Tuesday, July 9, 2013

மாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி செய்யலாமே...!



கேரள மாநிலம் திருச்சூரில், தனியார் பஸ் நடத்துனர், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்ததற்காக, அவரை, மாணவர்களை இனி மேல் தவறாமல் ஏற்றிச் செல்வேன் என்று, இருநூறு முறை, "இம்போசிஷன்' எழுதச் சொல்லி, போக்குவரத்துப் போலீஸ், தண்டனை தந்ததாக குறிப்பிட்டு, இதுபோல, தமிழகத்திலும் பின்பற்றப்படுமா என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார்.

தமிழகத்தில், பஸ் நிறுத்துமிடத்தை விட்டு, சற்று தூரம் போய் நிறுத்துவதும், பயணிகளை ஏற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி, "விர்'ரென்று ஓட்டுவதும் சகஜம். அதுபோல கேரளாவில் நடக்காது. அப்படி நடந்தால், பொது மக்கள் பாடம் கற்பித்துவிடுவர். 

சமீபத்தில், விருத்தாசலம் அருகே, அரசு பஸ், அந்த சாலையில் வராமல் போனதால், தனியார் வாகனத்தில் மாணவர்கள் செல்ல,  அந்த வேன் விபத்துக்குள்ளாகி, பல மாணவர்கள் பலியாயினர். 

அதேபோல், சில மாதங்களுக்கு முன், அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த, நான்கு மாணவர்கள், நின்று கொண்டிருந்த லாரி, குறுக்கே பின்னோக்கி வந்த போது, இடித்து மாண்டனர். 

இதுபோன்ற, பல சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வருகின்றன. இது போன்ற விபத்துகளை தடுக்க, என்ன செய்யலாம் என்பது, பிரச்னையாகவும், கேள்விக் குறியாகவும் இருக்கிறது. இதற்கு மக்களின், மாணவர்களின், விழிப்புணர்வு அவசியம் தேவை. 



மேற்கூறிய அந்த வாசகரின் ஆலோசனையை, தமிழத்திலும் பின்பற்றலாம். மாணவர்களை, தங்கள் பிள்ளைகளைப் போல நினைத்து, ஓட்டுனரும், நடத்துனரும், கடமையாற்ற வேண்டும். இதை அவ்வப்போது நினைவுபடுத்த, அவர்கள் குடும்ப புகைப்படத்தை அவர்களின் இருப்பிடத்தில், மாட்டி வைக்கச் செய்ய வேண்டும். இவை இல்லாமல் பஸ் எடுக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இதனால் விபத்துகளையும் தடுக்கலாம். 

கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்களில், ஏறும் வழி, இறங்கும் வழியில் கதவுகள் உண்டு. அவை, வலிமையான கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும். தாழ்ப்பாள் உண்டு. இவற்றை அடைத்த பின் தான் பஸ் புறப்படும். 

தமிழகத்தில், தற்போது, சொகுசு பஸ் என்று சொல்லி, பல பஸ்களில் கதவுகள் இருந்தாலும், பெரும்பாலான பஸ்கள் திறந்த நிலையிலேயே உள்ளன. இதற்கு கூட்டம் மிகுதியாக இருப்பதே முக்கிய காரணம். எனவே, பஸ்களில் மிதமிஞ்சிய கூட்டத்தை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

1 comment:

  1. ஏக்கப் பெருமூச்சுதான்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...