Saturday, June 15, 2013

மணிவண்ணன் மீது புலிக்கொடி.... ஈழ உணர்வு கொண்ட உன்னத தமிழன்..! இறுதி சடங்கை நடத்தும் சீமான்


மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். 

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். 

அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். 



இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. 

சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். 

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். 

என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார். 



நிறைவேற்றிய சீமான்... 

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார். 

நாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.

4 comments:

  1. சிறந்த படைப்பாளியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. வீரவணக்கம்..வீரவணக்கம்

    ReplyDelete
  3. ஈழம் விரும்பிய உன்னத தமிழனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  4. சிறந்த இயக்குநர், நடிகர். தமிழ் உணர்வாளர், நாத்திகர், ஈழ விடுதலையை ஆதரித்தவர் அன்னாரின் இழப்பு பேரிழப்பே. :(

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...