இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.
இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?
"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலை தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன், இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புக்களை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக் கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு உடனடியாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புக்கள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்." என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:
"சித்த மருத்துவத்தில் இளநீர், 'பூலோகக் கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம் கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன.
ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புக்களைச் சரி செய்யும்.
உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் மூத்திர எரிச்சலைச் சரிசெய்யும். ஏற்படும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. " என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...
No comments:
Post a Comment