Tuesday, December 13, 2011

தமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...



விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்துச் சென்று, தவறிழைத்த காவலர்கள், அவர்களை கதறக் கதற கற்பழித்திருப்பது கொடுமையிலும், கொடுமை. 


இதற்கு முன், வாச்சாத்தியில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த, 17 பெண்கள், வனத்துறை மற்றும் ரெவன்யூ துறையினரால் கற்பழிக்கப்பட்டது நமக்கு தெரியும். இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தற்போது ஜாமினில் வெளியே இருப்பதும் தெரியும். "கண்ணைக் காப்பாற்றும் இமைகள் போல செயல்படுகின்றனர் நம் காவல்துறையினர்' என, ஜெயலலிதா பெருமைப் படுகிறார். 


ஆனால், "பயிரை மேயும் வேலிகள்தான் நாங்கள்' என்கின்றனர், நம் "மதிப்புமிகு' காவல்துறையினர் ! இப்படிப்பட்ட காவல் துறையினருக்குத்தான், "மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் அங்காடிகள் வேண்டும்' என்றும், "ராணுவத்தினரைப் போல், நம் தமிழகக் காவல்துறையினரும், பல பயன்களை பெற வேண்டும்' என்றும் முதல்வர் ஆசைப்படுகிறார்.

ராணுவத்தினர் லஞ்சம் பெறுவதில்லை; கட்டப்பஞ்சாயத்து நடத்தி, யாரிடமும் கமிஷன் வாங்குவது இல்லை. தண்ணி அடித்து விட்டு, ரோட்டில் செல்லும் பெண்களை அழைத்து வந்து அசிங்கப்படுத்தும் கேவலமான செயல்களில் ஈடுபடுவதில்லை. 


நம் காவல்துறையினர் எப்படியெல்லாம் செயல்படுகின்றனர் என்பதை, தமிழ்த்திரைப்படங்கள் தெளிவாக காட்டுகின்றன. "காவல்துறையின் ஈரல்கெட்டுப் போய்விட்டது' என்றார் கருணாநிதி. ஈரல் மட்டுமல்ல, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்தும் கெட்டுப் போயிருக்கின்றன என்பதற்கான அடையாளம் தான், இந்த கற்பழிப்புச் சம்பவங்கள்! 


கற்பை இழந்த வாச்சாத்தி பெண்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் தான் கிடைத்தது. தற்போது, விழுப்புரம் மாவட்ட பெண்கள், தங்கள் கற்பை இழந்ததற்காக, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றிருக்கின்றனர். உண்மையிலேயே, தற்போது கற்பின் மதிப்பு கூடியிருக்கிறது! எத்தனை சட்டங்கள் போட்டாலும், யாரும் திருந்தப் போவது இல்லை. 


சிறையிலிருந்து விடுதலையாகும் குற்றவாளிகள், மனம் திருந்தி வாழ, மனநலம் பேணும் மருத்துவர்களை நியமிக்க உள்ளாராம், நம் தமிழக முதல்வர்! உண்மையில், மனநல வைத்தியம் தேவைப்படுவது குற்றவாளிகளுக்கு அல்ல; இப்போது, காவல்துறையினருக்குத் தான், அது அவசியம் தேவைப்படுகிறது!

5 comments:

  1. பெண்ணென்றாலே இளப்பம்தான். அதிலும் தாழ்ந்த ஜாதின்னால்..., கேட்கவே வேண்டாம்

    ReplyDelete
  2. நல்ல விழிப்புணர்வுப்பதிவு, காவல் துறை !!!!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...