Friday, May 11, 2018

நடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்



இன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாலிகா நாயர், ஷாலினி பாண்டே, இயக்கம் - நாக் அஸ்வின், ஒளிப்பதிவு - டேனி சா-லோ, இசை - மிக்கி ஜெ மேயர், தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ்.


1981ம் ஆண்டு மே 11ம் தேதி... பெங்களூருவில் நடிகை சாவித்திரி கோமாவில் விழுந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரைப் பற்றிய கட்டுரை எழுதப் பணிக்கப்படுகிறார் மக்கள்வானி பத்திரிக்கை நிருபர் மதுரவானி (சமந்தா). முன்பக்க தலைப்பு செய்தி எழுத வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமந்தாவுக்கு கோமாவில் கிடக்கும் ஒரு பழைய நடிகையைப் பற்றி செய்தி சேகரிக்க விருப்பமில்லை. இருப்பினும் ஆசிரியரின் உத்தரவை ஏற்று, புகைப்படக்கலைஞர் ஆண்டனியுடன் (விஜய் தேவரகொண்டா) சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது சாவித்திரியின் வாழ்க்கை... 



முதல் காட்சியிலேயே நான் அசல் சாவித்திரி என அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். குழந்தை சாவித்திரியில் தொடங்கி, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், எங்கெல்லாம் வாய்ப்பு தேடி அழைந்தார், சாவித்திரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, அதை அவர் தக்க வைக்கத் தவறிய கதை, ஜெமினி கணேசனுடனான காதல், புகழின் உச்சி, ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடப்பது, அதில் இருந்து மீண்டு வருவது என ஒரு பெண் நிருபரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.


இந்த படத்தை முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார். 



சிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னோரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் நியாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.


ஜெமினி வேடத்தில் நடித்திருக்கும் துல்லகர் சல்மானும், அப்படியே அசல் ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சாவித்திரியிடம் சொல்வது, திருமணத்துக்குப் பிறகு ஈகோவில் வாழ்வை தொலைப்பது என பின்னியிருக்கிறார் மனிதர். சபாஷ் துல்கர். 


இவர்களைத் தாண்டி படத்தின் அத்தனை பெருமையும் போய் சேர வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளர் டேனி சா-லோவுக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக் ஆகியோருக்கு தான். அவர்களின் அபாராமான உழைப்பு படத்தில் அப்படியே தெரிகிறது. கலை இயக்குனர் ஆவினாஷ் கொல்லாவின் செட் வேலைபாடுகளும் அற்புதமாக இருக்கிறது. விஜயவாஹினி ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, டிராம்ப் என அந்த கால மதராசுக்கு நம்மை அழைத்து சென்றிக்கிறார்.

இந்த படக்குழுவின் கேப்டன் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் பல. இளையதலைமுறையின் பார்வையில் ஒரு அற்புதமான நடிகையின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். ஆனால் தெலுங்கு ஆடியன்சை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருப்பார் போல. 

சாவித்திரி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பாசமலர் படம் தான். ஆனால் ஏதோ ஒரு நகரும் மேகம் போல, மலர்ந்தும் மலராத பாடலின் இரு வரிகளுடன் கடந்து போய்விடுகிறது பாசமலர் படத்தைப் பற்றிய காட்சிகள். அதை கொஞ்சம் அதிகமாக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 


கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம் 'நடிகையர் திலகம்'.  (Thanks Tamil One India)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...