Friday, June 14, 2013

போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம்



சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.

தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். 



அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம். 


குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது. 

குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. 

கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.



இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.

படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.



தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.  (Thanks http://tamil.webdunia.com/)

4 comments:

  1. ரொம்ப சரி.. அதுக்கு முன் அப்பா, மாமா லாம் குடிச்சதே தெரியாது. சாராய கடையை நாம் பார்த்தே இருக்க மாட்டோம். ஏரிக்கரையில், ஆற்றங்கரையில் காலி பாட்டில் மட்டுமே நம்ம கண்ணுக்கு தென்படும்.., ஆனா, இப்போ ஊருக்குள்ள, நட்ட நடு கடைவீதியில் கடை இருக்கு.., மளிகைசாமான், பாத்திர கடை, துணி கடை போலவே இதும் அத்தியாவசியமான கடை போலாகிவிட்டது

    ReplyDelete
  2. "நான் குடிக்கிறேன்" என்பது இப்போது ஒரு கௌரவமாக சொல்கிறார்கள்... இவர்களை என்ன சொல்வது...? சாவட்டும் விரைவில்...

    ReplyDelete
  3. When the Govt is selling it, how will you convince anyone that it is not a healthy habit?. Impact of cinema comes later, the foremost is the availability with no concern for public safety and health. GOVT sells it in almost every street, and Police fines the drunk for DUI !!. No one is socially responsible. God save us all.

    ReplyDelete
  4. excellent post...
    good slap for each & every drinkers & govt.
    we must need to shame about this

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...