கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்?
சற்றே 40 வருடங்களுக்கு பின் நோக்கி பயணித்தால் சில உண்மைகள் தெரியவரும். அப்பொழுது தமிழில் சிவப்பான நிறமும் மென்மையான முக தோற்றமும் உள்ளவர்களே கதாநாயகர்கள்.
தமிழ் இளைஞர்களின் இயல்பான கருப்பான நிறம், வில்லன்களுக்கும் அடியாட்களுக்கும் என ஒதுக்கபட்டது. ரோஸ் நிறத்தில் கார்ன் பவுடரை அப்பி கதாநாயகர்கள் கதாநாயகிகளை லவ்வினர். கருப்பு நிறத்தவர் காதலிக்கவும் ,உயர்ந்த வாழ்வு வாழவும் தகுதி அற்றவர்போன்றே அன்றைய சினிமா காண்பித்தது . கசப்பான உண்மை என்னவென்றால் சினிமாவில் காண்பிப்பதை தான் சமுகம் பின் தொடரும் என்பது தான் .
நிறத்தை பற்றிய தாழ்வு மனப்பான்மை தமிழகத்தில் பரந்து நிறைந்து இருந்தது என்பது உண்மை . கேட்பதற்கு சிரிப்பை தந்தாலும் கருவா பயலே . குழந்தையை தூக்காதடா உன் கருப்பு குழந்தைக்கு ஒட்டிக்கும், மாப்பிள்ள நல்ல சிகப்பு தெரியுமா என கருப்பு தமிழன் கேலி செய்யப்பட்டான்.
சாதாரணமான விசயமாக இது தோன்றினாலும் கருப்பு தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது போன்ற விஷயங்கள் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை .
.
இந்த காலகட்டத்தில் தான் ஒரு கருப்பாய், மிகவும் சிந்திக்காத ,சடேர் என உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட கூடிய சாதாரண தமிழனை பிரதிபலிக்க கூடிய பாத்திரமாக ரஜினி திரையில் தோன்ற ஆரம்பித்தார் .
பிரமாதமான நடிப்பு என்று சொல்லமுடியாது .தன் சக கால ஹீரோவான கமலஹாசனை போன்று அழகும் ,திறமையும் , கிடையாது . இத்தனை நெகடிவ் பாயிண்ட்கள் இருந்தும் ரஜினி பாமர தமிழ் ரசிகனை கவர ஆரம்பித்தார் .
ஆரம்ப கால ரஜினி படங்களில் அவர் ஏற்று நடித்த அடித்தட்டு மனித வேடங்கள் மிக பெரிய ரசிகர் வட்டத்தை சேர்த்தது . "சந்தன மேனி" என பாடல் வரிகள் எழுதிய கவிஞர்கள் , கருப்பு" கன்னம் தொட்டு" என பாடல் எழுத ஆரம்பித்தனர் . திரையில் ரஜினி செய்ததை எல்லாம் தானே செய்தது போல ரசிகன் எண்ணி மகிழ்ந்தான்.
அதற்க்கு பின் வந்த கருப்பு கதாநாயகர்கள் விஜயகாந்த் ,முரளி , முதல் தற்போதைய விஜய் ,விஷால் தனுஷ் வரை பலருக்கும் ரஜினி தான் முன்னோடி . இன்று கருப்பு அழகற்றது என்கிற தோற்ற பிம்பம் மறைந்து விட்டது என்றே கூறலாம் . தான் கருப்பாய் இருக்கிறோம் என்கிற தாழ்வுமனபான்மை மறைந்து கருப்பாய் இருப்பவர்களை பெண்கள் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் .
தற்போதைய தலைமுறைக்கு இந்த விஷயங்கள் தெரியாது . இன்று 40 பிளசில் இருக்கும் பல தமிழ் கருப்பு இளைஞர்களுக்கு தெரியும் . ரஜினி அவர்களின் தன்னம்பிக்கை .
சூப்பர்மேன் , ஸ்பைடர்மேன் ஜேம்ஸ்பாண்ட் போல ரஜினி என்பது தமிழ் இளைஞர்களின் கதாபாத்திரம். அந்த பாத்திரம் தோற்க்க அவரது ரசிகர்கள் விடமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களின் தோல்வி....
சூப்பர்ஸ்டாரின் ரசிகனாய் ஆர்.கே.செந்தில்குமார் (facebook)
No comments:
Post a Comment