மொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.
இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.
பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிலையில், 17 கோடி வாடிக்கையாளர்களுக்கு சலுகையை நீடித்தது.
இந்நிலையில் பிராட்பேண்ட் சேவையை விரிவு படுத்த ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டே சில குறிப்பட்ட நரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.
ஜியோ பைபரில் இருந்து வீடுகளுக்கு இந்த சேவை இணைப்பு வழங்கப்படுகிறது. அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் உள்ள இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படுகிறது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ள ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிகபட்சமாக 1100 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வ நடைபெறும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment