கார்த்தி நடிப்பில் தொடர்ந்து வெளிவரவிருக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளான திரைப்படங்கள். பிரியாணி பாடல்கள் ஒருபுறம் ரசிகர்களை ஈர்க்க, மறுபுறம் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் விமர்சனத்திற்குள்ளான ஒரு முன்னோட்டன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படி தமிழ்த்திரையுலகில் மீண்டும் பரபரப்பான ஹீரோவாக மாறியிருக்கும் கார்த்தி அடுத்ததாக ‘அட்டக்கத்தி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காளி’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். காளி படம் குறித்து பேசியபோது பா.ரஞ்சித் “வடசென்னை என்றதுமே பழுப்பேறிய கட்டடங்கள், அழுக்கு மனிதர்கள், வன்முறை தோய்ந்த வாழ்க்கை போன்றவை தான் இதுவரை படங்களில் காட்டப்பட்டு வந்துள்ளன. அவை யாவும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
விளையாட்டு, இசைக்கச்சேரி, நடனம், வீரக்கலை என எதுவாக இருந்தாலும் முழு மூச்சாக இருந்து மூர்க்கமான ஊக்கத்துடன் கற்றுக் கொள்ளும் வடசென்னை இளைஞர்களுக்கு குருநாதர்களே கிடையாது. அவ்வளவு கலைகளையும் தங்கள் முயற்சியின் மூலமே கற்றுக் கொள்வார்கள். அப்படி ஒரு வடசென்னை வாலிபன் தான் காளி. அவனும், அவன் குடும்பமும், அவன் சார்ந்த மக்களும், அவர்களின் கொண்டாட்டமும் குதூகலமும் தான் “காளி” திரைப்படம்” என்று கூறியுள்ளார்.
கார்த்தி இதற்கு முன்னர் ரஜினி நடித்த ’நான் மகான் அல்ல’ என்ற திரைப்படத்தின் டைட்டிலில் ஒரு திரைப்படத்திலும், ரஜினி நடித்து பிரபலமாக பேசப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரைக்கொண்ட ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தற்போது மீண்டும் ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ’காளி’ திரைப்படத்தின் டைட்டிலில் நடிக்கிறார். கன்னடம், தெலுங்கு என இரு திரையுலகிலும் பிரபலமான நடிகை கேதரின் தெரசா காளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment