Apothecary (2014)
முன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary. ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே!
இந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர். நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார். அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.
நாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.
கனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் ’உலகத்துக்கு’ மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கப் பார்க்கிறார்கள். இறுதியில் ஜெயித்தது யார்? என்பது மீதிக்கதை!
நமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.
மதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு, காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீதி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.
இன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள். இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார். லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.
மேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.
படத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.
சொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள்? அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.
இன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும். கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்துவம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.
****
படத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.
எடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்டை என்கிற வணிக அம்சங்கள் இல்லை. படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு. மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
No comments:
Post a Comment