Wednesday, June 6, 2018

தவிர்க்க முடியாத தமிழ் சினிமா... திரும்பி பார்க்குமா சமூகம்..!

 
தொண்ணூறுகளின் பிள்ளைகள் (90s Kids) என்று ஒரு சொற்றொடர் பரவலாகியிருக்கிறது. எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ பிறந்தவர்கள் இவ்வுலகை அறியத் தொடங்குகிற சிறுவம் அது. 
 
இப்போது அவர்கள் வேலையிலமர்ந்து திருமண அழைப்பிதழில் பெயரேற்றம் பெற்றபடியிருப்பார்கள். அவ்வாறே எண்பதுகளின் பிள்ளைகள் என்று ஒரு சொற்றொடரைக் கூறினால் அதுவே எனக்குச் சிறுவம். தொண்ணூறுகளின் பிள்ளைகளுக்கு அகல்திரைப்படங்கள், 
 
ஷங்கர், இரகுமான், மனீசா, நக்மா, மதுபாலா என்று அவர்களுடைய திரைப்படச் சுவைப்பின் தொடக்கம் இருக்கக்கூடும். எண்பதுகளின் பிள்ளையான எனக்கு இளையராஜா, பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்தினம், ஆபாவாணன், இராதா, அம்பிகா, குஷ்பு என்று திரைப்படச் சுவைப்பின் முகங்கள் அமைந்தன. எம்ஜிஆர் தம்முடைய முதற்படத்தில் அறிமுகமான ஆண்டில் என் தந்தையார் பிறந்தார். நான் எம்ஜிஆரின் முதற்படத்தைப் பார்த்தபோது அவர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்

 
எண்பதுகளின் பிள்ளைகள் இரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் பிரபு பாக்கியராஜ் இராமராஜன் போன்ற நடிகர்களின் விருப்பினராக இருந்தவர்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் அவரவர் வீட்டு மூத்தோர்களின் விருப்புக்குரியவர்கள். 
 
 
 
கறுப்பு வெள்ளைப் படங்கள் என்றால் ஓர் இளக்காரம் தோன்றியிருந்த காலகட்டம் அது. அதனால் பழைய படங்களைப் பார்ப்பதைச் சிறுவர்களாகிய நாங்கள் எட்டிக்காயாகவே கருதினோம். அக்காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஞாயிற்றுக் கிழமைப் படங்கள் அதன் கறுப்பு வெள்ளைப் பழைமைக்காகவே எள்ளி நகையாடப்பட்டதும் உண்டு. வளர்ந்து அறிவு முதிர்ச்சி ஏற்பட்ட பின்னரே கறுப்பு வெள்ளையின் கலைமதிப்பை அறிந்தோம் என்பது கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது.


புதுப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பழைய படங்களும் தொடர்ந்து திரையிடப்பட்டன. மூன்றாம் வகுப்பு படிக்கையில் நான் கடிதங்கள் எழுதவும் அனுப்பவும் பழகியிருந்தேன். என் தாய்மாமனுக்கு எழுதிய கடிதமொன்றில் அனைத்து நலன்களையும் வினவி முடித்து "ஊர்க் கொட்டகையில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பதில் கடிதத்தில் மறக்காமல் தெரிவிக்கவும்" என்று முடித்திருந்தேன். 
 
பதில் கடிதத்தில் "சுமதி என் சுந்தரி" என்ற விடையும் கிடைக்கப்பெற்றேன். ஊர்க் கொட்டகையில் சுமதி என் சுந்தரி ஓடினால், அன்றிரவு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதைத்தான் நாங்கள் பார்த்தாக வேண்டும். இவ்வாறு பழைய படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். அம்மையின் இடுப்புக் குழந்தையாக இருந்தபோது நான் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆட்டுக்கார அலமேலு. இன்னொன்று குடியிருந்த கோயில். இப்போது 
 
 
 
அப்படம் பார்த்த காட்சிகள் மங்கலான அரைநினைவுகளாக இருக்கின்றன. அவ்விரண்டு படங்களும் என்னைக் கவர்ந்தன என்றாலும் குடியிருந்த கோயில் கொண்டாட்டமாகவும் கோலாகலமாகவும் இருந்ததாய் நினைவு. பழைய படங்களின் நீளமான கண்ணீர்க் காட்சிகள் சிறுவர்களுக்குக் கட்டாயம் விளங்கவேண்டும் என்பதில்லையே. இதற்கிடையே "வாழ வைத்த தெய்வம்" என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஓடோ ஓடு என்று ஓடியது. எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. 
 
குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன் படுகின்ற பாடுகளைப் பற்றிய படம் அது. ஜெமினி கணேசன் நடித்தது. பொதுவாக, ஒரு படத்திற்குச் சென்றால் திரையைவிட்டுக் கண்களை விலக்க மாட்டோமில்லையா... வாழ வைத்த தெய்வத்தைப் பார்க்கையில்தான் திரையரங்கை நன்றாகக் கழுத்து திருப்பிப் பார்த்தேன். அன்றுதான் "பழைய படமா... நம்மால் முடியாதடா சாமி... ஆளை விடுங்க..." என்ற மனநிலைக்கு வந்தேன்.

சிறுவத்தின் ஆர்வத்தோடு படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது அவ்வப்போதைய புதுப் படங்களே ஆர்த்தைத் தூண்டின. ஆனால், எல்லாப் புதுப்படங்களும் சிறப்பாக இருக்கவில்லை. அதுபோன்ற களைப்பான வேளையில்தான் தற்செயலாக எம்ஜிஆர் படமொன்றைப் பார்த்தேன். 
 
 
 
ஊரிலிருந்து உறவுகள் வந்திருக்க அவர்களோடு அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு "இரண்டாவதாட்டம்" சென்றோம். "எல்லாரும் படம் பார்க்கப் போறோம்... நீ மட்டும் எதற்கு வீட்டில் தனியாக இருந்துக்கிட்டு... கிளம்பு..." என்று என்னைக் கிளப்பிவிட்டார்கள். அவர்கள் எல்லார்க்கும் அந்தப் படத்தைப் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம். அவர்களுடைய விருப்பத்திற்குரிய நாயகன். முன்பே கேட்டு மகிழ்ந்த பழைய பாடல்கள். ஆனால், அரைகுறை மனத்தோடு விருப்பமில்லாமல் படம்பார்க்கச் சென்ற நான் என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிட்டேன். 
 
படத்தின் விரைவு புதுப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனித்தது. அட... பழைய படங்கள் என்று தள்ளியிருந்தோமே... இவ்வளவு நன்றாக இருக்கிறதே... என்று திகைத்துப் போய்விட்டேன். அந்தப் படம் எம்ஜிஆர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்." நல்லவனும் கொள்ளையனுமாக இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்த அப்படம் பிறமொழிப் படமொன்றின் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். எம்ஜிஆர் படங்களைப்போலவே சிவாஜி படங்களின்மீதும் என் ஆர்வம் திரும்பியது. பாசமலர் போன்ற அழுகைப் படங்களைப் பார்த்து மிரட்சியடைந்திருந்த நான் சிவாஜி படங்களைப் பார்க்காமல் இருந்தேன். தற்செயலாகவே "திருவிளையாடல்" பார்க்க வாய்த்தது. சிறுவத்தின் இளநிலை ஆர்வங்களைத் தாண்டத் தெரியாதிருந்த எனக்குத் திரைச்சுவையின் நுண்மைகள் பிடிபடத் தொடங்கின. 
 
 
 
சிவனின் திருவிளையாடல்களைக் கூறிச்சென்ற அப்படத்தின் முதற்பகுதியாக இடம்பெற்ற "ஆயிரம் பொற்காசுப் படலம்" என்னை மயக்கி ஆட்கொண்டது. மறுநாளே தென்னம்பாளையத்தில் ஒரு மளிகைக்கடையில் திருவிளையாடல் உரையாடல் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். திரைப்படமொன்று அதன் எழுத்துப் படியிலும் தமிழ்ச்சுவை சொட்டும்படி அமைந்திருந்தது என்றால் அது திருவிளையாடல்தான். சிவாஜியின் படங்கள் தமிழ்த்திரைத்துறைக்குக் கிடைத்த பொற்களஞ்சியம் என்று விளங்கியது. அதன்பிறகு அவருடைய படங்களை நான் பார்த்த பார்வையே வேறு. 
 
தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. புதிது புதிதான ஆக்க முறைகள் திரைத்தொழிலில் நுழைந்துவிட்டன. இன்று அதன் வளர்ச்சி விண்முட்டுகிறது. இத்தகைய பெரும்போக்குக்கு இடையே இளைய தலைமுறையினர் பழைய படங்களின்மீது எத்தகைய மனப்பதிவுகளோடு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. புதுப்படங்களில் குவிந்திருந்த என் ஆர்வத்தைத் திரையரங்கில் பார்க்க வாய்த்த பழைய படங்களே மடைமாற்றின. இன்றுள்ளவர்கள் பழைய படமொன்றைத் திரையரங்கில் காண முடியாது. சின்ன திரையில் காணப்படும் பழைய படங்கள் முழுத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. 
 
இளைய தலைமுறையினர் இழந்து நிற்கும் எத்தனையோ அருமைகளில் பழைய படங்களும் அடங்கும். அதற்காக, அவற்றை விட்டு நீங்கக்கூடாது. நம்மையறியாமல் நாமடைய வேண்டியதை இழப்பதாகும் அது. இலக்கியத்தைப் போலவே திரைப்படங்களிலும் பழையதே சிறப்பு. புகழ்பெற்ற பழைய படங்களை எப்படியேனும் தேடிப் பிடித்துப் பாருங்கள் என்பதே என் பரிந்துரை. 
 
Thanks - கவிஞர் மகுடேசுவரன்


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...