Thursday, July 26, 2012

வேதனையோடு ஓதுங்கிபோகிறேன்.. ரஜினியின் அதிர்ச்சி பேட்டி..!


என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.

பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.

இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.

நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.

என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.

காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.

சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.

சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.

ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.

8 comments:

  1. rajini has came out fully from the bottom of his heart.....we wish him great health and god speed ......

    ReplyDelete
  2. ரஜினி இஸ் ஆல்வேஸ் சூப்பர் ஹீரோ

    ReplyDelete
  3. அது தானே தலைவரின் பெருந்தன்மை...
    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி சொல்ல உளமாற விரும்பினால், சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்ல வேண்டியவர்களுக்கு, சொல்லிட முன்வருவதுதான் பெருந்தன்மை. ஒதுங்கிப் போவது இல்லை பெருந்தன்மை. இந்த பெருந்தன்மையை எல்லோரிடமும் எதிர்பார்த்துவிட முடியாது, கூடாது என்பதை தலைவர் உணர்த்திவிட்டார்.

    ReplyDelete
  5. நல்ல சொற்பொழிவை அனைவரும் அறிய
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...