்டுக்கார அலமேலு. இன்னொன்று குடியிருந்த கோயில். இப்போது 
 
 
 
அப்படம் பார்த்த காட்சிகள் மங்கலான அரைநினைவுகளாக இருக்கின்றன. அவ்விரண்டு படங்களும் என்னைக் கவர்ந்தன என்றாலும் குடியிருந்த கோயில் கொண்டாட்டமாகவும் கோலாகலமாகவும் இருந்ததாய் நினைவு. பழைய படங்களின் நீளமான கண்ணீர்க் காட்சிகள் சிறுவர்களுக்குக் கட்டாயம் விளங்கவேண்டும் என்பதில்லையே. இதற்கிடையே "வாழ வைத்த தெய்வம்" என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஓடோ ஓடு என்று ஓடியது. எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. 
 
குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன் படுகின்ற பாடுகளைப் பற்றிய படம் அது. ஜெமினி கணேசன் நடித்தது. பொதுவாக, ஒரு படத்திற்குச் சென்றால் திரையைவிட்டுக் கண்களை விலக்க மாட்டோமில்லையா... வாழ வைத்த தெய்வத்தைப் பார்க்கையில்தான் திரையரங்கை நன்றாகக் கழுத்து திருப்பிப் பார்த்தேன். அன்றுதான் "பழைய படமா... நம்மால் முடியாதடா சாமி... ஆளை விடுங்க..." என்ற மனநிலைக்கு வந்தேன்.

சிறுவத்தின் ஆர்வத்தோடு படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது அவ்வப்போதைய புதுப் படங்களே ஆர்த்தைத் தூண்டின. ஆனால், எல்லாப் புதுப்படங்களும் சிறப்பாக இருக்கவில்லை. அதுபோன்ற களைப்பான வேளையில்தான் தற்செயலாக எம்ஜிஆர் படமொன்றைப் பார்த்தேன். 
 
 
 
ஊரிலிருந்து உறவுகள் வந்திருக்க அவர்களோடு அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு "இரண்டாவதாட்டம்" சென்றோம். "எல்லாரும் படம் பார்க்கப் போறோம்... நீ மட்டும் எதற்கு வீட்டில் தனியாக இருந்துக்கிட்டு... கிளம்பு..." என்று என்னைக் கிளப்பிவிட்டார்கள். அவர்கள் எல்லார்க்கும் அந்தப் படத்தைப் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம். அவர்களுடைய விருப்பத்திற்குரிய நாயகன். முன்பே கேட்டு மகிழ்ந்த பழைய பாடல்கள். ஆனால், அரைகுறை மனத்தோடு விருப்பமில்லாமல் படம்பார்க்கச் சென்ற நான் என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிட்டேன். 
 
படத்தின் விரைவு புதுப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனித்தது. அட... பழைய படங்கள் என்று தள்ளியிருந்தோமே... இவ்வளவு நன்றாக இருக்கிறதே... என்று திகைத்துப் போய்விட்டேன். அந்தப் படம் எம்ஜிஆர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்." நல்லவனும் கொள்ளையனுமாக இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்த அப்படம் பிறமொழிப் படமொன்றின் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். எம்ஜிஆர் படங்களைப்போலவே சிவாஜி படங்களின்மீதும் என் ஆர்வம் திரும்பியது. பாசமலர் போன்ற அழுகைப் படங்களைப் பார்த்து மிரட்சியடைந்திருந்த நான் சிவாஜி படங்களைப் பார்க்காமல் இருந்தேன். தற்செயலாகவே "திருவிளையாடல்" பார்க்க வாய்த்தது. சிறுவத்தின் இளநிலை ஆர்வங்களைத் தாண்டத் தெரியாதிருந்த எனக்குத் திரைச்சுவையின் நுண்மைகள் பிடிபடத் தொடங்கின. 
 
 
 
சிவனின் திருவிளையாடல்களைக் கூறிச்சென்ற அப்படத்தின் முதற்பகுதியாக இடம்பெற்ற "ஆயிரம் பொற்காசுப் படலம்" என்னை மயக்கி ஆட்கொண்டது. மறுநாளே தென்னம்பாளையத்தில் ஒரு மளிகைக்கடையில் திருவிளையாடல் உரையாடல் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். திரைப்படமொன்று அதன் எழுத்துப் படியிலும் தமிழ்ச்சுவை சொட்டும்படி அமைந்திருந்தது என்றால் அது திருவிளையாடல்தான். சிவாஜியின் படங்கள் தமிழ்த்திரைத்துறைக்குக் கிடைத்த பொற்களஞ்சியம் என்று விளங்கியது. அதன்பிறகு அவருடைய படங்களை நான் பார்த்த பார்வையே வேறு. 
 
தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. புதிது புதிதான ஆக்க முறைகள் திரைத்தொழிலில் நுழைந்துவிட்டன. இன்று அதன் வளர்ச்சி விண்முட்டுகிறது. இத்தகைய பெரும்போக்குக்கு இடையே இளைய தலைமுறையினர் பழைய படங்களின்மீது எத்தகைய மனப்பதிவுகளோடு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. புதுப்படங்களில் குவிந்திருந்த என் ஆர்வத்தைத் திரையரங்கில் பார்க்க வாய்த்த பழைய படங்களே மடைமாற்றின. இன்றுள்ளவர்கள் பழைய படமொன்றைத் திரையரங்கில் காண முடியாது. சின்ன திரையில் காணப்படும் பழைய படங்கள் முழுத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. 
 
இளைய தலைமுறையினர் இழந்து நிற்கும் எத்தனையோ அருமைகளில் பழைய படங்களும் அடங்கும். அதற்காக, அவற்றை விட்டு நீங்கக்கூடாது. நம்மையறியாமல் நாமடைய வேண்டியதை இழப்பதாகும் அது. இலக்கியத்தைப் போலவே திரைப்படங்களிலும் பழையதே சிறப்பு. புகழ்பெற்ற பழைய படங்களை எப்படியேனும் தேடிப் பிடித்துப் பாருங்கள் என்பதே என் பரிந்துரை. 
 
Thanks - கவிஞர் மகுடேசுவரன்


Friday, May 25, 2018

தேர்தல் முடிவுகள் மட்டுமே ஜனநாயகம் அல்ல!

மே
ற்கு வங்க மாநிலத்தில் மே 14-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வன்முறையின் துணையோடு மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் நடந்த தொகுதிகளில் 76% திரிணமூல் காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. எனினும், மாற்றுக் கட்சியினர் போட்டியிடாத அல்லது போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தால்தான் திரிணமூலின் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியும்.
உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் சேர்த்து மொத்தம் 58,792 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பிருந்தே மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கிவிட்டன. பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை, ஆளும் கட்சியினரின் அராஜகத்தை அடக்கத் தவறியதல்லாமல், பல இடங்களில் அவர்களுக்குக் துணையிருந்ததாகக்கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். மூன்றடுக்கு உள்ளாட்சி மன்ற முறை ஏற்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு தொடங்கி, இதுவரையில் இப்படி ஒரு வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்தது கிடையாது. மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, இடதுசாரி முன்னணி 2011-ல் பதவியிலிருந்து இறங்கிய பின், இப்படிப்பட்ட வன் செயல்கள் மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை.
வன்செயல்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. நிர்வாகத் திறமை போதாத காரணத்தாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ இப்படி நடந்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக திடீரென பெரிய கட்சியாக வளர்ந்துவிடவில்லை. ஆனால், அது வளர்கிறது என்ற எண்ணமே திரிணமூல் காங்கிரஸை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது.
 இப்போதைய பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 25% இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது. எனினும், 2021 மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யைப் பதவியிலிருந்து அகற்றுவதே தங்களுடைய லட்சியம் என்று வெளிப்படையாகவே அறிவித்துச் செயல்படுகிறது பாஜக. அதன் வளர்ச்சியால் அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு எதிராக மாநில அளவிலும் தேசிய அளவி லும் பிற கட்சிகளை ஓரணியில் திரட்டத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி அல்ல; மக்களின் ஆதரவே முதன்மையானது. ஜனநாயகத்தை வீழ்த்தி பெறும் வெற்றிகள் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும். இந்து தலையங்கம்
!

Friday, May 18, 2018

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ? இதுவும் உண்மைதானே

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
 கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

 மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

 அடிப்படைச் சட்டங்கள் என்ன?

 நமக்கான உரிமைகள் என்ன?

 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

 நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

 மற்றவர்களை நேசிப்பது எப்படி?

 நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட் whatsup

Friday, May 11, 2018

நடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்இன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாலிகா நாயர், ஷாலினி பாண்டே, இயக்கம் - நாக் அஸ்வின், ஒளிப்பதிவு - டேனி சா-லோ, இசை - மிக்கி ஜெ மேயர், தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ்.


1981ம் ஆண்டு மே 11ம் தேதி... பெங்களூருவில் நடிகை சாவித்திரி கோமாவில் விழுந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரைப் பற்றிய கட்டுரை எழுதப் பணிக்கப்படுகிறார் மக்கள்வானி பத்திரிக்கை நிருபர் மதுரவானி (சமந்தா). முன்பக்க தலைப்பு செய்தி எழுத வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமந்தாவுக்கு கோமாவில் கிடக்கும் ஒரு பழைய நடிகையைப் பற்றி செய்தி சேகரிக்க விருப்பமில்லை. இருப்பினும் ஆசிரியரின் உத்தரவை ஏற்று, புகைப்படக்கலைஞர் ஆண்டனியுடன் (விஜய் தேவரகொண்டா) சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது சாவித்திரியின் வாழ்க்கை... முதல் காட்சியிலேயே நான் அசல் சாவித்திரி என அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். குழந்தை சாவித்திரியில் தொடங்கி, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், எங்கெல்லாம் வாய்ப்பு தேடி அழைந்தார், சாவித்திரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, அதை அவர் தக்க வைக்கத் தவறிய கதை, ஜெமினி கணேசனுடனான காதல், புகழின் உச்சி, ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடப்பது, அதில் இருந்து மீண்டு வருவது என ஒரு பெண் நிருபரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.


இந்த படத்தை முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார். சிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னோரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் நியாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.


ஜெமினி வேடத்தில் நடித்திருக்கும் துல்லகர் சல்மானும், அப்படியே அசல் ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சாவித்திரியிடம் சொல்வது, திருமணத்துக்குப் பிறகு ஈகோவில் வாழ்வை தொலைப்பது என பின்னியிருக்கிறார் மனிதர். சபாஷ் துல்கர். 


இவர்களைத் தாண்டி படத்தின் அத்தனை பெருமையும் போய் சேர வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளர் டேனி சா-லோவுக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக் ஆகியோருக்கு தான். அவர்களின் அபாராமான உழைப்பு படத்தில் அப்படியே தெரிகிறது. கலை இயக்குனர் ஆவினாஷ் கொல்லாவின் செட் வேலைபாடுகளும் அற்புதமாக இருக்கிறது. விஜயவாஹினி ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, டிராம்ப் என அந்த கால மதராசுக்கு நம்மை அழைத்து சென்றிக்கிறார்.

இந்த படக்குழுவின் கேப்டன் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் பல. இளையதலைமுறையின் பார்வையில் ஒரு அற்புதமான நடிகையின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். ஆனால் தெலுங்கு ஆடியன்சை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருப்பார் போல. 

சாவித்திரி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பாசமலர் படம் தான். ஆனால் ஏதோ ஒரு நகரும் மேகம் போல, மலர்ந்தும் மலராத பாடலின் இரு வரிகளுடன் கடந்து போய்விடுகிறது பாசமலர் படத்தைப் பற்றிய காட்சிகள். அதை கொஞ்சம் அதிகமாக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 


கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம் 'நடிகையர் திலகம்'.  (Thanks Tamil One India)

இதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...கல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. புரிதலின்றி பயிலும் எவ்வகை கல்வியானாலும், மாணவர்கள் கரை சேர முடியாது.

சுதந்திரம் பெற்ற ஓராண்டிலேயே, சீனா, தன் மக்களை தாய் மொழியில் படிக்க செய்து, இந்தியாவை விட, 20 ஆண்டுகள் முன்னேறி விட்டது. தாய் மொழியை புறம் தள்ளி, புரிதல் படாத ஆங்கில மொழியை கட்டி அழுது, இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும், எல்லா தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக அசுர வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன; அதற்காக, அப்பள்ளிகள், 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளன. 

ஒரு மாணவன், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர வேண்டும் எனில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தாக வேண்டும். அங்கு, ஏழைகள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வசதி படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே முன்னேற வேண்டுமா...

மாநிலத்தில், 884 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில், வேதியியலில், 421; பொருளாதாரத்தில், 370; வணிகவியலில், 215; இயற்பியலில், 156; தமிழில், 284; மற்ற துறைகளில், 194 என, 1,640 பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; இதே கதி தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது.

'மந்தைகளில் பயணிக்கும் செம்மறி ஆடுகளை பின் தொடர்ந்து, குருட்டு ஆடுகள் செல்லுமாம்' என்ற அடைமொழியை பின்பற்றுவது போல் தான், இன்றைய கல்வி நிலை உள்ளது.

டாக்டர் அப்துல் கலாம், சிவன், அண்ணாதுரை போன்றோர் எல்லாம், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்று தான் விஞ்ஞானிகளாகினர். இதை புரிந்து, தமிழர்கள், தாய் மொழியை அரவணைப்பரா?
சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்

Wednesday, May 9, 2018

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...?

இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது. 


இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?

"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலை தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன், இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புக்களை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக் கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடனடியாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புக்கள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்." என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.


இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:

"சித்த மருத்துவத்தில் இளநீர், 'பூலோகக் கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம் கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. 

ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். 

இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புக்களைச் சரி செய்யும். 

உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் மூத்திர எரிச்சலைச் சரிசெய்யும். ஏற்படும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. " என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...

Sunday, May 6, 2018

‘1100 ஜிபி இலவச டேட்டா’ - ஜியோ அடுத்த அதிரடி...மொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.


2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.

இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.

பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிலையில், 17 கோடி வாடிக்கையாளர்களுக்கு சலுகையை நீடித்தது.

இந்நிலையில் பிராட்பேண்ட் சேவையை விரிவு படுத்த ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டே சில குறிப்பட்ட நரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.

ஜியோ பைபரில் இருந்து வீடுகளுக்கு இந்த சேவை இணைப்பு வழங்கப்படுகிறது. அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் உள்ள இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படுகிறது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ள ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிகபட்சமாக 1100 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வ நடைபெறும் என கூறப்படுகிறது.

Wednesday, May 2, 2018

இது நியாயமா ஸ்டாலின் அவர்களே'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், லோக் ஆயுக்தா அமைக்கப்படும்; இன்றைய அமைச்சர்கள் அத்தனை பேரும், கம்பி எண்ணப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்! அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டும் உத்தமர்கள் என்பது போல், அவர் பேசியிருக்கிறார். 

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பல தலைமுறைக்கு கோடி கோடியாக சொத்துகளை குவித்திருப்பது, உலகத்துக்கே தெரியும்.தமிழகம் உட்பட சில மாநிலங்கள், லோக்பால் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றன; இது, வேதனைப்பட வைக்கிறது.

மக்களின் பாதுகாவலர் என்ற பொருள் உணர்த்தும், 'லோக்பால்' என்ற அமைப்பை, நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மொரார்ஜி தேசாய் தலைமையில், அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, 1966ல், அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.கடந்த, 1968 முதல், 2013 வரை, எட்டு முறை பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டும், லோக்பால் அமைக்கப்படவில்லை. 

நாடு சுதந்திரம் பெற்ற அன்றே, ஊழல் தலைதுாக்க துவங்கி விட்டது.ராணுவ ஜீப் ஊழல், நகர்வாலா பேங்க் ஊழல், போபர்ஸ் ஊழல் முத்திரை தாள் ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் என, பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது...லோக்பால் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், நாட்டில் லாலு பிரசாத்களும், கேதான் தேசாய்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்ற நிலை மாறி இருக்கும்.

அரசியல்வாதிகளின் மூலம், கோவில் சொத்துகளும், நாட்டின் வளங்களும் கொள்ளை போவது, தடுக்கப்பட்டு இருக்கும்!கோடிகளை குவிக்க நினைக்கும் அமைச்சர்களுக்கு, சிறிதாவது பயம் இருந்து இருக்கும். லோக்பால் விஷயத்தில், தமிழக அரசின் சப்பைக்கட்டு, நீதிமன்றத்தில் எடுபடவில்லை.'லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து, ஜூன் மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்டு, நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதிகள் கொட்டம் அடங்கி விடும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை,

Sunday, April 22, 2018

TIme Loop திரைப்படங்கள் பிடிக்குமா உங்களுக்கு ?


ஒரு சிலருக்கு time loop என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜிக் அதுதான் முன்னமே இந்த கேள்வியை கேட்டுவிட்டேன் , என்னடா இது நடந்ததே திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கின்றதே என்றொரு நிலைக்கு ஒரு சிலர் செல்வதுண்டு அதனாலே அவர்களால் இவ்வாறான கான்சப்ட் இல் எடுக்கும் படக்கங்களை ரசிக்க முடியாமல் போய்விடும் , Edge of Tomorrow திரைப்படத்தை ஒரு சிலர் ரசிக்க முடியவில்லை என்பதை பார்த்திருக்கிறேன் , time loop கான்சப்ட் திரைப்படங்கள் பிடிக்கும் என்றால் இது உங்களுக்கான ஒரு திரைப்படமே…

Jun-young (வாயில் நுழையாத பெயர் தான் , என்ன செய்வது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்) ஒரு பிரபலமான டாக்டர் , வெளி ஊரில் charity வேலைகள் செய்து விட்டு , மீண்டும் நாட்டுக்கு திரும்புகின்ற ஒருவர் , இப்போது இவரது கனவு எல்லாம் தனது மகளை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே..

ஒரு வழியாக நாட்டுக்கு வந்து அப்படியே மெர்சல் விஜய் போல ஏர் போர்ட்டிலேயே ஒரு உயிரை காப்பாற்றி விட்டு( பிற்குறிப்பு இதில் ஹீரோயிசக் காட்சிகள் கிடையாது , ஒரு டாக்டர் என்ன செய்வாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பார்கள் வீணாக பீதியடைய வேண்டாம்) , தனது மகளை சந்திக்க செல்லும் போது வழியில் ஒரு டாக்ஸி ஆக்சிடண்ட் ஆகி , அதன் ட்ரைவர் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க , உடனே அவனுக்கு முதலுதவி செய்துவிட்டு , தனது மகளுக்கு தான் வருவதற்க்கு கொஞ்சம் லேட் ஆகும் என்பதை தெரிவிக்க , ஒருத்தன் போன் காலை ஆன்சர் செய்து , உங்கள் மகள் ஆக்சிடன் ஒன்றில் மாட்டிக் கொண்டால் என்று சொல்ல , உடனே போனை கட் செய்து விட்டு அப்படியே ரைட் சைடில் ஒரு லுக் விட எதிரே டாக்ஸி ட்ரைவர் இடித்தது தன் மகளைத்தான் என்று அறிந்து கொண்டு அவளை ஓடிச்சென்றூ பார்க்க அவள் இறந்து விட்டாள் என்பதை டாக்டர் அறிந்து கொண்டு அடுத்த நிமிடமே , டைம் லூப் பிரச்சனை தொடங்குகின்றது..

இப்போது மீண்டும் Jun-young ப்ளைட்டில் இருந்து கண் முழிக்கின்றார் , ஏற்கனவே நடந்த அனைத்தும் திரும்ப நடக்கின்றது , இந்த முறை மகளை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப் போக , திரும்பவும் முதலில் இருந்து எல்லாம் நடக்க தொடங்குகின்றது , இப்படியே போய் கொண்டிருக்க இந்த டைம்லூப் டாக்டருக்கு மட்டும் அல்ல அங்கு இன்னும் ஒருவனுக்கு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை டாக்டர் அறிந்து கொள்கின்றார் , மற்றையவனின் மனைவி ஆக்ஸிடண்ட் ஆகிய டாக்ஸியில் பயணித்தவல் ஆக்ஸிடண்டில் அவளும் இறந்துவிட்டிருப்பாள் , இப்போது இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதை தடுக்க முயற்சிக்கிறார்கள் , ஒருத்தன் மகளை காப்பாற்ற வேண்டும் , இன்னும் ஒருவன் மனைவியை காப்பாற்ற வேண்டும்.

இப்படியே கதை தொடர இதே டைம்லூப்பினால் மூனாவதாக ஒருத்தனும் பாதிக்கப் பட்டிருப்பான் , அவன் யார் , இவர்கள் மூவருக்கும் என்ன சம்மந்தம் , ஏன் இதெல்லாம் நடக்கின்றது , இவர்கள் காப்பாற்ற நினைத்தவர்களை காப்பாற்றினார்களா என்பதையெல்லாம் படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

a great script.

நன்றி. முகநூலில்...Aashik Stark

விவசாய போராட்டங்கள் நாடகம்தானா....!
நான் திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னுார் கிராமத்தில், விவசாயம் செய்து வருகிறேன்.என் பாட்டனார் காலத்தில், நல்ல நேரம் பார்த்து, விவசாயத்தில் நல்ல விளைச்சல் வர வேண்டும் என, விதை முகூர்த்தம் செய்வர். 

அதன்படி, விதை தெளித்தல் முதல், அறுவடை வரை பணிகள் நடைபெறும்; அவர்கள் நினைத்தபடி, நல்ல மகசூலும் கிடைத்தது.இன்று, விவசாயத்தை பெரும் பொருட்டாக, விவசாயிகள் நினைப்பது இல்லை. விதை தெளிக்கும்போதே, நஷ்டஈடு, நிவாரணம் வாங்க வேண்டும் என தான் விதைக்கின்றனர். 

விவசாயிகளின் போக்கிற்கு ஏற்ப, அரசும் செயல்படுகிறது. தமிழகத்தில், விவசாயிகள் மீது, அக்கறை உள்ளவர் போல் அய்யாக்கண்ணு, பாண்டியன், மாசிலாமணி என, ஆளுக்கு ஒரு அமைப்பை வைத்துள்ளனர். 
'டிவி'க்களில் இஷ்டத்திற்கு அவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். 
உண்மையாக, விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும், அக்கறை இருந்தால், முதலில் தமிழகத்தில் காணாமல் போன, காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் இவற்றை அவர்கள் கண்டுபிடிக்கட்டும்!

திருச்சியில், காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்து, அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் எத்தனை ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டுள்ளன... ஏரி, குளங்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி விட்டன என்பது, அவருக்கு தெரியுமா...

தமிழகத்தில், திருமலைராஜன், வெட்டாறு, குடமுருட்டி, வெண்ணாறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, கோரை ஆறு, அடப்பாறு, முள்ளியாறு, திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, சென்னையில் கூவம், அரசலாறு, காவிரி, உப நதிகள், கொள்ளிடம் மற்றும் உபநதிகள் ஆக்கிரமிப்புகளால் மூழ்கி உள்ள, ஆறுகளின் பட்டியல் நீண்டபடி உள்ளன.

எந்த ஆற்றிலாவது தண்ணீர் ஓடுகிறதா... அதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை, அய்யாகண்ணு உள்ளிட்ட, அவருடன் போராடுவோர் கண்டறிந்து, பின் காவிரிக்கு வர வேண்டும்; வெத்து போராட்டங்கள் என்றும் வெல்லாது!மாநிலத்தில் நீர் நிலைகளை காப்பாற்ற, உருப்படியான ஐடியாக்களை, அரசுக்கு தெரிவித்து, உறுதுணையாக இருக்க பாருங்கள்! (நி.சங்கர், திருத்துறைப்பூண்டி)

Saturday, April 21, 2018

மெர்க்குரி சினிமா விமர்சனம்வேண்டாவெறுப்பா புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வச்சானாம். அதுபோல கார்த்திக் சுப்பராஜ் தற்குறித்தனமாக இயக்கியிருக்கும் படம்தான் மெர்க்குரி.

1987 ஆம் வருடம் கமல் நடிப்பில் வெளியானது 'பேசும் படம்'.  இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். அக்மார்க் ப்ளாக் காமடி. சப் டைட்டில் இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே பின்னணி இசையை ஒலிக்க விட்டிருப்பார் எல்.வைத்யநாதன். சின்ன கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்கும். ஆனால் இங்கே...அனைத்தும் தலைகீழ்.

மெர்குரி ஆலையின் விஷக்கசிவால் கேட்கும் - பேசும் திறனை இழக்கும் பள்ளி  நண்பர்கள் இடைவெளி விட்டு மீண்டும் சந்திக்கிறார்கள்.  இக்கொடூர விபத்தில் இறந்தோரின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த ஐவரும் காரில் செல்கிறார்கள். அங்கே எதிர்பாராத சிக்கலில் மாட்டி, பிறகு எப்படி தப்பிக்க முயல்கிறார்கள் என்பதுதான் கதை.

30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு சைலன்ட் மூவி என்று பில்ட் அப் தந்ததில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களின்  ஒவ்வொரு அசைவிற்கும் சப் டைட்டில் போட்டு கொல்கிறார்கள். போதாக்குறைக்கு வாங்கிய காசுக்கு மேல் வாசித்து அறுக்கிறார் சந்தோஷ் நாராயண். இதுதான் உங்கள் ஊரில் சைலன்ட் படமா?

ஐந்து பேருக்குமே ஒரே மாதிரியான குறைபாடு, காதல் கத்தரிக்காய், புல்லரிக்கும் பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக்... அடங்கொய்யால!!

இதுபோக இன்னும் ஒரு டஜன் அபத்தங்கள் உண்டு.

மொத்தம் 109 நிமிடங்கள் ஓடும் படத்தில் முதல் பாதி புஸ்வாணம். அதன்பிறகு சப்டைட்டில் மற்றும் பின்னணி இசையின் இம்சை குறைந்ததே என்று சந்தோஷப்பட்டால்.... ஹெச். கூஜா போல கத்தி கத்தியே உசுரை எடுக்கிறார் பிரபுதேவா.

ஒரு வீடு, ஒரு இத்துப்போன ஃபேக்டரி செட், தக்காளி சாதம் போட்டாலே மொத்த ஷூட்டிங்கிற்கு வர ரெடியாக இருக்கும் ஐந்து நபர்கள். இதை வைத்தே மொத்த படத்தையும் ஒப்பேத்தி விட்டார் இயக்குனர் கா.சு.

Don't Breath (2016) ஆங்கில படத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே சுட்டு இங்கே இறக்கிவிட்டு... கதை மற்றும் கதாபாத்திர சமாச்சாரங்களில் டக்கால்டி வேலையை காட்டி விட்டார் பீட்சா பையன்.

பீட்சா சூப்பர். ஜிகர்தண்டா சுமார். இறைவி மொக்கை. மெர்க்குரி படுமொக்கை. அடுத்த படமாவது உருப்படியாக எடுங்க பெரியதம்பி.

மெர்க்குரி 0.5/5
விமர்சனம்.. முகநூலில் Ag Sivakumar

Friday, April 20, 2018

அறுசுவையும்.... அறியாத தகவல்களும்...


காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Thursday, April 19, 2018

உங்களுக்கும் வரலாம்... பெண்களே உஷார்....இன்றைய தினம் இளம் பெண்களை அதிகமாகப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு ஹார்மோன் பிரச்னை முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. 


இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இதன் இயல்பான எடை 12 லிருந்து 20 கிராம் வரை இருக்கும். இந்த எடைக்கு மேல் அதிகமானால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று பொருள். அப்போது நோயாளியானவர் உணவை விழுங்கும்போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். 

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு சுரப்பி, தைராக்சின்(T4), டிரைஅயடோதைரோனின் (T3) எனும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இவற்றில் தைராக்சின் செய்யும் பணி முக்கியமானது. தைராய்டு செல்களில் `தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் `டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. 

தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனை சுரக்கின்றன. ரத்தத்துக்கு தைராக்சின் ஹார்மோன் தேவைப்படும்போது, அதை அனுப்பி வைக்கின்றன. மற்ற நேரங்களில், அதை தைரோகுளோபுலினில் சேமித்து வைக்கின்றன. இத்தனை செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் `தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ (TSH) கட்டுப்படுத்துகிறது. 

தைராக்சின் பணிகள்

கருவில் உள்ள குழந்தையின் 11வது வாரத்திலிருந்து சுரக்கத் தொடங்குகின்ற தைராக்சின் ஹார்மோன், அப்போதிலிருந்தே உடலிலுள்ள செல்களின் இயக்கத்தையும், வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்கு தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதி

வினைகள் புரிவதற்கு தைராக்சின் தேவை. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை முடுக்குவது தைராக்சின். புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக்கூழிலிருந்து குளுக்கோஸை பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன்தான். இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. 

மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பதும் தைராக்சின் ஹார்மோன்தான். உடல் செல்களில் பல நொதிகள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது. 

இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப, கூட்டியும் குறைத்தும் சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதிய வயது வரை, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துல்லியமாக செய்து முடித்து, உடலைப் பேணி இயக்கும் உன்னதமான ஹார்மோன், தைராக்சின். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை. 

குறை தைராய்டுதைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை... உடல் சோர்வு, உடல் தளர்வு, சாதாரண வெப்பத்தைக்கூட குளிர்ச்சியாக உணர்வது, குளிர் தாள முடியாமல் போவது, முடி கொட்டுவது, உலர்ந்த தோல், தோலில் அரிப்பு, பசி குறைவது. அதே நேரத்தில் எடை அதிகரிப்பது, ஞாபக மறதி, மலச்சிக்கல், அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, கருத்தரிப்பதில் பிரச்னை, மூட்டுவலி. 

இப்படிப் பல பிரச்னைகள் குறை தைராய்டு உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் என்றாலும், உடனே பயந்துவிட வேண்டாம். வேறு சில நோய்களிலும் இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு ஏற்படுவதுண்டு. அதே நேரம், டாக்டரை கலந்து ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, தைராய்டு நோயை உறுதி செய்யவும் தயங்க வேண்டாம். 

குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோா்த்துக் கொண்டு பருமனாவதும், குரலில் மாற்றம் ஏற்படுவதும், தோல் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியத் தடயங்களாகும்.ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

தைராய்டு நோயாளிக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாகவே வெளியில் தெரியவரும். என்றாலும், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் குறை தைராய்டு நோய்க்கு `மிக்சிடீமா’ (Myxoedema) என்று பெயர். இதுவே குழந்தைகளுக்கு ஏற்படுமானால், அதைக் `கிரிட்டினிசம்’ (Cretinism) என்று அழைக்கின்றனர்.என்ன காரணம்?அடிப்படையில் உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் `குறை தைராய்டு நோய்’க்கு முக்கியக் காரணம். 

இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு இப்படித்தான் தைராய்டு பிரச்னை உருவாகிறது. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனை சுரக்க முடியாது. 

பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது காணப்படும். அதற்கு ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre) என்று பெயர். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). 


குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Anti bodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு நோய் உண்டாகிறது. 

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுதல், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சையால் அகற்றுதல், முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைதல் போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு நோய் வரலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படும். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு காரணம்தான். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கும் குறை தைராய்டுபிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism) ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித்தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு `வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டு திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பாதிப்பு ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றும்.

பள்ளி வயதில் அதன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்தங்கும். முக்கியமாக, கற்றலில் குறைபாடு கள், நினைவாற்றலில் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை 
உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால், குழந்தை எப்போதுமே மந்த புத்தியுடன்தான் இருக்கும். காலத்தோடு கவனித்து, தகுந்த சிகிச்சை பெற்றால், குழந்தைக்கு நோய் குணமாகும்.

காரணம் என்ன?

கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. 

கர்ப்ப காலத்தில் தாய்க்கு அயோடின் சத்து கிடைக்காமல், தாயின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, சில அறிகுறிகள் தென்படும். அதாவது, முடி உதிர்வது, உடல் பருப்பது, தோலில் வறட்சி ஏற்படுவது, நெடுநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் தாய் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், குழந்தைக்குப் பிறவியிலேயே குறை தைராய்டு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மிகை தைராய்டுதைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த நிலைமைக்கு `மிகை தைராய்டு’ (Hyperthyroidism) என்று பெயர். இந்த நோய் உள்ளவர்களுக்குப் பசி அதிகமாக இருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். 

விரல்கள் நடுங்கும். விரல் நுனிகள் தடித்திருக்கும். உள்ளங்கை வியர்க்கும். அடிக்கடி மலம் போகும். அடிக்கடி சிறுநீர் கழியும். சிறிது கூட பொறுமை இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். பாலுறவில் விருப்பம் குறையும். திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இந்த நோயை `கிரேவ் நோய்’ (Grave’s disease) என்றும் அழைப்பதுண்டு. இதுவும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிக அளவில் பாதிக்கும். சுமார் இரண்டு சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. முக்கியமாக, 20 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். 

அயோடின் உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு மிகை தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியில் கட்டிகள் தோன்றினாலும், முன்பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி தோன்றும்போதும் இந்த நோய் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள் 

ரத்தத்தில் டிரைஅயடோதைரோனின் (T3), தைராக்சின் (T4), தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். இத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். `ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

சிகிச்சை முறைகள்

அயோடின் குறைவினால் வரும் முன்கழுத்துக்கழலை நோய்க்கு, அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில், `எல்தைராக்சின்’(Eltraxin) மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மிகை தைராய்டு நோய் உள்ளவர்கள் `நியோமெர்க்கசால்’ (Neomercazole) மாத்திரையையும், `புரோபுரனோலால்’ (Propranolol) மாத்திரையையும் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, மருந்து தேவைப்படும் கால அளவு ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும். 

நோயாளியானவர் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதுவே புற்றுநோயாக இருந்தால், அறுவை சிகிச்சையுடன் கதிரியக்கச் சிகிச்சையும் தேவைப்படும். இன்றைய நவீன அணுவியல் மருத்துவத்தில், `ரேடியோ அயோடின் ஐசோடோப்’ சிகிச்சை மூலம் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட தைராய்டு பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சி அடையாது!
டாக்டா் கு.கணேசன்

பற்களும்.... சிரிப்பும்... ஒரு எச்சரிக்கை பதிவு


ஒருவரை பார்த்த முதல் நொடியில் நாம் அவரிடம் கவனிப்பது என்ன என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் சொன்ன பதில், அவர்களின் சிரிப்பு. ஆக, முகத்தில் முக்கியமாக இருப்பது பற்களும், சிரிப்பும்தான்.

பற்கள் என்றதும் நினைவிற்கு வருவது அழகான சிரிப்பு. பால் போன்ற வெண்மையான வரிசையான பற்கள். இப்படி அழகு சம்பந்தப்பட்ட பற்களை நாம் மனதில் வைத்துள்ளோம். ஆனால் பற்கள் அழகுக்கு உதவுவது அவற்றின் வேலையில் ஒரு சிறிய பகுதி. அழகை தாண்டி அவை செய்யும் வேலைகள் பல உண்டு.

பேச்சில் பெரும் பங்கு : சொற்களை சரியாக உச்சரிக்க மற்றும் சீராக பேசுவதற்கு பற்கள் மிகவும் முக்கியம். சொல் என்பது பல், நாக்கு, உதடு இவை மூன்றும் சேர்ந்து உருவாக்கும் ஓசை. வாயின் அமைப்பு, நாக்கின் நீளம், பற்களின் அளவு மற்றும் அமைப்பு இவை அனைத்தும் சொற்களை உருவாக்குவதில் பங்களிக்கின்றன. 

அதனால்தான் ஒவ்வொருவரின் பேச்சும், உச்சரிப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்று சரியாக இல்லாவிட்டால், பேசுவதில் தடை ஏற்படும். தெத்து பற்கள், கோணல் பற்கள், பற்கள் ஆடும்பொழுது அல்லது பற்கள் விழுந்து காலியாக இருந்தால் என அனைத்து சூழ்நிலையிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும். பற்களில் பலம் இல்லாமல் ஆடும்பொழுது நம்மால் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியாது. சரியான இடத்தில் சரியான வரிசையில் பற்கள் இருப்பதும், பற்கள் இல்லாத இடத்தில் பற்கள் கட்டுவதும் ஒருவரின் பேச்சிற்கு அவசியமானது.

உணவை சுவைத்து ருசித்து சாப்பிட ஆசை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ருசியை நம்மால் எப்படி உணர முடிகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். உணவை வாயில் போட்டதும் கரைய தொடங்கும். பின்னர் உணவை அரைப்பதற்கு பற்களும், உமிழ்நீரும் சேர்ந்து உழைக்கும். 

உணவு அரைந்து அதில் நம் சுவை அரும்புகளில் உள்ள திரவங்கள் கலக்கும்பொழுதுதான் உணவின் சுவை மூளைக்கு சென்றடையும். உணவின் சுவையை நாம் உணர முடியும். சரியான பற்கள் இல்லையென்றால், உணவை முழுதாக மசிக்க முடியாது. இதனால் எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் அதன் முழு திருப்தி நமக்கு வராது. சாப்பிடுவதற்கு அடுத்த கட்டம் அதனை விழுங்குதல், அதாவது வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு அனுப்புதல்தான் உணவை விழுங்குவது என்று பொருள். உண்ணுவதும், விழுங்குவதும் அடுத்தடுத்து சரியான இடைவெளியில் நடக்க வேண்டும்.

 உணவை சரியான அளவு மசித்தபின் பற்கள் இறுக்கமாக மூடிக்கொண்டு நாக்கு நம் அன்னத்தின் மேல் அழுத்தினால்தான் உணவு வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு நகரும். உணவு மட்டுமல்லாது தண்ணீர் போன்ற திரவங்கள், மாத்திரை போன்ற கடினமான பொருட்கள் என பலவற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் விழுங்குவதற்கு பற்கள் உற்ற துணையாக இருக்கின்றன. வாயின் சுத்தத்தில் பற்களின் பங்கு என்ன என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். 

எல்லா மனிதரும் காலை கண்விழித்த உடன் செய்ய வேண்டிய முதல் வேலை பல் துலக்குவது. வேப்பங்குச்சி, சாம்பல், செங்கல், பொடி, டூத்பேஸ்ட் , பிரஷ் என வடிவம் மாறினாலும் பழக்கம் ஒன்றுதான். நம் முன்னோர் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள். சுத்தம் செய்யாத பற்களின் மேல் ஒரு படலம் உருவாகும். அதில்தான் கிருமிகள் தங்க ஆரம்பிக்கும். இவற்றை சரியாக அகற்றாவிட்டால் பல் சொத்தை, ஈறு நோய் போன்றவற்றை உருவாக்கும். எனவே பற்களை சுத்தமாக வைப்பதன் மூலம் வாயின் சுத்தமும் பாதுகாக்கப்படுகிறது.
முகத்தின் சமவிகிதம் : மனித முகம் மூன்று சம பங்காக பிரிக்கப்படுகிறது. 

தலை உச்சியில் இருந்து புருவம் வரை முதல் பாகம். புருவத்தில் இருந்து மூக்கின் நுனி வரை இரண்டாம் பாகம். மூக்கின் நுனி முதல் வாய் நாடி வரை மூன்றாம் பாகம். இந்த மூன்று பாகங்களும் சரியான சமவிகிதத்தில் இருப்பதுதான் இயற்கை. இதில் ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் இயற்கை விகிதங்களை உட்பட்டுதான் இருக்கும். பற்கள் இல்லாமலோ அல்லது பற்கள் சரியான வரிசையில் இல்லாவிட்டாலோ, முகத்தின் மூன்றாவது பாகம் மற்ற இரண்டு பாகங்களோடு ஒத்துப்போகாது. இதை சரிசெய்யாவிட்டால் ஒருவரின் முகத்தோற்றமே மாறிவிடும். 

சரியான பல் வரிசை முகத்தின் சமவிகிதத்தை தக்க வைக்க முடியும். எலும்பின் பலம் பற்களின் பலத்தை பொறுத்தே தாடையில் எலும்பின் அளவு இருக்கும். எப்படி மரத்தின் வேர்கள் மண்ணை அரிக்காமல் பிடித்துக்கொள்ளுமோ, அதேபோல்தான் பற்களும் அதைச்சுற்றி உள்ள எலும்பை தேயாமல் பிடித்து வைத்துக்கொள்ளும். பல் இல்லாத வாயில் வேர் இல்லாத மண் போல சிறிதுசிறிதாக எலும்பின் அளவு குறைந்துவிடும். இதனால் தாடையே வலுவிழந்துவிடும். இதனால்தான் விழுந்த பற்களை உடனடியாக கட்டுவது அவசியம். சரியான இடத்தில் பற்கள் நிலையாக இருப்பது தாடை எலும்பின் பலம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.


உடல் ஆரோக்கியம் : வாயே நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. ஒருவரின் உடல் உபாதைகளில் முக்கியமான பலவற்றை அவரின் பற்களையும், வாயையும் பார்த்தே கணித்துவிடலாம் என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. வாய் துர்நாற்றம் அனைவராலும் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும். ஆனால் இவை வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதைவிட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறுகள் அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும், வாய் எரிச்சலும் ஏற்படும். ஆக, நம் உடலில் ஏற்படும் பல வகை நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும், உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.


குறட்டைக்கு குட்பை : உறங்கும்போது சுவாசக்குழாய்களில் ஏற்படும் தடைகளினால் வரும் சத்தமே குறட்டை. பற்கள் நேரடியாக குறட்டைக்கு காரணமாக முடியாது. ஆனால், சில பிரச்னைகளால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். அதாவது ஞானபற்கள் முளைக்கும் முன்னர் தாடையில் வீக்கம் ஏற்பட்டால், அதனால் குறட்டை அதிகம் ஆகலாம். கீழ்த்தாடை தலையுடன் சேரும் இடத்தில் தேய்மானம் ஏற்பட்டாலோ, துாங்கும்பொழுது நாக்கு சுவாசக்குழாய்க்கு தடையாக இருந்தாலோ குறட்டை வரலாம். இவ்வாறு வரும் குறட்டையை கட்டுப்படுத்த பற்கள் மற்றும் வாயினால் முடியும். இதற்கு அவரவர் அளவிற்கேற்ப வாயில் ஒரு சாதனம் பொருத்த வேண்டும். அது சுவாசக்குழாய்க்கு எந்த தடையுமின்றி காற்றுப்போக வழிவகுக்கும். 

இதை குறிப்பிட்ட காலம் உபயோகப்படுத்தினால் குறட்டை தொல்லையில் இருந்து விடுபடலாம். பற்களின் மூலம் கழுத்து வலி ஏற்பட 3 காரணங்கள் உண்டு. ஒன்று ஞானப்பற்கள் எனப்படும் கடைசி கடவாய் பற்கள். சிலருக்கு தாடை எலும்புக்குள் புதைந்து இருக்கும்.

 இதைச்சுற்றி கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் கழுத்து வலி போன்று தெரியும். இரண்டாவது கீழ் பற்களில் வெகு நாட்களாக கவனிக்கப்படாத சொத்தை மூலம் சீழ் உண்டாகி, அது கழுத்து வரை பரவும் பொழுது கழுத்தில் வலி தெரியும். மூன்றாவதாக பற்களில் சொத்தையே இல்லாமல் கூட பற்களை அதிகம் கடிப்பவர்களுக்கு தாடை எலும்பில் சாதாரண அளவைவிட அதிகமாக அழுத்தம் உண்டாகும். தாடை சார்ந்த தசைகள் கழுத்திலும் உள்ளன. இதனால் கழுத்தில் உள்ள தசைகளிலும் வலி வரும். 

பற்களை சரிசெய்தால் அதனால் ஏற்படும் கழுத்து வலியும், தலை வலியும் சரியாகிவிடும்.
தன்னம்பிக்கை தரும் பற்கள் : கோணலாக அல்லது தெத்து பற்கள் இருப்பவர்கள், முன் பற்களின் நடுவே இடைவெளி இருப்பவர்கள்,பற்கள் இல்லாமல் இருப்பவர்கள், அது தெரியாமல் இருக்க பற்கள் தெரியாமல் பேசவும் சிரிக்கவும் செய்வார்கள். இதுதொடர்ந்தால் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். நம்மையும் அறியாமல் மற்றவர்களுடன் பேசுவதை குறைக்க நேரிடும். நன்றாக பேசுபவர்கள் திடீரென வெளிஇடங்களுக்கு வர தயங்குவார்கள்; பிறரை சந்திப்பதை தவிர்ப்பார்கள். 

இவை எல்லாம் தேவை இல்லாத பயம். எந்த நிலையிலும் பற்களை சரிசெய்து நிலையான பற்களை பொருத்தலாம். இதன்மூலம் இழந்த சிரிப்பையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். பற்களின் பலத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து, பற்களின் பாதுகாப்பில் தேவையான நேரத்தில் தேவையான அக்கறை செலுத்தினால் உடலும் மனதும் வளம் பெறும்.
நன்றி-டாக்டர் ஜெ. கண்ணபெருமான்,மதுரை. 94441 54551

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...