Monday, June 24, 2013

உத்தராகண்ட் பேரழிவு! கடவுளின் செயலா?



பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் கடவுளின் கோபம் என்றும் நாட்டில் அக்கிரமங்கள் பெருத்துவிட்டது, கலி முத்திப்போய்விட்டது என்றெல்லாம் 'அழுகை வேதாந்திகளும்', 'சாமானிய அப்பாவிகளும்' நினைத்துக் கொண்டு இரண்டு ப்ச் ப்ச் கொட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப்ப் போய்விடுவர். இந்திய 'ஆன்மீக கலாச்சாரத்தில்' பேரழிவு குறித்து இருக்கும் அதிகபட்ச பொதுப்புத்தி ஐதிகங்கள் இவை.

அவ்வளவு யாத்ரீகர்களை பத்ரிநாத், கேதார்நாத் 'புனித ஸ்தலங்கள்' ஈர்த்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக வந்து போகும் பக்தர்களுக்கும் அந்த கடவுளர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. அங்கேயே இருப்பவர்கள் மனிதாபிமானத்துடன் வாழவும் அந்தக் கடவுளர்கள் ஒன்றும் செய்யவில்லை. பேரழிவின் விளிம்பில் பயத்திலும், உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க்ம் 'பக்தர்களை' சுரண்டும் கொள்ளைக்கும்பலைத்தான் அந்த 'பகவான்' வளர்த்து விட்டுள்ளார். 

கடவுளை மீறிய சக்தி இருப்பதைத்தான் இதைக் காட்டுகிறது. அதுவும் 40 அடி உயர சிவபெருமான் சிலையின் வாயை அடைத்துச் சென்ற வெள்ளப்பிரவாகம் சிவபெருமான் பார்வதியுடன் குடியிருப்பதாகக் கருதப்படும் இமாலயப் பனிமலைகளின் வீழ்ச்சியையும், மனித மேம்பாட்டுவாத முதலாளிய கொள்ளை அரசியல் கொள்கைகளிகளின் வீழ்ச்சியின் குறியீடாகவும், நோய்க்குறியாகவும் தெரிவது தீர்கமான விமர்சன கண்களூக்கும் அறிவுக்கும் மட்டுமே! மூழ்காதது, மூழ்கடிக்கப்படமுடியாதது என்ற அசட்டுப் பெருமையுடனும், போலி பெருமை வழியும் பக்தகோடிகளின் மழுங்கிப் போன ஆச்சரிய உணர்வையும் எழுப்புவதற்காக எழுப்பப்பட்ட 40 அடி உயர சிவபெருமான் 
சிலை மூழ்கியது எந்த சக்தியின் காரியமோ?


புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்படும் புனித ஜலம் எல்லோர் தலையிலும் தெளிக்கப்படும். இன்று உத்தராகண்டிலிருந்து எந்தப் புனித நீரை எடுத்து வருவர்? சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கோத்ரியே சிவபெருமானை மூழ்கடிக்கப்பட்ட லீலா வினோதம்தான் என்ன?

கடவுளுக்கே இந்த கதியா? என்ற பேரச்சம், உன்னதங்களும் புனிதங்களும் அதன் அச்சமூட்டும் தன்மையுடன் பின்னிப் பிணைந்தவை என்ற அரிய தரிசனத்தை நமக்குக் கொடுக்கும் நிகழ்வோ இது? என்ற கேள்வியும் எழுகிறது. உத்தராகாண்ட் பேரழிவு ஏற்படுத்தும் மன, புத்தி, உணர்வுத் தாக்கங்கள் அதன் உடனடியான கண்ணால் காணக்கூடிய பொருள் மற்றும் உயிர்கள் அழிவினால் ஏற்பட்டதல்ல. 

மீடியாக்களில் காட்டப்பட்டு பிரம்மாண்டமான சிவன் சிலை மூழ்குகிறது என்பது பொதுப் புத்தியின் ஏற்படுத்தும் சொல்லாடல்களின் குறியீட்டு ஒழுங்கினால் ஏற்படும் அச்ச உணர்வே. உணமையான அச்ச உணர்வல்ல. கடவுளின் வரம்புகள் பற்றிய கேள்விகளை இது எழுப்புவதில்லை. மாறாக கலாச்சாரத்தில் ஏற்கனவே கட்டமைத்து வைக்கப்பட்டு நம்மை பின்னிப் பிணைக்கும் சமூகக் கற்பனா வெளியில் ஏற்றப்பட்ட சுமையினால் ஏற்படும் தாக்கமேயன்றி உண்மையான தாக்கம் அல்ல.




நாம் பொதுவாக பிரம்மாண்டம் என்பது அர்த்தத்தை குழப்பிவிடுகிறது, அல்லது மறைக்கிறது என்போம் ஆனால் உத்தராகண்ட் வெள்ளம், சிவபெருமான் சிலை மூழ்கியது அனைத்தும் அச்சமூட்டும் வேறொரு எதார்த்தத்தின் பிரசன்னத்தை மறைக்கிறது சமூகம் அதனைப் பற்றி வைத்திருக்கும் நம்பிக்கைகளும், ஐதிகங்களும் பேரழிவின் பிரசன்னத்தை மறைக்கிறது, தாக்கத்தை மறைக்கிறது. கடவுளை விடவும் சக்தி வாய்ந்த விடயங்கள் உள்ளன என்பதை மறைக்கிறது!! அல்லது நாம் அது போன்ற ஒரு இருப்பை எதிர்கொள்ளத் தயங்குகிறோம்! இப்படித்தான் ஒவ்வொன்றையும் நமது சமூகத்தின் கற்பனை வாயிலாக கற்பனைப் பொருளாக மாற்றிவைத்திருக்கிறோம்.

பிரெஞ்ச் உளப்பகுப்பாய்வு மேதை ஜாக் லகான் கூறும் 'தி ரியல்' என்பது கட்புலன் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டது. நனவிலியுடன் தொடர்புடையது. அதன் மொழியை நாம் நமது அன்றாட இழிமொழியால் மூடி மறைத்து வத்திருக்கிறோம். அல்லது நனவிலியின் இழிமொழியை நம் 'நல் மொழி'-யால் மூடி மறைத்து வைத்திருக்கிறோம்.

ஆகவே எந்த ஒரு பேரழிவின் பின்னாலும் நம்முடைய குறியீட்டு ஒழுங்கு அல்லது கலாச்சாரப் பெட்டகச் சுமை நம்மை அழுத்தி அதன் 'உண்மை' பரிமாணத்தை சந்திக்கவிடாமல் தடுக்கிறது. நாம் தடுத்து வைத்திருக்கிறோம், உண்மையைக் காண மனித குலத்திற்கு தைரியம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. உண்மை இல்லாத கடவுள் உண்மையில் இல்லை! ஹரஹரவென்று கன்னத்தில் போட்டுக்கொள்வதில் உண்மையின் தரிசனம் எப்படிக் கிடைக்கும்? நமது கலாச்சார, மொழி, சொல்லாடல் ஒழுங்கில் உண்மை இல்லை! மாறாக கடவுள் இருக்கிறார். உண்மையில்லாத கடவுள், உண்மையை மறைக்கும் கடவுள் இருக்கிறார்.

இந்த 'உண்மை' தான் இன்று புவி வெப்பமடைதல் என்று பேசப்படுகிறது, வானிலை மாற்றம் என்று பேசப்படுகிறது, காடுகள் அழிப்பு என்று பேசப்படுகிறது, மானுடஸமூக-பொருளாதார-மூலதன-முதலீட்டிய அசுர வளர்ச்சிக்கு கொடுக்கும் விலை என்று பேசப்படுகிறது.

ஆகவே உத்திராகண்ட் பேரழிவு முடிவல்ல ஆரம்பம்! 120 கோடி மக்கள் தொகையில் 20 ௨5 கோடி மக்களுக்கு மின்சாரம் வழங்க, மெகா அணைத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மனிதன் இயற்கையை ரசிப்பவன், அரிய இடங்களின் மீது அதி மோகம் கொண்டவன் என்ற ஒரு விஷயத்தை மூலதனமாக்க பெரும் சாலைகளை இட்டு காடுகளை அழித்து இமாலயப் பகுதிகளின் பனியை உருகச்செய்துள்ளோம். அதன் விளைவுதான் இன்றைய உத்தராகண்டின் வெள்ளக்காடு நிலவரத்திற்கு முக்கியக் காரணம்.

ஒரு வாரம் முன்பே பெரிய அழிவு காத்திருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் ஆயிரக்கணக்கானோர் பத்ரிநாத், கேதார்நாத், உத்தர் காசிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி! பேரழிவு ஏற்பட்டால் எப்படி காப்பாற்றுவது அதற்கான உடனடியான சிந்தனை இல்லை. இமாலயமும், குறிப்பாக உத்திராகண்டும் இதுபோன்ற பேரழிவுகு இலக்காக கூடியதுதான் என்று முன் கூட்டியே நம் 'டெவலப்மென்ட்' பேசும் சிதம்பரங்களுக்கும், மன்மோகஙளுக்கும் தெரியும்.

மகா அணைகளால் நிச்சயம் ஊர் வெள்ளக்காடாகும் அபாயம் என்று தெரிந்தே தெஹ்ரி அணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

உத்தராகண்ட் பேரழிவைக் கண்ட பவுத்த பிட்சு லாப்சங் கியாட்சோ என்பவர் "அணைகளும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களும் உத்தராகண்டை பேரழிவுக்கு இட்டு சென்றுள்ளது" என்று கூறியுள்ளார்.



இன்று உத்தராகண்ட் நாளை வடகிழக்கு மாநிலங்கள் பேரழிவை சந்திக்கவுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட மெகா அணைக் கட்டுத் திட்டங்கள் அங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகள் பேரழ்வின் டைன் பாம் என்றே இயற்கை மீதும் மனிதர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் கூறுகின்றனர்.

மானுட வளர்ச்சித் திட்டங்களினால் வெளியேறும் கரியமிலவாயுவினால் ஏற்படும் வானிலை மற்றத்தில் விண்வெளிக்காற்று மண்டலம் வறண்டு, அதிகபட்ச ஈரப்பதத்தை தன்னுள்ளே தேக்கி வைக்கிறது. இதுதான் கிளவுட் பர்ஸ்ட் என்று அகால வேளைகளில் பேய் மழையாக அவதரிக்கிறது. உத்தராகண்டில் இந்த கிளவுட் பர்ஸ்ட்டுடன் இமாலய பனிமலை உருகுதலும் சேர்ந்து கொண்டுள்ளது. தாங்குமா? இமாலயன் சுனாமி என்றே இன்றைய வெள்ளத்தை அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இமாயலய நதிகளில் இமாயலய அணைகளைக் கட்டுவதை முதைல் தடுத்து நிறுத்தவேண்டும் என்றே ஒட்டுமொத்தமாக கூறுகின்றனர்.

பேரழிவு ஏற்படும்போதாவது அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் ஆனால் வளர்ச்சி எனும் கடவுள் நம் கண்க்ளை மறைக்கிறார். அறிவுக்கண்களை குருடாக்கியுள்ளார்.

தத்துவத்தில் எப்போதும் ஒரு கேள்வி தொக்கி நிற்கும். "ஏன் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, ஏன் எதுவுமே இல்லை என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை?' என்ற கேள்விதான் அது.

இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒன்று அந்த சம்திங் நம்மைப் பின்னிப் பிணைத்திருக்கும் நோய்க்குறியான, நம்பிக்கை எனும் கலாச்சார குறியீட்டு ஒழுங்குதான், நம்முடைய மொழியே நமக்கு எதிரிதான். இங்கு மொழி என்றவுடன் தமிழா, சிங்களமா என்ற ரீதியில் Generic - ஆக புரிந்து கொள்ளக்கூடாது. பொதுவான மொழி நமக்கும் புற உலகத்திற்குமான உறவை, புரிதலை அல்லது புரிதலின்மையை இடையீடு செய்யும் மொழி எனும் கலாச்சார, குறியீட்டு ஒழுங்கைத்தான் இங்கு மொழி என்று குறிப்பிடுகிறோம்.

மூழ்கிய பிரம்மாண்ட சிவபெருமான் சிலை ஒரு எச்சசொச்சமே, பொருள் எச்சசொச்சமே, கடவுள் என்ற ஸ்பிரிட்டோ அல்லது ஏதோவொன்றின் வடிவம் கிடையாது. கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட மானுட செயல்பாட்டின் வியர்த்தத்தின் குறியீடு! ஒன்றுமேயில்லாமல் போகும் என்பதன் Nothingness- இன் குறி.

நாம் அந்த பயங்கரத்தை லக்கான் கூறுவது போல் மழுங்கடிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம், அல்லது மழுங்கடிக்கப்பட்ட உணர்வே அந்தப் பொருள் என்றும் கடவுள் என்றும் கருதுகிறோம்.

7 comments:

  1. நாம் இயற்கையைத்தான் வழிபட்டோம்.சூர்ய பகவன்,வாயு பகவான் ,அக்னி பகவான்,பூமா தேவி,
    வர்ண பகவான் .காலப்போக்கில் இவைகளை மாசுபடுத்தும் நாகரீகம் வந்து விட்டது.தங்கள் கட்டுரை அருமை.எத்தனையோ கோயில்கள் கடலுக்கு இரையாகி உள்ளன.ஜலசமாதி அடைந்துள்ளன.வன மகோற்சவம் கொண்டாடிய நாடு. இன்று ஊட்டி சென்றால் ஒரே கட்டிடங்கள்.அறிவு வளர்ச்சி அழிவு வளர்ச்சியாகிறது.

    ReplyDelete
  2. 100% மனிதர்கள் தான் காரணம்... நீங்கள் சொன்னது போல் இது ஆரம்பம் என்பதை உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும்... சிந்திக்க வேண்டிய கேள்விகளுக்கு நன்றி...

    ReplyDelete
  3. கடவுளும் இயற்கையும் ஒண்ணுதான் சகோ!

    ReplyDelete
  4. பதிவின் முதல் பகுதியில் என்னமோ கடவுள் பற்றிய மூட நம்பிக்கையால்தான் இந்த அழிவு ஏற்பட்டது போல எழுள்ளீர்கள்.
    அதற்கு பதில் சொல்வது போல பிற்பகுதியில் கட்டிடங்கள் கட்டியது,மரங்களை அழித்தது,அணைகள் கட்டியது போன்ற செயல்களால்தான் அது நடந்தது என தங்களது கேள்விகளுக்கு தாங்களே பதிலும் கொடுத்து உள்ளீா்கள்.
    இயற்கையை அதன் போக்கில்தான் செயல்பட விடவேண்டும்.அதை விடுத்து நமது தோதுக்கு அதனை வளைத்தால் இப்படித்தான் நடக்கும்.
    தங்களைப் போன்றவர்கள் இயற்கை என்பதை எங்களை போன்றவர்கள் கடவுள் என்கிறோம்
    .வெள்ளம் வந்த நதிக்கரைகளில் எவ்வளவு ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளார்கள்.அந்த கட்டிடங்கள் எப்படி வெள்ளத்தில் இடிந்து விழுகின்றது.
    நதிகளின் பாதைகளை அடைத்து நாம் செயல்படும் போது அது தன்னுடைய பாதையை அது மீட்டெடுக்க தனது பலத்தைக்காட்டுகிறது.அதன் பிரவாகத்தின் முன் மனிதன் ஒரு துாசு மதிப்பு கூடக் கிடையாது.
    தற்போதைய மனித நாகரீகத்தில் நம்முடைய வசதிக்காக எவ்வளவு துாரம் சுற்றுபுறச்சூழலை மாசுபடுத்தி உள்ளோம்.
    இந்து மத மூட நம்பிக்கைதான் இவ்வளவு பேரழிவைத் தருகிறது மெக்காவின் புனித யாத்தரையின் இறுதி நிகழ்வாக நடக்கும் சாத்தானின் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது எத்துனை ஆயிரம் பேர்கள் இறக்கிறார்கள்.
    அது ஏன்.?
    ஆக மொத்தத்தில் இந்து மதத்தின் மீது ஒரு துவேச உணா்வை வெளிப்படுத்துவது என்பது ஒரு ஃபாசன் ஆகிவிட்டது
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  5. இறைவன் படைப்பில் அழிவு என்பது சமமான சட்டம்.

    சக்திசாலிகளும்,பாக்யவான் என்று யாரையும் படைக்கவில்லை.பயம் சிங்கமானாலும் உண்டு. ஏறும்பானாலும் உண்டு. அனைவருக்கும் இயன்ற அளவு தங்களை காப்பாற்றிக்கொள்ள சக்தி உண்டு.ஒரு வண்டு இறந்ததுபோல் இருக்கும் .நாம் குறை மாயம் என்போம்.இந்த மாயம் முடிவில் அழிவு.இது ஒரு வட்டம்.சுற்று. மாயை உலகம். அழிவு சத்தியம். இது உறுதியானால் நேர்மை விழித்துக்கொண்டிருக்கும்.அறம் செழிக்கும்.வாய்மை ஜீவிக்கும். இல்லையேல் பேரழிவு சுயநலம்,பேராசை,ஆணவம்,காமம் ,நிம்மதியில்லா வாழ்வு .மரணம். இதுதான் உலகம்.

    ReplyDelete
  6. இந்தியாவிற்கு 100 கோடி மக்கள் தொகை தாங்காது. அத்தனை மக்களுக்கும் அடிப்படை வசதிகள் வேண்டுமானால் அணைகள் கட்டப்படுவது தவிர்க்க முடியாது.
    மக்கள் தொகை குறைந்தால் மற்றவை பெருகும்.
    இதே கதிதான் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும், பங்களாதேஷுக்கும், ஶ்ரீலங்காவிற்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...