Sunday, August 4, 2013

அட மானங்கெட்ட அரசியல்வாதிகளே...! ஏன் இப்படி



"மாநிலத்தில், 2003ல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், 40 பேரும், 2008 தேர்தலில், 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, ஒன்பது பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். சிறப்பாகச் செயல்படும், என் அரசை கவிழ்க்க, சதி நடக்கிறது' என, தன் பெருமையை பறை சாற்றியிருப்பவர், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி. 
 
"நம் நாட்டில், மக்கள், பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுகின்றனர். வெளிநாடுகளில், பூச்சிகளையெல்லாம் உண்கின்றனர். நாமும் பூச்சிகளை சாப்பிட்டுப் பழகி விட்டால், விலையேற்றத்தைக் கண்டு, பயப்படத் தேவையில்லை!' -இது, அசாம் முதல்வர் தருண்கோகோய். 
 
"கல்லைத் தான், மண்ணைத் தான், காய்ச்சித் தான் குடிக்கத் தான் கற்பித்தானா?' என, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்தது, இதற்காகத் தானா?
 
 
உணவுக்குப் பதிலாக பூச்சிகளை, இவர் உட்கொள்வாரா? அவர் இப்படி கேட்டிருக்கிறாரென்றால், அதற்குக் காரணம், நாட்டு மக்கள், வாயில்லா பூச்சிகளாய் இருப்பது தான். 
 
இன்னொரு அரசியல்வாதியோ, "நாட்டில் ஏழைகளே இல்லை' என்கிறார். "ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னமோ நடக்குது; மர்மமாயிருக்குது' என்று பாடத் தோன்றுகிறது. 
 
"அப்பழுக்கில்லாத, நேர்மையான ஆட்சியைத் தருவோம்; அனைவரும் கொலை, கொள்ளையில்லாத சமுதாயத்தில் வாழலாம்' என்று கூற வேண்டிய ஓட்டு வங்கிகள், இன்று, கொலைகளுக்கு, ஒப்பீடு முறையை கையாள்வது, காலத்தின் கொடுமை. 
 
"எங்க வீட்டுப் பிள்ளைகளிலேயே, ரொம்ப நல்லவன், வீட்டுக் கூரைக்குத் தீ வைப்பவன் தான்' என்பது போலுள்ளது. தமிழகத்தில், நாளொரு கொலையும், பொழுதொரு கொள்ளையும் அரங்கேறிக் கொண்டிருக்க, தன் முந்தைய ஆட்சியில் நடந்த கொலைகள், சற்று குறைவு தான் என்று சந்தோஷப்படுகிறார், கருணாநிதி. 
 
நாட்டில் நடக்கும் கொலைகளைத் தடுக்க, எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், விகிதாச்சாரப்படி கொலைகளை பட்டியலிட்டுப் பரவசப்படும், வக்கிரபுத்தி கொண்ட பாரத நாடு, பாருக்குள்ளே நல்ல நாடு. 
 
வாழும் உயிர்களுக்கு, வயிற்றுக்குச் சோறிட வக்கில்லாத, வறட்டு ஜம்பம் பேசி; பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ஏழைகளை மேலும் ஏழைகளாக, பரம ஏழைகளாக, மாறச் சொல்லும், பவித்திரமான நாடு. நாள்தோறும் நடக்கும் விபத்துகளை தடுக்க, வகையறியாது, நஷ்ட ஈடு என்ற போர்வையால், நெருப்பை மூடப் பார்த்து; பணமென்னும் பசை கொண்டு, பல்வேறு சட்ட ஓட்டைகளை அடைத்து, தப்பு செய்த பண முதலைகளை, வாழ்வாங்கு வாழவைக்கும் பெருமை மிகு நாடு. 
 
இல்லாத கொள்ளைகளுக்குப் போராடுவதாக நடிக்கும் நடிப்பு; சுதேசிகன் உதவியுடன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, அவற்றை, சாதனையாய் பட்டியலிட்டுக் கொண்டு அதிலேயே, திருப்தியடைந்து கொள்ளும் நாடு. 
 
மொத்தத்தில், பிரிக்க முடியாதது கொலையும், நாடும்; பிரியக் கூடாதது பணமும், அரசியல்வாதியும்; பிரிந்தே இருப்பது சட்டமும், ஒழுங்கும். அய்யகோ... ஆளை விடுங்க... இனி யாராலும் காப்பாற்ற முடியாது பாரத நாட்டை!

1 comment:

  1. இனி யாராலும் காப்பாற்ற முடியாது பாரத நாட்டை!//

    ஏன் இப்படி நெகட்டிவான விஷயத்தையே பாக்கறீங்க? போன முப்பதுவருசத்தோட கம்பேர் பண்றப்போ நாம எதுலயும் முன்னேறலையா? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருந்தும் நம்ம நாடு முன்னேறிக்கிட்டுத்தாங்க இருக்கு? அதப்பத்தியும் கொஞ்சம் எழுதுங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...