Sunday, November 27, 2011

தமிழக மக்களின் காதுகளில் பூசுற்றுவதில் வல்லவர் யார்..? ஜெ-வா..? கலைஞரா..?"பொதுத் துறை நிறுவனங்கள் போண்டியானதற்கு, தி.மு.க., ஆட்சிதான் காரணம் என பொய்யான காரணங்களை சொல்லி, தமிழக மக்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுகிறார் ஜெயலலிதா' என, கருணாநிதி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். 

எந்த சந்தர்ப்பத்தில் எப்படி, யாருக்கு பூ சுற்றுவார் கருணாநிதி என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பேசும்போது, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லி, காம்ரேட்களின் காதுகளில் மிக அழகாக பூ சுற்றுவார். 

பிராமணர்கள் மத்தியில் பேசும்போது, "நான் பிராமணர்களை வெறுக்கவில்லை. ராஜாஜியை உண்மையிலேயே நேசிக்கிறேன். பிராமணீயத்தைத்தான் ஈ.வெ.ரா., வெறுத்தார். அவரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த நான், அதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்று அவர்களின் காதுகளில் (ஏற்கனவே அவர்கள் பூக்கள் சூடியிருந்தாலும்) தன் பங்குக்கு, கருணாநிதியும் பூ சுற்றுவார். 

தாழ்ந்த குடியினர் மத்தியில் உரையாடும் போது, "நானும் தாழ்ந்த குடியில் அவதரித்தவன். நான் ஒரு ஆண்டி' என்று, பாவம் அவர்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுவார். 

முஸ்லிம்களின் தோழராக தன்னை காட்டிக்கொள்ள, குல்லா அணிந்து ரம்ஜான் கஞ்சியை விரும்பி குடிப்பார். இயேசுநாதரிடம் இவர் கொண்டிருக்கும் பற்றும், நேசமும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கே இருக்குமா என்பது சந்தேகம் தான்!அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சொல்லாததையெல்லாம், தன்னிடம் அவர்கள் சொன்னதாக, அழகாக புனைந்துரைப்பார். 

ஜெயலலிதாவுக்கு இந்த கலையெல்லாம் சுத்தமாக தெரியாது. தமிழகத்தின் நிதி நிலையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். யார் காதிலும் பூ சுற்றும் அவசியம் நிச்சயம் அவருக்கு கிடையாது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் வித்தகரும் அவரல்ல. 

தன் மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். தமிழகத்தைக் காப்பாற்ற அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை கசப்பானது என்றாலும், தவிர்க்க முடியாதது என்பதை எதிர்காலம் நிச்சயம் உணர்த்தும். தமிழர்களின் காதுகளில், கருணாநிதி சுற்றியிருக்கும் பூக்களே நிறைந்திருக்கும் போது, ஜெயலலிதா புதிதாக பூக்களை எப்படி சுற்ற முடியும்?

Tuesday, November 22, 2011

ஜெ., கொடுத்திருக்கும் கசப்பு மருந்து..!


நம் தமிழக அரசு, பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இவை, உடனடியாக கசப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், கசப்பு மருந்து சில சமயங்களில் நன்மை பயக்கவே கையாளப்படுகிறது. அதுபோல், நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க, சில தவிர்க்க முடியாத நடவடிக்கை தேவைப்படுகிறது. 

மேலை நாடுகள், தங்கள் வரம்பை மீறிய வாழ்க்கை முறையை பின்பற்றி, இன்று பல இடையூறுகளை சந்தித்திருக்கின்றன. நாமும் அந்நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா?இன்று, நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களின் சராசரி விகிதமும் அதிகரித்துள்ளது. அதனால், பல தேவையற்ற செலவுகளை செய்கின்றனர். 

உதாரணமாக, ஒரு சினிமா டிக்கெட் இன்று, 100 ரூபாய்க்கு குறைவில்லை. அதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக உள்ளதா?விடுமுறை உல்லாச பயணம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்த போதிலும், 14 சதவீதம் வட்டி கொடுத்து, கார் வாங்குவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகவே, யாவரும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. 

கீழ்மட்ட மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளாவர் என்பது உண்மை. அரசு, இம்மாதிரி சில முடிவுகள் எடுக்கும் போது, இந்த கஷ்டத்தை தவிர்க்க முடியாது. அரசும் சில முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். 

உணவு பொருட்கள், தானியம், பால், இறைச்சிப் பொருட்களின் உற்பத்திக்கு கைகொடுக்க வேண்டும். ஆடம்பர பொருள் வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும். பொது போக்குவரத்து நடைமுறை முற்றிலும் சீர்படுத்தப்பட வேண்டும்.பொது வினியோகத் துறையில் அதிக கவனம் தேவை. வினியோகிக்கும் பொருள்கள், கீழ்மட்ட மக்களை சென்றடைகிறதா என்ற கண்காணிப்பை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும் பட்ச்சத்தில் எதிர்கால பிரச்சனைகளில் இருந்து அரசும் மக்களும் காப்பாற்றப்படுவார்கள்.

Thursday, November 17, 2011

நல்லா இருக்க மாட்டான் தமிழன்!... இப்படிக்கு தன்மானத்தலைவர்..."தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராது' என, அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. உண்மைதான்! தமிழினத்திற்காகப் போராடும், "தமிழினத் தலைவன்' கருணாநிதியை, வீட்டுக்கு அனுப்பி விட்டனரே, இந்த நன்றி கெட்ட தமிழர்கள். 
 
தன் அளப்பரிய சேவையால், தமிழக மக்களை, குறிப்பாக, "குடிமகன்களை' வாழ வைத்த இந்த பெருந்தகையை, தமிழர்கள் புறக்கணித்தது முறைதானா? முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததுமே, மதுவிலக்கை ரத்து செய்து, "குடிமகன்'களை மகிழ்வித்தவர் அல்லவா? இவர் ஏற்றி வைத்த இந்த தீபம், இன்றளவும் அணையாமல், சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறதே, இதற்காகவே இவரை தமிழினம் உள்ளவரை நினைவில் கொள்ள வேண்டாமா? எதைப் பற்றியும் கவலைப்படாமல், அதிகாலை முதல், நள்ளிரவு வரை, "குடிமகன்கள்' ஓயாமல் தம், "கடமையை' செய்ய, அதைக் கண்டு, அவர்கள் வீட்டுப் பெண்கள் இன்றளவும், "ஆனந்தக் கண்ணீர்' வடித்துக் கொண்டிருக்கின்றனரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
இப்படி, கடமையே கண்ணாக, "குடிமகன்கள்' இருந்ததால், இவர்கள் இல்லங்கள், "நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக' செல்வச் செழிப்பில் வளர்ந்து வருகிறதே, அதைத் தான் மறுக்க முடியுமா?"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கிணங்க, இவரது, "நல்' ஆட்சிக்கு, இது ஒன்றே சான்றாகாதா? "தன் மக்கள்' பதவிகளுக்காக, டில்லி சென்று சோனியாவை சந்தித்துப் பேசிய, "தமிழினத்' தலைவர், நம் தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது, அறிக்கைவிட்டு, கடிதம் எழுதி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மூன்று மணி நேர உண்ணாவிரதம் கூட இருந்தாரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
கட்சிக்காக ஓடாக உழைத்து, தியாகங்கள் பல புரிந்த அழகிரி, கனிமொழி, தயாநிதி போன்ற தம் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி கொடுத்து, இவர்கள் மூலம் தமிழகத்தில் பல சேவைகளைப் புரிந்தாரே, அதைத்தான் மறக்கலாமா? தன் பேரன்கள் மூலம், "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்றும், "கிளவுட் நைன்' என்றும், சுந்தரத் தமிழில் பெயர் வைத்து, "வா குவாட்டர் கட்டிங்' என்று, "பண்பாடு' காக்கிற படங்களை எடுக்க வைத்து, தமிழ் சேவை செய்கிறாரே, அதைத்தான் மறக்க முடியுமா?
 
எல்லாவற்றையும் விட, "கையிலே காசு இல்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக, கழகத்தையே காட்டிக் கொடுக்க முனைகின்றனர்' என, தமது கட்சியைச் சேர்ந்தவரை பற்றிக் கூறி, தாங்கள் அடித்த கொள்ளைப் பற்றி, திறந்த மனதோடு ஒப்புக்கொள்கிறாரே, இப்படிப்பட்ட உன்னதத் தலைவரைத்தான் மறக்கலாமா?
 
"நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்' என்று, மேற்சுட்டியவாறு, பல சாதனைகள் புரிந்தவரை நிந்திப்பதுதான் நியாயமாகுமா? "தமிழனுக்குள்ள சாபக்கேடு; எத்தனை முறை குட்டு பட்டாலும் தமிழனுக்கு புத்தி வராது' என, தமிழர்களைப் பற்றி, "புகழ்ந்து' அரசியல் நாகரிகத்தோடு, நற்சான்றிதழ் வழங்கும், இத்தகு சிறப்புக் குரிய தலைவரை, 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரை, ஐந்து முறை முதல்வராக இருந்தவரை, தேசிய அரசியலில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதியை மறக்காமல், இவரிடமிருந்து பாடம் பெற்று, இனியாவது, விழித்துக் கொள்ளுமா தமிழினம்?

இப்படிக்கு...
கழகத்தொண்டன்...

Saturday, November 12, 2011

இந்த சில்லறைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி...


25 பைசா நாணயத்தை, புழக்கத்திலிருந்து அரசே நிறுத்திவிட்டது. பிச்சைக்காரர்கள் கூட, 50 பைசா நாணயங்களை வாங்குவதில்லை. பணப்பரிவர்த்தனை நடக்கும் எல்லா இடங்களிலும், 10.49 ரூபாய் எனில், 10 ரூபாய் எனவும், 10.51 ரூபாய் எனில், 11 என்றும், "ரவுண்ட் ஆப்' செய்யப்படுகிறது. மக்களும் இந்த, "ரவுண்ட் ஆப்' முறையை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர். 

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பிடிவாதமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலையை, அவ்வப்போது கூடுதலாக்கி அறிவிக்கும் போது, பைசா சுத்தமாகவே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் பெட்ரோல் விலையை, 1.82 ரூபாய் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. மக்கள் மீது கரிசனம் இருந்தால், விலையை உயர்த்தி இருக்கக் கூடாது. கரிசனம் இல்லை என்றான பின், அந்த 18 பைசாவில் என்னவாகிவிடப் போகிறது; பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் கூடுதல் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே! 

இனிமேலாவது, ஐ.ஓ.சி., எச்.பி., மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், விலையை கூடுதலாக்கி அறிவிக்கும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று அறிவித்துத் தொலைக்கலாமே! எண்ணெய் நிறுவனங்களின் செவியில் ஏறுமா?

‌பெட்ரோல் வங்கிகளில் பெட்ரோல் போடும்போது இந்த  சில்லரை விஷயம் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் தெரியவில்லை. அங்கு உள்ள மீட்டர்களில் ரூபாய்க்கான அளவு உள்ளதால் பெட்ரோல் போடுவோர்கள் 50 ரூபாய், 100 ரூபாய் எனதான் பெட்ரோல் போடுகின்றனர்.

இனியாவது இந்த பைசா பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமா நாடு..?

Tuesday, November 1, 2011

ஆணவம் வேண்டாம் ஜெயலலிதா அவர்களே...தமிழகம் திமுக-வின் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு அந்த ஆட்சியை தற்ப்போது தங்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதற்க்கு அடுத்து உள்ளாட்சித்தேர்தலிலும் அதே வெற்றி மக்களால் தங்களுக்கு அளிப்பபட்டுள்ளது. இந்த வெற்றியால் தங்களின் கட்சிகாரர்களுக்கு கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி அடைந்துள்ள, பிரமிப்பூட்டும், இமாலய வெற்றியைக் கண்டு, அ.தி.மு.க.,வினர், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பெருமிதமும், உவகையும் அடைவது இயற்கையே; புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்த வெற்றிக்களிப்பு மமதையாக மாறிவிடக்கூடாது. 
 
ஏனெனில், சட்டசபைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வின் படுதோல்விக்கு, வேறு சில வலுவான காரணங்கள் உண்டு. மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின், தி.மு.க., உறுப்பினர்கள் வசூல் வேட்டை, கட்டப் பஞ்சாயத்து என, ஆடிய ஆட்டமும் இத்தோல்விக்கு ஒரு காரணம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. 
 
சட்டசபைத்தேர்தலுக்கு முன், "சென்னையில் தி.மு.க., தோற்றால், அதற்கு கவுன்சிலர்களின் செயல்பாடுதான் காரணமாக இருக்கும்' என, கருணாநிதியே நொந்து போய்ச் சொன்னதை, நினைவில் கொள்ளவேண்டும். 
 
எனவே, இப்போது, அ.தி.மு.க.,வினரும் அதே பாணியில் செயல்பட்டால் ஆபத்து தான். ஆகவே, பொறுப்புணர்வும், கடமையுணர்வும் கொண்டு திறம்படப் பணியாற்றி மக்களைக் கவரவேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...