Thursday, November 17, 2011

நல்லா இருக்க மாட்டான் தமிழன்!... இப்படிக்கு தன்மானத்தலைவர்..."தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராது' என, அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. உண்மைதான்! தமிழினத்திற்காகப் போராடும், "தமிழினத் தலைவன்' கருணாநிதியை, வீட்டுக்கு அனுப்பி விட்டனரே, இந்த நன்றி கெட்ட தமிழர்கள். 
 
தன் அளப்பரிய சேவையால், தமிழக மக்களை, குறிப்பாக, "குடிமகன்களை' வாழ வைத்த இந்த பெருந்தகையை, தமிழர்கள் புறக்கணித்தது முறைதானா? முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததுமே, மதுவிலக்கை ரத்து செய்து, "குடிமகன்'களை மகிழ்வித்தவர் அல்லவா? இவர் ஏற்றி வைத்த இந்த தீபம், இன்றளவும் அணையாமல், சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறதே, இதற்காகவே இவரை தமிழினம் உள்ளவரை நினைவில் கொள்ள வேண்டாமா? எதைப் பற்றியும் கவலைப்படாமல், அதிகாலை முதல், நள்ளிரவு வரை, "குடிமகன்கள்' ஓயாமல் தம், "கடமையை' செய்ய, அதைக் கண்டு, அவர்கள் வீட்டுப் பெண்கள் இன்றளவும், "ஆனந்தக் கண்ணீர்' வடித்துக் கொண்டிருக்கின்றனரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
இப்படி, கடமையே கண்ணாக, "குடிமகன்கள்' இருந்ததால், இவர்கள் இல்லங்கள், "நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக' செல்வச் செழிப்பில் வளர்ந்து வருகிறதே, அதைத் தான் மறுக்க முடியுமா?"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கிணங்க, இவரது, "நல்' ஆட்சிக்கு, இது ஒன்றே சான்றாகாதா? "தன் மக்கள்' பதவிகளுக்காக, டில்லி சென்று சோனியாவை சந்தித்துப் பேசிய, "தமிழினத்' தலைவர், நம் தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது, அறிக்கைவிட்டு, கடிதம் எழுதி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மூன்று மணி நேர உண்ணாவிரதம் கூட இருந்தாரே, அதைத்தான் மறக்க முடியுமா? 
 
கட்சிக்காக ஓடாக உழைத்து, தியாகங்கள் பல புரிந்த அழகிரி, கனிமொழி, தயாநிதி போன்ற தம் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி கொடுத்து, இவர்கள் மூலம் தமிழகத்தில் பல சேவைகளைப் புரிந்தாரே, அதைத்தான் மறக்கலாமா? தன் பேரன்கள் மூலம், "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்றும், "கிளவுட் நைன்' என்றும், சுந்தரத் தமிழில் பெயர் வைத்து, "வா குவாட்டர் கட்டிங்' என்று, "பண்பாடு' காக்கிற படங்களை எடுக்க வைத்து, தமிழ் சேவை செய்கிறாரே, அதைத்தான் மறக்க முடியுமா?
 
எல்லாவற்றையும் விட, "கையிலே காசு இல்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக, கழகத்தையே காட்டிக் கொடுக்க முனைகின்றனர்' என, தமது கட்சியைச் சேர்ந்தவரை பற்றிக் கூறி, தாங்கள் அடித்த கொள்ளைப் பற்றி, திறந்த மனதோடு ஒப்புக்கொள்கிறாரே, இப்படிப்பட்ட உன்னதத் தலைவரைத்தான் மறக்கலாமா?
 
"நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்' என்று, மேற்சுட்டியவாறு, பல சாதனைகள் புரிந்தவரை நிந்திப்பதுதான் நியாயமாகுமா? "தமிழனுக்குள்ள சாபக்கேடு; எத்தனை முறை குட்டு பட்டாலும் தமிழனுக்கு புத்தி வராது' என, தமிழர்களைப் பற்றி, "புகழ்ந்து' அரசியல் நாகரிகத்தோடு, நற்சான்றிதழ் வழங்கும், இத்தகு சிறப்புக் குரிய தலைவரை, 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரை, ஐந்து முறை முதல்வராக இருந்தவரை, தேசிய அரசியலில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதியை மறக்காமல், இவரிடமிருந்து பாடம் பெற்று, இனியாவது, விழித்துக் கொள்ளுமா தமிழினம்?

இப்படிக்கு...
கழகத்தொண்டன்...

6 comments:

 1. //"தன் மக்கள்' பதவிகளுக்காக, டில்லி சென்று சோனியாவை சந்தித்துப் பேசிய, "தமிழினத்' தலைவர், நம் தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது, அறிக்கைவிட்டு, கடிதம் எழுதி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தி, மூன்று மணி நேர உண்ணாவிரதம் கூட இருந்தாரே, அதைத்தான் மறக்க முடியுமா?
  //
  தன் வினை தன்னை சுடும்

  ReplyDelete
 2. தன் வினை தன்னை சுடும்

  than makkal
  than magal

  ReplyDelete
 3. தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராது' என, அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. உண்மைதான்! தமிழினத்திற்காகப் போராடும், "தமிழினத் தலைவன்' கருணாநிதியை, வீட்டுக்கு அனுப்பி விட்டனரே, இந்த நன்றி கெட்ட தமிழர்கள். //

  வீட்டுக்கு மட்டுமா அனுப்பினார்கள் ஹி ஹி ஜெயிலுக்கும்தான்...!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...